“இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் விமர்சனங்களை நான் எப்போதும் வரவேற்கிறேன். நாடு நன்மை அடையும் வகையில் விமர்சிப்பவர்களை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்” 2023-2024 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பேசிய வார்த்தைகள் இவை.
2002ம் ஆண்டு நரேந்திர மோடி முதல்வராக ஆட்சி செய்த குஜராத்தில் பயங்கர கலவரம் ஏற்பட்டு, அம்மாநிலத்தில் பல உயிர்கள் பலியாகி நாடே பெரும் அச்சத்தில் இருந்தது. இது தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டு ஒரு ஆவணப் படத்தைத் தயாரித்து இந்த ஆண்டு (2023) ஜனவரி மாதத்தில் இரண்டு பாகங்களாக வெளியிட்டது.
இதற்கு பாஜக மற்றும் அதன் ஆதரவு தரப்புகளில் இருந்து, பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டி ஆவணப்படம் தயாரித்து நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக பிபிசி திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதேபோல், அந்த இரண்டு பகுதி ஆவணப்படத்திற்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடைகளை மீறி கேரளா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அந்த ஆவணப்படம் பல்வேறு அமைப்புகளால் திரையிடப்பட்டது. அப்படி திரையிடப்பட்ட இடங்களில் உடனடியாக நிறுத்தப்பட்டு அந்த நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டன. இது எல்லாவற்றுக்கும் மேலாக, ‘பி.பி.சி - இந்தியா’வுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஆவணப்படத்திற்கு தடை, செய்தி நிறுவனத்திற்கே தடை வேண்டும் என ஒரு பக்கம் ஆதரவாளர்கள் வேலை செய்து வர, நேற்று டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீரென சோதனையில் ஈடுபட்டது. இதற்கு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், விமர்சகர்களும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயகத்திற்கும் பத்திரிகை ஊடக சுதந்திரத்திற்கும் இந்தியாவில் இடமில்லை என்பதை உலகிற்கு பறைசாற்றிய பாஜக அரசு. சுதந்திரமாக ஜனநாயக முறைப்படி விமர்சனங்கள் வைப்பதை அச்சுறுத்தும் இந்த நடவடிக்கையை நாங்கள் கவலையுடன் பார்க்கிறோம் என சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக நக்கீரனிடம் பேசிய அவர், “ஹிண்டன் பர்க் அறிக்கையின்படி பங்குச் சந்தையில் நடந்த பல்வேறு முறைகேடுகள் வெளியாகியுள்ளது. 2014ல் பணக்காரர்கள் பட்டியலில் 609வது இடத்தில் இருந்த அதானி 2022ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்தார். இந்திய ரூபாய் மதிப்பீட்டின்படி அதானியின் நெட் வர்த் ரூ. 11 இலட்சம் கோடி. கடந்த டிசம்பர் மாதம் ரூ. 12,40,353 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இன்று ரூ. 4,33,297 கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவாமல் மேலும் அவர்களை வஞ்சிக்கும் வகையில் அதானி, அம்பானி போன்றவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யும் அரசாக இந்த அரசு உள்ளது. கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு பல இலட்சம் கோடிகளை கடனாக கொடுத்துவிட்டு, அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை என்றால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
மோடி, வெளிநாடுகளில் இருக்கும் நம் கருப்புப் பணத்தை ஒழிப்பதாக சொல்கிறார். ஆனால், ஷெல் போன்ற நிறுவனங்கள் மூலம் இங்கு முதலீடு செய்யப்படுகின்றது. அடித்தட்டு மக்களின் பெரும் நம்பிக்கையாக இருக்கும் எல்.ஐ.சி. நிறுவனம், அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் அதானி குழுமத்திற்கு ஏறக்குறைய ரூ. 50 ஆயிரம் கோடி வரை கடன் வழங்கியுள்ளன. இவ்வளவு மோசடி சர்ச்சை என இருக்கும் அதானி குழுமத்தை நோக்கி செல்ல வேண்டிய வருமானவரித் துறை முகவரி மாறி பிபிசிக்கு சென்றுவிட்டது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், பத்திரிகை சுதந்திரத்திற்கும் சிறுபான்மையினருக்கும் இங்கு இடமில்லை என்பதற்கு இந்த ஒரு நடவடிக்கையே போதுமானது. கௌரி லங்கேஷ் உட்பட பல பத்திரிகையாளர்கள் இங்கு கொல்லப்பட்டுள்ளனர். இன்று என்டிடிவி அதானியிடம் உள்ளது. போர்க் காலங்கள், மோசமான இயற்கை பேரிடர்கள் என உயிரைப் பணையம் வைத்து களத்திற்குச் சென்று உண்மைகளைச் சொல்லும் செய்தி நிறுவனங்களில் பிபிசியும் ஒன்று. ஆனால், அந்த பிபிசி இன்று தடை செய்யப்பட வேண்டும் என குரல் எழும்புவது, வருமான வரிச் சோதனை என மிக மோசமான நிலைமையை சந்தித்து வருகிறது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் கடந்த ஆண்டு 142வது இடத்தில் இருந்த பத்திரிகை சுதந்திரம், இந்த ஆண்டு எட்டு நாடுகளை முன்னுக்குத் தள்ளி 150வது இடத்தில் உள்ளது. அதானி விவகாரத்தில் மக்கள் பணமும், பொதுத் துறையின் பணமும் வீணாகிப் பொருளாதாரமே பெரும் ஆபத்தில் இருக்கிறது. இதற்கு அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையைக் கோருகிறது. ஆனால், அதைப் பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல் பிபிசி போன்ற உலக அளவிலான செய்தி நிறுவனத்தின் மீது இப்படியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது ஒரு புறத்தில் அரசின் முகத்திரையைக் கிழித்து, மோடி அரசின் ஜனநாயகம் எந்த அளவிற்கானது என்பதை உலக நாடுகள் அறிந்துகொள்ள உதவுகிறது. மறுபக்கம், உலக அளவில் இந்தியாவின் பத்திரிகை சுதந்திரத்திற்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இப்படி அதானி குழுமத்தின் மீது இவ்வளவு சந்தேகங்கள், விசாரிக்கப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கும்போது, அங்கு செல்ல வேண்டிய ஐ.டி. ரெய்டு அட்ரஸ் மாறி பிபிசிக்கு போய்விட்டதா” என்று கேள்வி எழுப்பினார்.