Skip to main content

விவசாயிகளுக்கு பட்ஜெட் பலன்கள் சேராமல் தடுக்கும் சக்திகள் - வானதி சீனிவாசன் காட்டம்!

Published on 12/02/2018 | Edited on 13/02/2018

மத்திய பட்ஜெட் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பட்ஜெட். ஆனால், விவசாயிகளுக்கான பலன்கள் அவர்களுக்கு போய்ச் சேராமல் தடுக்க சில சக்திகள் இயங்குகின்றன என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

vanathi

 

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும், அலங்கார பட்ஜெட் என்றும், கடைசி பட்ஜெட் என்பதால் விவசாயிகளின் பக்கம் திருப்பியிருக்கிறார்கள் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது பற்றி பாஜக மாநில பொதுச்செயலளார் வானதி சீனிவாசனிடம் நக்கீரன் இணையதளம் சார்பில் கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர் அளித்த பதில்...
 

பட்ஜெட் என்றாலே அலங்காரம், கவர்ச்சி, இலவசம் என்று பார்த்து பழகியவர்களுக்கு, அடிதட்டு மக்களை நோக்கிய, தொலைநோக்கு பார்வையோடு கூடிய பட்ஜெட் இது என்பதை ஜீரணிக்க முடியவில்லை. பொருளாதார ரீதியாக யாருக்கு உண்மையாகவே உதவி தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசாங்கம் எடுத்திருக்கின்ற பல்வேறு நடவடிக்கைகளுடைய தொடர்ச்சிதான் இந்த பட்ஜெட்.
 

சமூகத்தின் பல அடுக்குகளில் அரசாங்கத்தினுடைய எந்த பலனையும் அனுபவித்திராத, உதவி கிடைக்காத மக்களை நோக்கி இந்த பட்ஜெட் திருப்பி விடப்பட்டிருக்கிறது. ஆக்கப்பூர்வமான சிந்தனைகளில் இருக்கக் கூடியவர்களால் இதனை புரிந்துகொள்ள முடியும்.
 

போன வருடத்திற்கு முந்தைய வருடம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்கான பட்ஜெட்டாக இருந்தது. அதனால்தான் நபார்டு வங்கியின் மூலமாக 2 ஆயிரம் கோடி அளவுக்கு கொடுத்த உதவியில் தமிழ்நாடு முழுவதும் 100 கோடி மதிப்பில் ஏரி, குளங்கள் ஓரளவு சீரமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான முன்னேற்றத்தை இந்த அரசு கவனத்தில் கொண்டுள்ளது. அவர்களுக்கான இ நாம் திட்டம், தங்களுடைய விளை பொருட்களை இந்தியாவில் எந்த இடத்தில் விலை அதிகமாக கிடைக்கிறதோ அங்கு விற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்ற திட்டங்களையெல்லாம் இந்த அரசுதான் செய்கிறது.
 

50 ஆண்டு காலமாக விவசாயத்தை புறக்கணித்ததன் விளைவை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இதனை மாற்றுவதற்கான மிகப்பெரிய ஒரு முயற்சியில் இந்த அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உரங்கள் பற்றாக்குறை என்பது இல்லவே இல்லை என்கிற நிலை வந்துள்ளது. நீர்வாழிப்பாதைகளை இணைப்பதன் மூலம் ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளேயும், நதிகள் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ளுர் நதிகளை இணைப்பதற்கான மிகப்பெரிய முயற்சிகள் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு தேவை அவர்களுடைய விளைப்பொருள்களுக்கான நல்ல விலை. அதற்கு ஆன் லைன் சந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
 

ஆனால் விவசாயிகளிடம் இது சென்றடையாமல் பார்த்துக்கொள்வதற்கும் ஒரு சில சக்திகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இடைத்தரகர்களாக இருந்தவர்கள், விவசாயிகளின் வயிற்றில் அடித்து பிழைப்பு நடத்தியவர்கள், ஏழைகளின் பெயரைச் சொல்லி சலுகைகளை அனுபவித்தவர்களால் இந்த அரசாங்கம் ஒவ்வொரு தனிப்பட்ட நபராக கண்டறிந்து உதவி செய்வதை சகித்துக்கொள்ள முடியவில்லை என்றார்.