Skip to main content

மோடி கும்பிட்ட முக்தி நாதர், முக்தி கொடுப்பாரா?

Published on 13/05/2018 | Edited on 13/05/2018


பிரதமர் மோடியின் அரசியல் ஸ்டண்ட் வித்தியாசமானது. ஆண்டு முழுக்க வெளிநாடுகளிலேயே சுற்றிக் கொண்டிருப்பார். உலக நாடுகளின் தலைவர்களோடு கட்டிப்பிடித்து கலந்து பேசி எதையோ சாதிப்பதைப்போல சீன் போடுவார்.

ஆனால், இதுவரை அவர் படைத்த சாதனைகளின் பட்டியலை கேட்டால் வாயைத் திறக்கமாட்டார். தன்னை கேள்விகளுக்கு அப்பாற்பட்டவராக நினைக்கிறாரா? அல்லது தான் மட்டுமே கேள்வி கேட்க உரிமை பெற்றவராக கருதுகிறாரா என்பதெல்லாம் இதுவரை யாராலும் கண்டறிய முடியாத புதிர்களாக இருக்கின்றன.

 

 

 

Modi

 

இதுவரை அவர் யாருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்வதே இல்லை. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை. நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு மக்கள் பிரதிநிதிகளின் கேள்விகளுக்குக் கூட பதில் சொன்னதில்லை.

 

திருவிளையாடல் படத்தில் சிவனை நம்பாத தருமி, அவரிடம் கேள்விகளை கேட்பார். தனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும் என்பார். அதுபோல, பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் தனக்கு முந்தைய காங்கிரஸை மட்டுமே குறைகூறிக்கொண்டு, அவர்களிடமே கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

 

மாறாக, நான்கு ஆண்டுகளில் நீங்கள் செய்தது என்ன என்று காங்கிரஸ் கேட்கும் கேள்விகளுக்கு மோடி பதிலே சொல்வதில்லை. அரசு வாங்கப்போகிற ராணுவ விமானம் ஒன்றின் விலையைக்கூட சொல்ல மறுக்கிறார் மோடி. அதற்குபதிலாக கேள்வி கேட்டவர்களைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, கேள்வி கேட்டவர்களை திசைதிருப்புவதே அவரது பாணியாக இருக்கிறது.

 

 

 

அரசியல் சட்டத்திற்கோ, தேர்தல் விதிமுறைகளுக்கோ பிரதமர் என்ற வகையில்கூட அவர் மதிப்பளிப்பதில்லை. குஜராத் தேர்தலில் வாக்களித்த பிரதமர், அறிவிக்கப்படாத பேரணியை நடத்தினார். அன்று முழுவதும் தொலைக்காட்சிகளில் அவருடைய அந்த பேரணி, பாஜகவுக்கு மறைமுகப் பிரச்சாரமாக அமைந்தது. அதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

 

இதோ நடந்துமுடிந்த கர்நாடகா தேர்தலில் மோடி அள்ளிவிட்ட பொய்களுக்கு கணக்கே இல்லை. அத்தனை பொய்களும் ஆதாரத்துடன் மறுக்கப்பட்டு மோடியின் முகமூடி கிழிக்கப்பட்டது. ஆனாலும், அதுகுறித்து மோடி கவலைப்படாமல், அடுத்த பொய்க்கு தாவி தன்னை யாரும் மிஞ்சமுடியாது என்று சவால்விட்டார்.

 

தேர்தல் முடிந்ததும் என்ன ஸ்டண்ட் அடிப்பார் என்று எதிர்பார்த்தால், தேர்தல் தினத்தன்று நேபாளத்துக்கு போய் அங்குள்ள மிகப்பழமையான முக்திநாதர் கோவிலில் பூஜை வழிபாடு செய்தார். பிரதமராக இருப்பவரின் பயணம் மீடியாக்களில் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் என்பதை புரிந்துகொண்டு, வாக்குப்பதிவு நாளில் தன்னை ஒரு இந்துமதப் பற்றாளனாக, பக்தியாளனாக காட்டிக்கொள்ள மோடி இதை பயன்படுத்தினார். இதுவும் மறைமுகமான பிரச்சார தந்திரம் என்றே காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

 

 

 

சரி, முக்திநாதர் என்றால், இந்த வாழ்க்கையின் முடிவைக் கொடுப்பவர் என்று அர்த்தம். இறைவனோடு கலப்பதையே முக்தியடைதல் என்று கூறுகிறார்கள். அப்படியென்றால், மோடியின் பொய்களுக்கும், அட்டகாசத்திற்கும், அடாவடிகளுக்கும் முக்திநாதர் முற்றுப்புள்ளி வைப்பாரா? பாஜகவின் அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவாரா என்று சமூக வலைத்தளத்தில் மிகுந்த ஆர்வத்துடன் விவாதிக்கிறார்கள்.

 

எப்படியோ, வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்து ஜெயித்துவிட்டு, முக்தி நாதர் அருளால் ஜெயித்தோம் என்று பீலா விடாமல் இருந்தால் சரி.