அர்ஜூனா விருது நாயகன், ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸில் தங்கம் வென்ற தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் நக்கீரனுக்கு அளித்த பேட்டி...
செவ்வாய்க்கிழமை ராஷ்ட்ரபதி பவனில் விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். ஏனென்றால் இது மிகவும் மதிப்புமிக்க விருது சிறிய வயதிலிருந்தே இதற்காக நான் கடுமையாக உழைத்துள்ளேன். இதுதான் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருது. முக்கியமாக இந்த விருது சிறுவயதிலேயே பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல்முறை விருதிற்காக பதிவுசெய்யும்போதே கிடைத்திருப்பதும், காமன்வெல்த், ஆசியப் போட்டிகள் இப்போது அர்ஜூனா விருது கிடைத்திருப்பதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
டேபிள் டென்னிஸில் நான் இணைந்தது எதிர்பாராமல் நடந்த ஒன்று. எங்கள் வீட்டில் யாருக்கும் விளையாட்டு பின்புலம் இல்லை. முதன்முதலில் அக்காவை விளையாட்டில் சேர்க்கத்தான் சென்றார்கள். பின் நான் மட்டும் வீட்டில் என்ன செய்வேன் என்று என்னையும் சேர்த்துவிட்டார்கள். அப்படித்தான் நான் அதை சந்தித்தேன். அந்த சிறிய பந்து, வேகம், சுறுசுறுப்பு இதையெல்லாம் பார்த்தவுடன் சிறுவயதிலேயே எனக்கு அதன்மீது அதித ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. பயிற்சி எடுத்துக்கொண்டேன். சிறுவயதிலிருந்தே மெதுவாக வெற்றியும் கிடைக்கத் தொடங்கியது.
கிரிக்கெட்டைத் தவிர்த்த மற்ற அனைத்து விளையாட்டுகளுமே இந்தியாவில் அந்நியமாகத்தான் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லை 15 வயதிற்கு பிறகு விளையாட்டை மாற்றமுடியாது. டேபிள் டென்னிஸைப் பொறுத்தவரையில் அடிப்படையைக் கற்றுக்கொண்டு மாநில அளவிற்கு தேர்ச்சிபெறவே கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகும். சிறிய வயதிலிருந்தே விளையாடிக்கொண்டிருப்பதாலும், வெற்றிகள் கிடைக்கத் தொடங்கியதாலும் எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டாக டேபிள் டென்னிஸ் மாறிப்போனது. முன்பெல்லாம் என்ன பண்ற அப்படினு கேப்பாங்க, நான் டேபிள் டென்னிஸ் விளையாடுறேன் அப்படினு சொல்லுவேன். அதுக்கு அவங்க நானும்தான் விளையாடுறேன் வேற என்ன பண்ணுற அப்படினு சொல்லுவாங்க. ஆனால் இப்போது அப்படியல்ல, ஒலிம்பிக்கில் 1998லிருந்து இருக்கிறது, ஆசிய விளையாட்டுகள், தற்போது டேபிள் டென்னிஸை சார்ந்த இருவருக்கு அர்ஜூனா விருதுகள் வழங்கப்படுகின்றன. இதெல்லாம் விளையாட்டை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கிறது.
நான் ஒரு பொறியியல் மாணவன் 2012ல் என்னுடைய கோச் ராமன் சார்ட்ட சேர்ந்தேன். ஜூனியர் பிரிவுவரை நான் நன்றாக விளையாடினேன். அதன்பின் வெளி மாநிலங்கள் செல்லவேண்டியிருந்ததால் என்னால் விளையாட முடியவில்லை. ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அந்த நிலையில்தான் நான் அவரிடம் சேர்ந்தேன். அப்போது ஒரு வேலையும் கிடைத்தது. இதனால் என் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்தனர். நான் அவரிடம் விளையாடத் தொடங்கி, சிறிது,சிறிதாக முன்னேறிக்கொண்டிருந்தேன். டேபிள் டென்னிஸ் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அதன்பின் உடல்வலிமை, மனவலிமை என பலவை இருக்கின்றன. ஒன்றரை வருடம் கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்டேன். அப்போது கல்லூரிக்கும் போய்க்கொண்டிருந்தேன். காலையில் 5.30க்கு வீட்டைவிட்டு போனால் திரும்புவதற்கு 10.30 மேல் ஆகிவிடும். காலையில் அனைவரும் எழுந்திருக்கும் முன்பே கிளம்பிவிடுவேன். இரவு அனைவரும் தூங்கியபின்தான் வருவேன். இதனால் வீட்டிலிருந்தும்கூட யாரையும் சந்திக்கமுடியாமல் போனது. பிறகு படிப்பு முடிந்தவுடன், 2014லிருந்து முழுமூச்சாக அதிலேயே இறங்கினேன், அப்போதுதான் அதீத வளர்ச்சி ஏற்பட்டது. 2014ல் முதலிடத்திற்கு வந்தேன்.
