பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு தொடர்ந்து கைவரிசை காட்டி வந்த திருடர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் திருட்டு நகைகளை உருக்கி வில்லைகளாக மாற்றி விற்பனை செய்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
சேலம் சீலநாயக்கன்பட்டி காஞ்சி நகரைச் சேர்ந்தவர் மோகன். கடந்த ஜனவரி 3ஆம் தேதி, குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். மர்ம நபர்கள் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 31.5 பவுன் நகைகள், 85 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர். அன்னதானப்பட்டி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.
அதேபோல், சேலம் பொன்னம்மாபேட்டையில் வசிக்கும் சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர் அசோகன் வீட்டிலும் மர்ம நபர்கள், கடந்த ஜனவரி 11ஆம் தேதி, பூட்டை உடைத்து 35 பவுன் நகைகள், 1.30 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர். சம்பவத்தன்று அவருடைய வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அனைத்து பீரோக்களையும் திறந்து பார்த்துள்ளனர். நகை, பணத்தைத் திருடிய அவர்கள், அங்கேயே சமைத்துச் சாப்பிட்டுவிட்டும் சென்றிருந்தனர்.
நரசோதிப்பட்டியில் வசித்து வரும் அரசு மருத்துவர் வெங்கடேசன் வீட்டில் கடந்த பிப். 5ஆம் தேதி இரவு, 4 பவுன் நகைகள், வெள்ளி பொருள்கள், 7,500 ரூபாய் ரொக்கம் ஆகியவை களவு போயின. அதே இரவில், சூரமங்கலம் முல்லை நகரில் ரயில்வே ஊழியர் பசுபதி வீட்டிலும் மர்ம நபர்கள் 44 பவுன் நகைகள், வெள்ளி பொருள்களைத் திருடிச் சென்றிருப்பதும் தெரிய வந்தது.
இந்த நான்கு சம்பவங்களின் செயல்முறைகளும் (Modus Operandi) ஒரே தன்மையிலானதாக இருந்தது. இந்த இடங்களில் எல்லாமே, இரும்புக் கம்பியால் பூட்டை நெம்பி திறக்கப்பட்டு உள்ளது. இதனால், ஒரே கும்பல்தான் மேற்கண்ட நான்கு திருட்டுச் சம்பவங்களிலும் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர்.
சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளும் அதையே உறுதிப்படுத்தின. என்றாலும், காவல்துறை வசமிருந்த பழைய குற்றவாளிகளின் படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, கேமராக்களில் பதிவாகியிருந்த முகங்கள் யாருடனும் ஒத்துப்போகவில்லை. இதனால் புதிய திருட்டுக் கும்பல்தான் சேலத்தில் ஊடுருவியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது காவல்துறை.
இந்த நிலையில்தான், நீண்ட காலமாகக் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில் மேற்பார்வையில், உதவி ஆணையர் பூபதிராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ஒருபுறம் கரோனா நோய்த்தொற்று தடுப்புப்பணிகளில் ஈடுபட்டாலும்கூட, மற்றொரு புறம் மேற்கண்ட சம்பவங்களில் திருடர்களைப் பிடிப்பதிலும் கவனம் செலுத்தினர், தனிப்படையினர்.
