தமிழகத்தின் முதல் உறுப்புக்கல்லூரி என்ற அந்தஸ்து இருந்தாலும் ஆளும் தரப்பினரின் அலட்சியத்தால் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்ணிலேயே, மேட்டூர் அரசுக்கல்லூரி கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சேலம், ஓமலூர் பிரதான சாலையில் கடந்த 1998ம் ஆண்டு பெரியார் பல்கலை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பெரியார் பல்கலையை ஈரோடு மாவட்டத்தில் தொடங்கும் திட்டமே இருந்தது. அப்போதைய திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மேற்கொண்ட முயற்சியால், சேலத்தில் இந்தப் பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட்டது.
இந்தப் பல்கலையின் நேரடி நிர்வாகத்தின் கீழ், கடந்த 2006ம் ஆண்டு மேட்டூரில் உறுப்புக்கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டது. பல்கலைக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் உறுப்புக்கல்லூரியும் இதுதான்.
இதற்காக மேட்டூர் நான்கு ரோடு அருகே 15.75 ஏக்கர் பரப்பளவில் புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, அந்த இடத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் கலை, அறிவியல் கல்லூரிக்கான கட்டடங்கள் கட்டப்பட்டன.
இதற்கிடையே, மேட்டூரைச் சேர்ந்த ஒரு பிரிவினர், கல்லூரிக்காக கையகப்படுத்தப்பட்ட புறம்போக்கு நிலத்தில் காலங்காலமாக விவசாயம் செய்து வருகிறோம். அதனால் அந்த நிலத்தை நாங்களே சுவாதீனம் செய்து கொள்ள பட்டா வழங்கிட வேண்டும் என்றும், அதுவரை புதிய கட்டடங்கள் ஏதும் கட்டக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புதிய கட்டடங்கள் கட்ட தடை விதித்தது.
தனிநபர் நலனா? மாணவர்கள் எதிர்காலமா? என்ற கேள்வி எழுந்தபோது, கல்வி நலனையே 'டிக்' செய்தது முந்தைய திமுக அரசு. தடை உத்தரவு அமலில் இருக்கும்போதே, கல்லூரிக்கான கட்டட வேலைகளை ஜரூராக முடித்து, 2006ம் ஆண்டில் பயன்பாட்டுக்கும் கொண்டு வந்தது. அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கூட இன்னும் நிலுவையில் உள்ளது.
கடந்த 2007ம் ஆண்டில், முதல்கட்டமாக பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.காம்., பி.எஸ்சி., கணினி அறிவியல், புவியமைப்பியல், கணிதம் ஆகிய ஏழு பாடப்பிரிவுகளுடன் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. அதன்பின், முதுகலையில் எம்.காம்., என்ற ஒரே ஒரு துறை மட்டும் தொடங்கப்பட்டது.
இக்கல்லூரிக்குப் பிறகு தொடங்கப்பட்ட பென்னாகரம் உறுப்புக் கல்லூரியில் முதுகலையில் எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., பாப்பிரெட்டிப்பட்டி உறுப்புக்கல்லூரியில் எம்.ஏ., தமிழ், எம்.ஏ., ஆங்கிலம், எம்.எஸ்சி., கணிதம் ஆகிய மூன்று துறைகள் செயல்பட்டு வருகின்றன. கடைசியாக முதல்வரின் சொந்த தொகுதியான எடப்பாடியில் தொடங்கப்பட்ட உறுப்புக்கல்லூரியில் கூட வழக்கமான இளங்கலை துறைகளுடன் எம்.காம்., எம்.எஸ்சி., கணிதம், எம்.ஏ., ஆங்கிலம் ஆகிய மூன்று முதுகலை துறைகள் செயல்படுகின்றன.
ஆனால், முதன்முதலில் தொடங்கப்பட்ட மேட்டூர் உறுப்புக்கல்லூரியில் மட்டும் முதுகலையில் ஒரே ஒரு துறை மட்டுமே இன்றும் தொடர்கிறது.
