ஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு...
வைரல் வீடியோ விளம்பர யுக்தி

கடந்த ஓரிரு வாரங்களாக சில வீடியோக்கள் டிவிட்டர், வாட்சப், பேஸ்புக்கில் பரபரப்பாக வளம் வந்து கொண்டிருக்கின்றன. விஷால் அலுவலகத்தில் ரெய்டு நடந்த வீடியோ என்று ஒன்று, ஆர்யா பெண்தேடும் வீடியோ என்று ஒன்று, அர்ஜுன் அரசியல் அறிவிப்பு வெளியிட போவதாக ஒன்று... நடந்த இடத்தில் இருந்த யாரோ ஒருவர் ரகசியமாக எடுத்து லீக் செய்தது போன்று இருக்கும் இந்த வீடியோக்கள் எல்லாமே இவர்களாலேயே எடுக்கப்பட்டு, வெளியிடப்பட்டவை. இவர்களுக்கு முன்பே பீப் சாங் என்ற பாடலை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பெரிய பிரச்சனைகளை சந்தித்தார் சிம்பு. நண்பர்களுக்குள் அவர்கள் பாடிய பாடலை அவர்களுக்கு தெரியாமல் யாரோ வெளியிட்டார்கள் என்று சொல்லி பிரச்சினையை முடித்தனர். அதில் அவர் பெயர் கெட்டதோ இல்லையோ, எதிர்பார்த்ததை விட விளம்பரம் அதிகமாக கிடைத்தது. இதே பாணியில் தான் இப்பொழுது இவர்கள் மக்களிடம் விளம்பரம் செய்கின்றனர். விஷால், மெர்சல் பிரச்சினைக்காக குரல் கொடுத்து, பின்னர் ஐடி ரெய்டுகளை சம்பாரித்துக் கொண்டார். தற்போது 'இரும்புத்திரை' என்ற புதிய படத்தின் படப்பிடிப்பின் போது, செட்டில் ரெய்டு புகுந்தது போன்ற ஒரு வீடியோ வெளியாகியது. வீடியோவின் கடைசியில் அர்ஜுன் வந்தபின்பு இது போலி ரெய்டு என்று தெரிய வந்தது. ஆனால், அந்தப் பகுதியை 'எடிட்' செய்துவிட்டு ரெய்டு பகுதியை மட்டும் பரப்பியது நம் சமூக வலைதள சமூகம். அடுத்த வாரத்தில் இரும்புத்திரை போஸ்டர் வெளியிட்டனர்.

அடுத்து, ஆர்யா தனக்கு பொண்ணு பார்ப்பதாக வந்த வீடியோ நண்பர்கள் விளையாட்டாக வெளியிட்டதாக கூறி இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நான் உண்மையாகவே திருமணத்திற்கு பெண் பார்க்கிறேன், என்னை திருமணம் செய்ய நினைத்தால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று 73301-73301 என்ற ஒரு நம்பரை கொடுக்கிறார். ஆனால், இதுவும் கூட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விளம்பரம் என்று சொல்லப்படுகிறது. அந்த எண்ணுக்கு அழைத்தால், மாப்பிள்ளைஆர்யா.காம் என்ற வலைத்தளத்துக்கு விவரங்களை அனுப்பும்படி குறுஞ்செய்தி வருகிறது.

இன்னொரு வீடியோ அர்ஜுனும் சினிமா PRO நிகில் முருகனும் பேசிக்கொள்வது போல வந்தது. "சொல்லிரலாமா.." என்று ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி பூடகமாக பேசிக்கொள்கிறார்கள் இருவரும். ஆனால் அது அர்ஜுனது மகள் ஐஸ்வர்யா நடிக்க அர்ஜுன் இயக்கும் 'சொல்லிவிடவா' படத்திற்கான விளம்பரம். இவ்வாறு, 'லீக் வீடியோஸ்' மூலம் வைரல் ஆகி விளம்பரம் செய்வது சமீபத்திய ட்ரெண்டாகி இருக்கிறது. இது போன்ற வீடியோக்களை இணையவாசிகள் விரும்பிப் பார்ப்பதை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
சந்தோஷ் குமார்