கடந்த பிப். 5ஆம் தேதிக்குப் பிறகு சேலம் மாநகரம் மற்றும் மாவட்டப் பகுதிகளில் இதேபோன்ற பின்னணியிலான திருட்டுச் சம்பவங்கள் நடக்கவில்லை. அதனால் திருட்டுக் கும்பல் வேறு மாவட்டத்திற்கு முகாமை மாற்றி இருக்கலாம் எனக் கருதினர். இதையடுத்து தங்களிடம் இருந்த சிசிடிவி ஃபுட்டேஜ் காட்சிகளுடன் மற்ற மாவட்டக் காவல்துறையில் விசாரித்தபோது, அவர்களுக்கு முக்கியத் தகவல் கிடைத்தது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள விஸ்னம் பேட்டையைச் சேர்ந்த செல்வராஜ் மகன் முத்துராஜ் (32) என்பவருக்குத் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தினர். அவரைத் தேடி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதமே முத்துராஜை ஈரோடு மாவட்ட காவல்துறையினர் அங்கு நடந்த ஒரு திருட்டு வழக்கில் கைது செய்து, கோவை மத்தியச் சிறையில் அடைத்திருப்பதுத் தெரிய வந்தது. அவர் மீது மட்டும் பல மாவட்டங்களில் 60க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும் காவல்துறைக்குச் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
முத்துராஜின் கூட்டாளிகளான ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலானியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் அன்பு மணிகண்டன் (20), மண்டபம் வாலந்தராவியைச் சேர்ந்த மலைக்கண்ணன் மகன் மகேந்திரன் (28) ஆகியோரும் முத்துராஜூவுடன் கைது செய்யப்பட்டு, கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் கோவை மத்தியச் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்து, சேலம் பகுதிகளில் மீண்டும் கைவரிசை காட்ட சுற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் ஜூன் 1ஆம் தேதி, சேலம் மாநகர தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், சேலத்தில் நடந்த மேற்குறிப்பிட்ட நான்கு திருட்டுச் சம்பவங்களிலும் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, அவர்களை நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சூரமங்கலம் காவல் ஆய்வாளர் செந்தில், கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முத்துராஜை காவலில் எடுத்து விசாரித்தனர். அவரும், சேலத்தில் தனது தலைமையில் நடந்த திருட்டுக் குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சேலம் மாநகரில் நடந்த நான்கு திருட்டுக் குற்றங்களிலும் முத்துராஜூவும், அன்பு மணிகண்டனுமே நேரடியாக ஈடுபட்டுள்ளனர். எப்பேர்பட்ட பூட்டுகளையும் கம்பியால் நெம்பி திறப்பதில் முத்துராஜ் கைதேர்ந்தவர். இந்தச் சம்பவங்களில் அன்பு மணிகண்டனை வீட்டுக்கு வெளியே காவலுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கிறார் முத்துராஜ்.
சேலம் முல்லைநகரில் பசுபதி வீட்டில் கைவரிசை காட்டிவிட்டு வெளியேறும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகள்தான் முத்துராஜை அடையாளம் காட்ட பேருதவியாக இருந்திருக்கிறது. திருட்டு நடந்தபோது, பசுபதியின் மகளுக்கு அடுத்த பத்து நாளில் திருமணம் நடக்க இருந்த நேரம். வீட்டுக்குள் நுழைந்த முத்துராஜ், திருமண பத்திரிகையைப் பார்த்ததும், திருடிய நகைகளில் பாதியை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிடலாம் என்றும் யோசித்தாராம். ஆனாலும் இதுவரை கண்களில் பட்ட அத்தனை நகைகளையும் வாரிச்சுருட்டியே பழக்கப்பட்டுவிட்டதால் அவர் வீட்டில் இருந்த 44 பவுன் நகைகளையும் 'லபக்கி' இருக்கின்றனர்.
மகேந்திரனும், அன்பு மணிகண்டனும் பக்கத்து பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதால் அவர்களுக்குள் நன்கு அறிமுகம் உண்டு. அன்பு மணிகண்டன், ஒரு கல்லூரியில் பி.இ., ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு சேர்ந்திருக்கிறார். படிப்பில் பெரிதாக நாட்டம் இல்லாததால், கல்லூரிக்குச் செல்லவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
அவசரமாக ஒரு உதவி தேவைப்படுவதாகச் சொல்லித்தான் முதன்முதலில் அன்பு மணிகண்டனை, 'தொழிலில்' இறக்கி இருக்கிறார்கள். அதன்பிறகு, நினைத்தபோதெல்லாம் உயர்ரக மதுபானமும், பெண்கள் உடனான உல்லாசமான வாழ்க்கையும் அன்பு மணிகண்டனுக்குப் பிடித்துப் போகவே, அவர்களுடனேயே ஒட்டிக்கொண்டார். மகேந்திரனும், முத்துராஜூவும் ஒரு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும்போது நண்பர்களாகி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாவட்டமாக நாடோடி போல சுற்றி வந்து திருட்டில் ஈடுபடும் இந்த மூவர் அணி, இதற்கு முன்பு சேலத்திற்கு வந்ததில்லை. அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் வாக்கில்தான் வந்துள்ளனர். மகேந்திரனின் உறவினர் மகன் ஒருவர், சேலத்தை அடுத்த வாழப்பாடியில் தனியாக அறை எடுத்துத் தங்கியிருந்ததால், அவருடைய ஏற்பாட்டின்பேரில் அதே கட்டடத்தில் மேலே ஒரு அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கி இருந்துள்ளனர்.
