மத்திய அரசின் ஊழல்கள் குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் பால்கி நம்மோடு உரையாடுகிறார்
ஒவ்வொரு துறையிலும் மத்திய அரசு எவ்வளவு செலவு செய்ய வேண்டும், எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள், செய்யப்பட்ட செலவுகள் அவசியமானவையா? இல்லையா? என்று சொல்வதுதான் சிஏஜி அமைப்பின் பணி. சுதந்திரம் கிடைத்த முதல் சில ஆண்டுகளில் சிஏஜி அமைப்பின் செயல்பாடுகள் பெருமளவு வெளியே விவாதத்துக்கு வரவில்லை. நரசிம்மராவ் காலத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் பொதுவெளியில் வைத்து விவாதிக்கப்பட்டன. மோடியின் ஆட்சியில் ஏதாவது கேள்வி கேட்டால் அமலாக்கத்துறை வரும் என்று நாடாளுமன்றத்திலேயே பயமுறுத்தும் நிலை தான் இருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு நிலையிலும் சிஏஜி தைரியமாக இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பது எப்படி என்கிற ஆச்சரியம் ஏற்படுகிறது. இவர்களின் அத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி உண்மை இன்னமும் விழித்திருக்கிறது என்பதற்கான ஆதாரம் தான் இந்த அறிக்கை. பொதுவாக சிஏஜி அறிக்கையை வைத்து தான் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறும். ஆனால் பாஜக ஆட்சியில் அப்படி எதுவும் நடக்க இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். சுங்கச்சாவடி மூலம் பாஜக மிகப்பெரிய கொள்ளையை அடித்திருக்கிறது. பணியே முடியாத சுங்கச்சாவடிகளில் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் உழைப்பு சுரண்டப்பட்டுள்ளது. ஏழு துறைகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை பாஜக அரசு ஊழல் செய்து சம்பாதித்துள்ளது. சுதந்திர வரலாற்றில் மிக மோசமான ஊழல் இது. இதை மக்களின் கவனத்திற்கு அனைவரும் கொண்டுசெல்ல வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலமாக இறந்தவர்களுக்கு சிகிச்சை செய்தது போல் கணக்கு காட்டி பல கோடி ரூபாயை இவர்கள் ஊழல் செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் இதுபோல் 20 கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்துள்ளனர். விஞ்ஞானப்பூர்வமாக செய்யப்பட்ட ஊழல் இது.
இந்த ஊழலை வெளிப்படுத்திய சிஏஜி அமைப்புக்கு நாம் தலைவணங்கி நன்றி தெரிவிக்கிறோம். இதை நாடாளுமன்றமும் மக்கள் மன்றமும் விவாதிக்க வேண்டும். இந்த ஊழலைத் தடுப்பதற்கான மக்கள் இயக்கத்தை நாம் உருவாக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடியின் பேச்சில் வெளிப்பட்ட நடிப்பை மக்கள் ரசிக்கவில்லை. நேருவின் அற்புதமான சிந்தனையின் மூலம் உருவானது தான் இஸ்ரோ. அப்துல் கலாமின் உழைப்பு மூலம் இஸ்ரோ சிறப்பாக இயங்கியது. சென்ற முறை கிடைத்த தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு சந்திரயான்-3 இன்று சாதித்துள்ளது.
சம்பளம் உட்பட பல்வேறு வகைகளில் விஞ்ஞானிகளை வஞ்சித்த மோடி, இப்போது இந்த வெற்றியில் மட்டும் பங்கெடுத்துக்கொள்ள விரும்புகிறார். சந்திரயான்-3 பெற்ற வெற்றி உலக நாடுகளின் மத்தியில் நம்முடைய பெருமையை உயர்த்தியுள்ளது. தாங்கள் எவ்வளவு வஞ்சிக்கப்பட்டாலும் இந்த நாட்டுக்காக உழைப்போம் என்கிற செய்தியை இந்த மோடி அரசுக்கு இதன் மூலம் விஞ்ஞானிகள் வழங்கியுள்ளனர்.