அப்போதுதான், 2015ல் அப்பா இறந்துவிட்டார். அப்போது மிகவும் வருத்தமாக இருந்தது. அதன்பின் எல்லாமே மாறிவிட்டது. அப்பாவிற்கு மேல் வேறெதுவுமில்லையென்பதால், நான் போட்டிகளில் தோற்பது பெரிய பொருளாக எனக்கு தெரியவில்லை. முழு கோபத்தையும் பயிற்சிகளில் காட்டினேன். 2016லிருந்து என்னுடைய வெற்றிகள் புதிய உச்சத்தைத் தொட்டது, யூரோப்பியன் சர்க்கியூட் போன்றவற்றில் வெற்றிபெறத்தொடங்கினேன். அது இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 2018 என் வாழ்வில் மறக்கமுடியாததாகி விட்டது.
இப்போது படித்தால் மட்டும் வேலை கிடைத்துவிடும் என்பதும், வாழ்வில் வெற்றி பெற்று விடலாம் என்பதும் நிச்சயமற்றதாகிவிட்டது, அப்போது பொறியியல் முடித்தாலே வேலை என்றொரு நிலை இருந்தது, அதைதான் அப்போது என் பெற்றோர் என்னிடம் கூறினார்கள். ஆனால் இப்போது விளையாட்டிலும் நல்ல எதிர்காலம் வரத்தொடங்கிவிட்டது. நிறைய நிறுவனங்களில் விளையாட்டில் இருப்பவர்களுக்கும் வேலை கொடுக்க தொடங்கிவிட்டன.
வேலைக்காக மட்டும் இல்லை, படிப்பிற்கும் விளையாட்டுகள் உதவும். டேபிள் டென்னிஸ் என் படிப்பிற்கு உதவியது. அது எனது பொதுத்தேர்விலும், பொறியியல் தேர்வுகளிலும் வெளிப்பட்டது. அடிப்படையிலேயே நாம் ஏதாவது ஒரு விளையாட்டில் இருந்தால் நமது மூளை செயல்பாடுகள் அதிகரிக்கும், சுறுசுறுப்பாக இருக்கும் அது உங்களுக்கு படிப்பிலும் உதவும். அதுமட்டுமில்லாமல் படிப்பு மட்டுமே உங்களுக்கு அனைத்தையும் கொடுத்துவிடாது. நீங்கள் நன்றாக விளையாட ஆரம்பித்துவிட்டால் விளையாட்டைப்போல் ஒரு நல்ல ஆசான் கிடைக்காது, அந்தளவிற்கு விளையாட்டு அனைத்தையும் கற்றுத்தந்துவிடும். தற்போது தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.
ஒரு விளையாட்டு வீரராக நீங்கள் இருந்தால் தற்கொலை என்ற எண்ணமே உங்களுக்கு வராது. ஏனென்றால் சிறுவயதிலேயே தோல்விகளை தாங்கும் சக்திகளை நீங்கள் பெற்றிருப்பீர்கள். விடாமுயற்சியையும் கற்றுக்கொடுக்கும். நன்றாக விளையாடும் ஒருவரை படிப்பைக் காரணம்காட்டி தடுக்கக்கூடாது. அப்படி தடுத்தால் அவனுக்கு அதுவும் வராமல், இதுவும் வராமல் போய்விடும். நிறையபேர் இந்தத் தவறைதான் செய்கிறார்கள். பொறுமை மிக அவசியம், நன்றாக படிக்கிறோம் என்பதற்காக மூன்றாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பிற்கு ஒருவரை மாற்ற முடியாது. அதுபோல, விளையாட ஆரம்பித்த இரண்டு வருடத்திலேயே இந்தியாவிற்காக விளையாட வேண்டும், ஒலிம்பிக்கில் பதக்கம் பெறவேண்டும் என நினைக்கக்கூடாது, பொறுமையாக இருக்கவேண்டும், அதன்பின்தான் முடிவுசெய்ய வேண்டும்.
ஒலிம்பிக்கிற்காக நிறைய திட்டங்கள் உள்ளன. ஜப்பான், கொரியா, சீனா போன்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக பேசியிருக்கிறோம், தற்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெர்மனியில் தற்போது லீக் விளையாடிக்கொண்டிருக்கிறேன். (ஐ.பி.எல். போன்றது) இதில் உலகத்தர வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பயிற்சிகளுடன் எனது பயிற்சியாளர்களின் அறிவுரை, அவர்களது திட்டங்கள், உடற்பயிற்சி போன்றவற்றுடன் கடின உழைப்பையும் சேர்த்து முயற்சித்தால் நிச்சயம் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும்.