கார் ஓடிக்கொண்டிருக்கும்போது, காரிலிருந்து இறங்கி கிகி என்ற பாடலுக்கு நடனமாடி அதை காரை ஓட்டிகொண்டிருக்கும் நன்பர் வீடியோ பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிடுவதுதான் கிகி சேலஞ்ச். இந்த சென்ற ஆண்டில் சமூக வலைதளத்தில் மிக வைரலான ஒரு சேலஞ்ச். அமெரிக்காவில் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் கிகி பாடலுக்கு சாதாரனமாக நடனமாடி வீடியோவாக பதிவிட, அதில் அமெரிக்க நட்சத்திரங்கள் சிலர் நாமினேட் செய்யப்பட்டனர். அவர்களும் அந்த சேலஞ்சுகளை ஏற்றுக்கொண்டு மிகவும் கடினாமான முறையில் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவாக பதிவிட்டனர். அமெரிக்க நடிகர் வில் ஸ்மித் புத்தபேஸ்ட் நகரத்திலுள்ள பெரிய பாலத்தின் மேல் ஏறி இந்த பாடலுக்கு நடனமாடினார். அது மிகப்பெரிய வைரலானது. அதன்பின்தான் அனைவரும் காரிலிருந்து இறங்கி பாடலுக்கு நடனமாடினார்கள்.
அமெரிக்காவில் ஒருவிஷயம் ட்ரெண்டானால் அது கண்டிப்பாக உலகளவில் பிரபலமடைந்து, பலர் அதை பின்பற்றுவார்கள். அப்போது, அப்படிதான் நடந்தது. அமெரிக்காவில் எங்கோ மூலையில் தொடங்கப்பட்ட இந்த கிகி சேலஞ், விஸ்வரூபம் எடுத்து உலகம் முழுவதும் பரவியது. இந்த சேலஞ்சை செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டால்தான் கௌரவம் என்ற அளவுக்கு பார்க்கப்பட்டது. பலர் வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். அதேபோல, அதை செய்ய முயற்சித்தபோது பலர் படுகாயம் அடைந்தனர். சிலர் உயிரை விடும் அளவுக்கு சென்றனர். இதுபோன்று விளையாட்டு வினையான பின்பே அதன் தாக்கம் குறைய தொடங்கியது.
இந்த கிகி சேலஞ்சை தூக்கி சாப்பிடும் விதமாக தற்போது பேர்ட் பாக்ஸ் சேலஞ்ச் என்றொரு விஷயம் அமெரிக்க மக்களிடம் வைரலாகி வருகிறது. கடந்த வருடம் டிசம்பர்- 13ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸில் வெளியாகி, 4.5 கோடி கண்டு கழித்த படம்தான் ‘பேர்ட் பாக்ஸ்’. இந்த படத்தில் பிரபல நடிகை சாண்ட்ரா புல்லக் நடித்திருக்கிறார். இதில் சாண்ட்ரா தனது இரண்டு குழந்தைகளுடன் பாதுகாப்பான இடம் தேடிப் பயணிக்கிறார். கண் திறந்து பார்ப்பவர்களைத் தீய சக்தி அழித்து விடும் என்ற நிலை. இதனால் அவர்கள் மூவரும் கண்களைத் திறக்காமலேயே காடு, மலை, ஆறு தாண்டிப் பயணிக்கின்றனர். இந்த திகில் பயணமே பேர்ட் பாக்ஸ் படம்.
இந்த படத்தை பார்த்தவர்கள், இந்த படத்தில் வருவது போன்று கண்களை மூடிக்கொண்டு வெளியே செல்கின்றனர். சிலர் குழந்தைகளுக்கும் இதுபோன்று கண்களை மூடிவிடுவதால் அவர்கள் கீழே விழுந்து காயப்படுகிறார்கள். சிலர் கண்களை கட்டிக்கொண்டு உயிர்போகும் காரணங்களை செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு நெட்ஃபிலிக்ஸ் எச்சரிக்கை எடுத்துள்ளது.
''நாங்கள் இதைச் சொல்ல வேண்டியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. தயவு செய்து யாரும் பேர்ட் பாக்ஸ் சேலஞ்சை மேற்கொண்டு உங்களைக் காயப்படுத்திக் கொள்ள வேண்டாம். இது எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை. உங்களின் அன்பை மதிக்கிறோம். ஆனால் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை விரும்பவில்லை'' என்று ட்விட்டரில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த விஷயம் அமெரிக்காவில் வைரலாகிவிட்டதால், மேலும் பல நாடுகளில் வைரலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.