பியூஸ் மனுஷ் கடந்த வாரம் பாஜக அலுவலகத்துக்கு சென்றபோது அக்கட்சி தொண்டர்களால் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இதுதொடர்பாக இயக்குநர் அமீரிடம் பேசியபோது அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அதன் விபரம் வருமாறு,
பியூஷ் மனுஷ் சில நாட்களுக்கு முன்பு பாஜக அலுவலகத்தில் தாக்கப்பட்டுள்ளார். நீங்கள் கூட பல சமயங்களில் அத்தகைய தாக்குதலை சந்தித்தவர் என்ற அடிப்படையில் பியூஷ் மனுஷ் பாஜக அலுவலகத்தில் தாக்கப்பட்டது தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்? அவர் பாஜக அலுவலகம் சென்றது சரியா நடவடிக்கையாக கருதுகிறீர்களா?
எதிர் தரப்பு நபர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்காத, அராஜகம் செய்வதை வாடிக்கையாக கொண்ட பாஜக அலுவலகத்திற்கு பியூஸ் மானுஷ் போன்ற சமூக அக்கறை உள்ள நபர்கள் தனியாக செல்வது என்பது ஆபத்தான ஒன்றுதான். பாஜகவின் வரலாறு அப்படிதான் நமக்கு சொல்லிக்கொடுத்து வருகிறது. அவர் மக்களுக்கான போராட்டங்களை தற்போது மட்டும் செய்யவில்லை. பல ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தை சுற்றிய பகுதிகளில் பல்வேறு இயற்கை சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை காட்டுபவர். நம்முடைய வீடுகளில் உள்ள கழிவுகளையே முறையாக அகற்றுவதில் நாமே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் போது, அவர் ஏரி குளங்களை சீரமைக்கிறார். பிளாஸ்டிக் இல்லாத பகுகதிகளை உருவாக்குவதில் அதிக அக்கறை காட்டுகிறார். அவர் பாஜக அலுவலகம் சென்றது கூட அவராக செல்லவில்லை. சமூக வலைதளங்களில் வாயிலாக அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெரிய அளவில் விமர்சனம் செய்து வருகிறார்கள். இது எந்தமாதிரியான விமர்சனம் என்று தெரியவில்லை. கருத்தியல் ரீதியாக விமர்சனம் செய்யாமல் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்வது. பியூஸ் மனுஷை அந்த சம்பவத்தின் போது மரியாதை குறைவாக நடத்துகிறார்கள். வந்தேரி என்று கூறுகிறார்கள்.
இப்போது எனக்கும் அவர் இந்துவா என்ற சந்தேகம் வருகிறது. என்னை போன்றவர்களை பாகிஸ்தானுக்கு கடத்தலாம்னு சொல்கிறார்கள். மற்ற மதத்தினரை அமெரிக்கா நாடுகளுக்கு கடத்த வேண்டும் என்று கூறும் போது, இந்துவான பியூஸ் மனுஷ் வந்தேரினு அவர்கள் கூறுவது எதை காட்டுகிறது. அவர்களை எதிர்த்து பேசினால் தேச விரோதிகள் என்பதை எப்படி புரிந்து கொள்வது. சமூக நீதி, இறையாண்மை பற்றி அடுத்தவர்களிடம் மட்டும் தான் அவர்கள் பேசுவார்களா? தானும், கட்சியும் அதனை பின்பற்ற வேண்டும் என்று நினைக்க மாட்டார்களா? இது எந்த மாதிரியான கருத்தியல். ஸ்டாலின் பியூஸ் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை பாஜக ஏன் எதிர்க்கிறது. தன்னுடைய பேட்டியிலேயே பியூஷ் பலமுறை சொல்லி இருக்கிறார். எந்த கட்சியினரும் இதுவரை தன்னை தாக்கியதில்லை எனவும், பாஜக கட்சியினரே தன்னை பலமுறை தாக்குதலுக்கு உள்ளாக்கி உள்ளனர் என்று அவரே கூறியுள்ளார். இதில் இருந்தே தெரிகிறது அவர்களின் தனிமனித வெறுப்புணர்வு. தாக்குதலின் போது அவரின் செல்போனை திருடி உள்ளார்கள். பிரியாணியை திருவது, செல்போனை திருடுவது என எதையாது திருடுவதை வழக்கமாக அவர்களை வைத்துள்ளதையே இது காட்டுகிறது.