அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வதேச மதங்களின் மாநாட்டில் விவேகானந்தர் பங்கேற்று நிகழ்த்திய உரையே அவரை உலகுக்கும் குறிப்பாக இந்தியா முழுமைக்கு அறிமுகப்படுத்தியது.
அந்த மாநாட்டில் விவேகானந்தர் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருக்காவிட்டால், அவருடைய போதனைகளுக்கு இப்போதுள்ள முக்கியத்துவம் கிடைத்திருக்காது என்று ஒரு பகுதியினர் சொல்கிறார்கள். இதுகுறித்து சில நாட்களுக்கு முன் கொரியாவில் நடைபெற்ற கொரியா தமிழ்ச்சங்க மாநாட்டில், சங்கத்தின் தலைவர் முனைவர் ராமசுந்தரம் தெரிவித்த விவரங்கள் மிகவும் முக்கியமானவை.
அதாவது விவேகானந்தருக்கு அந்த முக்கியமான வாய்ப்பை வழங்கியவர் ராமநாதபுரம் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதி. சிகாகோ மாநாட்டில் பங்கேற்க மன்னர் பாஸ்கர சேதுபதிக்கே அழைப்பு வந்திருந்தது. மன்னராக இருந்தாலும் நன்கு கற்ற, இந்தியா முழுவதும் பயணித்திருந்த ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவராக மன்னர் இருந்தார்.
மதுரை வந்திருந்தபோது விவேகானந்தரின் உரையைக் கேட்ட மன்னர், விவேகானந்தரை சிகாகோ மாநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்தார். மன்னர் பாஸ்கர சேதுபதியின் முடிவு விவேகானந்தருக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே பெருமை சேர்த்துக் கொடுத்தது. விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் பேசிய 125 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வெளிநாடுகளில் இந்திய தூதரகம் வழியாக நடத்தப்படும் கலாச்சார மையங்கள் அனைத்தும் விவேகானந்தர் மையங்களாக பெயர் மாற்றப்பட்டது.
அந்த மையங்களில் விவேகானந்தரின் புகழுக்கும் இந்தியாவின் பெருமைக்கும் காரணமாக இருந்த மன்னர் சேதுபதியின் படத்தையும் இடம்பெறச் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கொரியா தமிழ்ச்சங்க தலைவர் ராமசுந்தரம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதுமட்டுமல்ல, விவேகானந்தர் சிகாகோ பயணத்தை முடித்துக்கொண்டு பாம்பன் திரும்பியபோது அதன் நினைவாக மன்னரால் எழுப்பப்பட்ட நினைவுத் தூணில் மன்னரால் “சத்தியமேவ ஜெயதே” என்ற வாசகம் பொறிக்கப்பட்டது. வாய்மையே வெல்லும் என்ற அந்த வாசகம்தான் இந்திய அரசின் முத்திரையில் பொறிக்கப்பட்டது.
மன்னர் பாஸ்கர சேதுபதியின் ஆன்மிக ஞானத்தை மதித்தே அவரை ராஜரிஷி என்று விவேகானந்தர் அழைத்தார். இதெல்லாம் நடந்த வரலாறு. ஆனால், விவேகானந்தர் வாழ்க்கையில் பாஸ்கர சேதுபதிக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்து, விவேகானந்தர் மையங்களில் அவருடைய படத்தை இடம்பெறச் செய்யவேண்டும் என்பதே ராமசுந்தரத்தின் கோரிக்கை.
அவருடைய கோரிக்கையை தமிழக முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே கொரியா தமிழ்ச்சங்கத்தின் வேண்டுகோள்.