ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய ஆற்றல் வாய்ந்தது அரசியல். மக்களின் அன்றாடத் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆட்சி செய்யும் அரசை மக்கள் கொண்டாடுவர். மாறாக, அவர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் சூழலில், அவர்களுடைய அடிப்படைத் தேவைகளுக்கும் போராடும் நிலை ஏற்பட்டால் மக்கள் எழுச்சி ஏற்பட்டு புரட்சி வெடிக்கும். இப்படிப்பட்ட சூழல்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திச் சரியாக வழிநடத்தத் தெரிந்தவரை அந்தச் சமூகம் தலைவராக ஏற்றுக் கொள்ளும். அப்படி வாழ்வியலிலும், அரசியலிலும் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
அதனால்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,
'தொண்டு செய்து பழுத்த பழம்;
தூய தாடி மார்பில் விழும்;
மண்டைச் சுரப்பை உலகு தொழும்;
மனக் குகையில் சிறுத்தை எழும்:
அவர்தாம் பெரியார்!’
-என்று, பெரியாரைத் தனது கவிதைத் தோள்களில் வைத்து உயரே தூக்கினார்.
இவருக்கு முன்னரும் சீர்திருத்தவாதிகள் இருந்தனர் என்றாலும், அவர்கள் ஆன்மிகத்திலிருந்து கொண்டு முற்போக்கு பேசினர். அதனால் அது தோற்றுப்போனது என்று பெரியார் முழுமையாக நம்பினார். சித்தர்களும், வள்ளலாரும் கூறிய சீர்திருத்த கருத்துக்கள் பக்தி என்ற போர்வைக்குள் அடங்கிப்போயின. முடைநாற்றம் வீசும் மூடப் பழக்க வழக்கங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ‘சுயமரியாதை’ என்ற போர்வாளைக் கொண்டுவந்து தருகிறார் பெரியார். பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட பலரும் அவரின் நெருக்கமான தொண்டர்களாயினர். எனினும் பெரியார் கருத்துக்கு மாறாக, ஆட்சியில் அமர்ந்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்ற பேரறிஞர் அண்ணாவையும், ஐயாவின் கரம் பிடித்து நடந்த தொண்டர் என்றே தமிழகம் குறித்து வைத்திருக்கிறது. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் சமூக சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கையைக்களை எடுப்பது, பெண் விடுதலை போன்றவற்றை நடைமுறைப்படுத்த தீவிரமாகக் களப்பணி ஆற்றியவர்கள். அவர்கள் இருவரும் இதே செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாதிக்கு எதிராக களமாடியவர்கள் என்ற போதும், சாதிய மாநாட்டில் இருவரும் சந்தித்துக் கொண்டது காலத்தின் விசித்திரம்.
எந்தச் சாதிய ஏற்றத் தாழ்வுக்கு எதிராகக் குரல் கொடுத்தனரோ அதே சாதிய மாநாட்டில் கலந்து கொள்ளும் நிலையில் ஒருவரையொருவர் 1934-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி, திருப்பூரில் நடந்த செங்குந்தர் மகாஜன சங்க மாநாட்டுக் கூட்டத்தில் முதன்முறையாகச் சந்தித்துப் பேசிக்கொண்டனர். ஐயாவின் கருத்தால் அண்ணா ஈர்க்கப்பட்டார் என்றால் அண்ணாவின் பேச்சில் பெரியார் மயங்கினார் என்றே சொல்லவேண்டும். இன்று திருப்பூர் ரயில் நிலையத்தில் ஒரே பீடத்தில் தோழமையுடன் நிற்கும் பெரியார் அண்ணாவின் முழு உருவ வெண்கலச் சிலைகள், அவர்கள் அங்கே முதன் முதலில் சந்தித்துக் கொண்டதன் சாட்சியாக நிற்கின்றன. சாதி கூடாது என்று எதிர்த்தவர்கள் சாதிய மாநாட்டில் கலந்து கொண்டதை எப்படிப் பார்ப்பது என்ற கேள்வி எழும்.
அன்றைய சாதிய மாநாடுகள் குறிப்பிட்ட சாதிகளின் பெருமை பேசும் மாநாடுகளாக இல்லாமல் மக்களின் முன்னேற்றத்திற்கான வழிகளை ஆராயும் நோக்கத்தில் நடத்தப்பட்டன என்ற புரிதல் இருக்கும் பட்சத்தில் இந்தக் கேள்வி அர்த்தமற்றது என்பது விளங்கும். அதுபோல, கடவுள் கொள்கையை மறுக்கும் பெரியார்தான் அனைத்துச் சாதியினரும் கோயிலுக்குள் செல்லத் தடை விதிக்கக்கூடாது என்றும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கு முட்டுக்கட்டை போடக்கூடாது என்றும் போராடினார். இந்தப் போராட்டங்கள் சாதிய ஏற்றத் தாழ்வை மாற்றிச் சமத்துவ சமுதாயம் மலர வழிசெய்தன. இதனால் தமிழக மக்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதி அடையாளங்களை முற்றிலுமாக நீக்கிவிட்டனர். மற்ற மாநிலத்தவர் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் சாதிய அடையாளத்தைப் போட்டுத் தங்கள் மேட்டி மையைக் காட்டுவதைப் பார்க்கும்போது தமிழகத்தில் விதைக்கப்பட்ட பெரியாரிய சிந்தனையின் வீரியத்தை உணர்ந்து கொள்ளலாம்.
- முனைவர் இரா. மஞ்சுளா