இது ஒருபுறம் இருக்க, கல்லூரியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்படாததால் எந்த திசைகளில் இருந்தும் கல்லூரிக்குள் நுழையும் சூழல் உள்ளது. சுற்றுவட்டார கிராம மக்கள் ஆடுகள், மாடுகளை மேய்க்கும் மேய்ச்சல் நிலமாக மேட்டூர் கல்லூரி நிலத்தை பயன்படுத்தி வருகின்றன.
மேட்டூர் சுற்றுப்புறத்தில் இருந்து வரும் ரோமியோக்கள், கல்லூரியைச் சுற்றிலும் உள்ள பனைமரத்தடியில் அமர்ந்து மதுபானங்கள் அருந்தும் திறந்தவெளி 'பார்' ஆகவும், போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் தலமாகவும் மாற்றிவிட்டனர். மைதானத்தில் எங்கு பார்த்தாலும் உடைந்த மதுபாட்டில்கள், காலியான தண்ணீர் பாக்கெட் உறைகள், போதை வஸ்து உறைகள் கிடக்கின்றன. முன்பெல்லாம், கல்லூரி மைதான புதர் ஓரங்களில் இருந்து ஏராளமான ஆணுறைகள், சானிட்டரி நாப்கின்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறுகின்றனர் அப்பகுதியினர்.
நிலைமை தாறுமாறாக சென்ற பிறகே, தாமதமாக சுதாரித்துக்கொண்ட கல்லூரி நிர்வாகம், ஓரிரு காவலாளிகளை நியமித்து மைதானத்தைக் கண்காணிக்கும் வேலைகளில் கவனம் செலுத்தியது.
அங்கு கால்நடைகளை மேய்த்து வந்த சிலரிடம் கேட்டபோது, ''சாயங்காலம் ஆனால் இந்த பகுதியில உள்ள பசங்க, அப்புறம் இந்த காலேஜ்ல படிக்கிற பசங்களேகூட இங்க மரத்தடியில வந்து தண்ணீ அடிக்கிறாங்க. இதையெல்லாம் கேட்டால் எங்களையே கொன்னுபுடுவோம்னு மிரட்டுறாங்க. அதனால நாங்களும் இப்ப எதையும் கண்டுக்கறதில்ல.
இல்லேனா, இங்க ஆடு, மாடுங்கள மேய்க்க விடாமல் பண்ணிடுவோம்னு மிரட்டினாதால நாங்களும் எதுவும் கேட்டுக்கறதில்ல. குடிபோதையில சில பேரு இங்குள்ள ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் கல்லால உடைச்சிட்டாங்க. ஒண்ணுரெண்டு வாட்ச்மேனுங்க இருக்காங்க. ஆனால், இவ்வளவு பெரிய இடத்துக்கு அவங்க மட்டும் போதாது,'' என்றனர்.
பெரியார் பல்கலை பேராசிரியர்கள் நிர்வாகம் தரப்பில் பேசினோம்.
''முந்தைய திமுக ஆட்சியில்தான் மேட்டூர் உறுப்புக்கல்லூரி தொடங்கப்பட்டது. அப்போது அந்த தொகுதியில் இருந்த கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சிலரை அதிமுகவினர் தூண்டிவிட்டு, கல்லூரிக்கு எதிராக வழக்கு தொடர வைத்தனர்.
கடந்த 2011, 2016 என தொடர்ச்சியாக இரண்டு முறை அதிமுக ஆட்சிக்கு வந்தும்கூட, மேட்டூர் கல்லூரி நிலம் தொடர்பாக எதிர்தரப்பினர் பெற்ற தடை ஆணையை உடைக்க, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் பின்னால் சாதி பாசமும், சாதி அரசியலும்தான் ஒளிந்திருக்கிறது.
அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது யாரை தூண்டிவிட்டு வழக்குப் போட வைத்தார்களோ அவர்கள் பெற்ற தடை ஆணையை உடைக்க இப்போதுள்ள அரசாங்கம் கொஞ்சம்கூட முயற்சி எடுக்கவில்லை.
இந்த வழக்கில் சேலம் மாவட்ட நிர்வாகமும், பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் தங்களை ஒரு பிரதிவாதியாக இணைத்துக்கொண்டு தடை ஆணையை உடைக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நேரம் இக்கல்லூரி பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கும்,'' என மேட்டூர் கல்லூரி விவகாரத்தின் பின்னணியில் உள்ள சாதி அரசியலையும் கூறினர்.