இவர்களில் மகேந்திரனுக்கு ஏதோ ஒரு சம்பவத்தில் கால் முறிந்ததால், சேலத்தில் நடந்த திருட்டுச் சம்பவங்களில் அவர் ஈடுபடவில்லை என்பது தெரிய வந்துள்ளது. தினமும் வாழப்பாடியில் இருந்து இரவு 7 மணிக்கு மேல் ஒரு பல்சர் மோட்டார் சைக்கிளில் முத்துராஜூவும், அன்பு மணிகண்டனும் கிளம்புகின்றனர். எந்தெந்த வீடுகள் பூட்டியிருக்கிறது என்பதை நோட்டமிடுகின்றனர். ஏதேனும் வீடுகள் பூட்டப்பட்டு இருப்பது தெரிய வந்தால், அதன்பிறகு இரண்டாவது சுற்றை 10 மணிக்கு மேல் தொடர்கின்றனர். அப்போதும் அவர்கள் முன்பு பார்த்த வீடுகள் பூட்டியே கிடக்கிறது எனில், அந்த வீடுகளை மட்டும் குறிவைத்துத் திருட்டை அரங்கேற்றி வந்துள்ளனர்.
திருடப்போகும் வீடுகளில் ஆறஅமர ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிதானமாக, ஒவ்வொரு அறையாகச் சென்று பீரோ, இரும்புப் பெட்டிகள் எனத் தேடிப்பார்த்து, திருடியிருக்கிறார்கள்.
இவ்வாறு திருடிய நகைகளை அப்படியே விற்பதும், பாதுகாப்பதும் கடினம் என்பதால் உடனுக்குடன் அவற்றை உருக்கி, தங்க வில்லைகளாக மாற்றி விடுகின்றனர். சேலத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் தங்க நகைகளை உருக்கிக் கொடுக்கும் வேலைகளைச் செய்து கொடுத்துள்ளார்.
மூவரின் சொந்த ஊர்களிலும் அவர்களது வாழ்வியல் பின்னணி குறித்தும் சேலம் மாநகர காவல்துறை நேரில் விசாரித்துள்ளது. அவர்களின் பெற்றோர் வசதி வாய்ப்புகளின்றி மிகச்சாதாரணமாக ஏழ்மை நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. திருட்டு நகைகளைப் பணமாக்கி, உல்லாசமாக வாழ்வது ஒருபுறம் இருந்தாலும், தங்களை வழக்குகளில் இருந்து பிணையில் எடுப்பது உள்ளிட்ட வேலைகளுக்காக வழக்கறிஞர் ஒருவருக்கு கேட்ட பணத்தைத் தண்ணீராக இறைத்துள்ளனர்.
சேலத்தில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நான்கு வீடுகளில் மொத்தம் 114.5 பவுன் நகைகளும், 2.22 லட்சம் ரொக்கமும் திருடியுள்ளனர். கைது செய்யப்பட்ட மகேந்திரன், அன்பு மணிகண்டன் ஆகியோரிடம் இருந்து மட்டும் தற்போது 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 பவுன் வில்லைகளை சேலம் மாநகர தனிப்படைய காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட 'பல்சர்' மோட்டார் சைக்கிளை வேறு ஒரு வழக்கில் ஏற்கனவே ஈரோடு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைதான நபர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தால் அவர்களிடம் இருந்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என்கிறார்கள் தனிப்படையினர். ஐந்து மாதங்களுக்கு மேலாகக் கண்டுபிடிக்க முடியாமல் தேங்கிக் கிடந்த திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ததால் சேலம் மாநகர காவல்துறையினரும், மக்களும் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.