மற்றொரு தரப்பினர், ''மேட்டூர் தொகுதியின் இப்போதைய எம்எல்ஏ செம்மலைக்கும், இந்த மண்ணின் மைந்தரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம்தான். ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து கொண்டு எடப்பாடிக்கு எதிராக தீவிரமாக களமாடியவர்களில் செம்மலையும் ஒருவர்.
அதனால்தான் இந்த தொகுதியில் எந்த வித வளர்ச்சிப் பணிகளும் பெரிதாக நடக்கவில்லை. மேட்டூர் உறுப்புக்கல்லூரி வளர்ச்சிக்கும் செம்மலையால் எதுவும் செய்ய முடியவில்லை. மேட்டூரில் அதிகளவில் இருக்கும் எடப்பாடியின் ஆதரவாளர்கள், செம்மலைக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு தருவதில்லை,'' என்றும் கிசுகிசுத்தனர்.
இது தொடர்பாக மேட்டூர் உறுப்புக்கல்லூரி முதல்வர் மருதமுத்துவை நேரில் சந்தித்துப் பேசினோம்.
''மேட்டூர் உறுப்புக் கல்லூரி முதல்வராக கடந்த 2014ல்தான் பணியில் சேர்ந்தேன். அதற்கு முன்பு இருந்தே கல்லூரி நிலம் தொடர்பாக தடை ஆணை அமலில் இருக்கிறது. அதனால்தான் புதிய கட்டடங்கள் எதுவும் கட்ட முடியாததால், புதிய பாடப்பிரிவுகளையும் தொடங்க முடியவில்லை. முதல்வருக்கென தனி கட்டடம் கட்ட முடியாததால்தான் நானே, துறைத்தலைவருக்கான அறையில் உட்கார்ந்து இருக்கிறேன்.
புதிதாக எம்.ஃபில்., துறையும் தொடங்கப்பட்டு உள்ளது. உள்ளூர் மக்கள் சிலர் இங்கு வந்து ஆடு மாடுகளை மேய்க்கின்றனர். வாட்ச்மேன்களை நியமித்து கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். எதிர்தரப்பினர் பெற்ற தடை உத்தரவை எதிர்த்து, பெரியார் பல்கலை நிர்வாகம் தங்களையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்து வழக்கை நடத்தலாம் என்று ஆலோசித்து வருகிறோம்.
இதற்கு மேல் ஏதாவது விவரம் வேண்டுமானால் நீங்கள் பல்கலை பதிவாளரைத்தான் கேட்க வேண்டும். பத்திரிகையாளர்களிடம் பேசக்கூடாது என்று துணை வேந்தர் உத்தரவிட்டுள்ளார். இப்போதைக்கு என்னால் இவ்வளவுதான் சொல்ல முடியும்,'' என்றார்.
இதுகுறித்து மேட்டூர் அதிமுக எம்எல்ஏ செம்மலையிடம் கேட்டபோது, ''நீங்கள் சொல்லித்தான் மேட்டூர் உறுப்புக் கல்லூரியில் அப்படியொரு பிரச்னை இருப்பதே தெரிய வருகிறது. எனக்கு ஓட்டுப்போடாத மக்கள் என்னிடம் உதவி கேட்க வர தயங்குகின்றனர். கட்சியினரும் ஒத்துழைப்பு தருவதில்லை. நான் மட்டும் என்ன செய்ய முடியும்?.
காவலர் பயிற்சிப் பள்ளியிலும் சில பிரச்னைகள் இருப்பதாகச் சொன்னார்கள். வரும் சனிக்கிழமை மேட்டூர் உறுப்புக் கல்லூரி, காவலர் பயிற்சிப் பள்ளி இரண்டு இடங்களிலும் நேரில் சென்று ஆய்வு செய்துவிட்டு, உரிய நடவடிக்கைகளை எடுக்கிறேன்,'' என்றார் அதிரடியாக.
சாதி அரசியலா? மாணவர்கள் நலனா? என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?