Skip to main content

தமிழக அரசு மீது திருப்தியில்லாத மத்திய அரசு... சென்னையில் கரோனா பரவல் பற்றி மோடியிடம் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

admk

 

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கரோனாவின் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் கனமான கோப்புகளை கடந்த வாரம் சமர்ப்பித்திருக்கிறது மத்திய சுகாதாரத்துறை. அதனடிப்படையில், எடப்பாடி அரசுக்கு மோடி கொடுத்த டோஸ்தான், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தும் முடிவை எடுக்கவைத்துள்ளது என்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறையினர்.

 

கரோனா தடுப்பு மருத்துவவல்லுநர்கள் குழு மற்றும் அமைச்சரவை கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தியபோது எடப்பாடி மிகவும் சோர்வாகத் தான் இருந்திருக்கிறார். சுகாதாரத் துறையினர் நம்மிடம், "சென்னையில் பரவும் கரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் திட்டம், அமைக்கப்பட்ட குழுக்கள் எதிலும் திருப்தி இல்லாத மத்திய சுகாதாரத்துறை, சென்னையை டெல்லியின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள நேரிடும் என தலைமைச்செயலாளர் சண்முகம் வழியாக எடப்பாடிக்குத் தகவல் தந்துள்ளது. அதுதான் அவரது சோர்வுக்குக் காரணம்'' என்கின்றனர்.

 

இதனால், மருத்துவ வல்லுநர்கள் குழுவுடனான ஆலோசனையில் இளம் வயதினரின் மரணங்கள், அறிகுறியே இல்லாதவர்களின் மரணங்கள், பாசிட்டிவ்வாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, சமூகப் பரவலாக மாறி விட்டதா உள்ளிட்ட நடப்புச் சிக்கல்களையும் மத்திய அரசின் கோபத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நிறைய விசயங்களைக் கேட்டறிந்திருக்கிறார் எடப்பாடி. அப்போது, ஆரோக்கியமற்ற இளம் வயதினரின் மரணங்கள் தவிர்க்க முடியாதவை. அறிகுறியே இல்லாதவர்களின் இறப்புக்கு சைலண்ட் ஹேபாக்சியா தாக்குதல்தான் காரணம். டெஸ்டுகளின் எண்ணிக்கையும், அதன் ரிசல்டுகளின் எண்ணிக்கையும் அதிகமாகியிருப்பதால் பாசிட்டிவ் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் இதனை க்ளஸ்டர் என சொல்லலாமே தவிர சமூகப்பரவலாக கணிக்கத்தேவையில்லை.

 

கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தினால் மட்டுமே தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். 6 மாதங்களுக்குப் பிறகே தொற்றுக் கட்டுக்குள் வரும் என்பதை ஆரம்பத்திலேயே தெரியப்படுத்தியிருக்கிறோம். அதனால் செப்டம்பர், அக்டோபர் வரை பாதிப்புகள் அதிகரித்து அதன்பிறகே அடங்கும் என மருத்துவக்குழு விவரித்துள்ளது. இதனைத்தொடர்ந்தே, முழு ஊரடங்கை அமல்படுத்தும் முடிவை எடுத்தார் எடப்பாடி என்கிறார்கள். இந்த ஆலோசனையில் காணொளிக் காட்சி வழியாகக் கலந்துகொண்ட ஐ.சி.எம்.ஆர். டாக்டர் பிரப்தீப்கவூரை பேச அனுமதிக்காததுடன், பேட்டி தரக்கூடாது எனவும் வாய்ப்பூட்டுப் போடப்பட்டதாம்.
 

dr

 

இளம்வயது மரணங்கள், சைலண்ட் ஹேபாக்ஸியா அட்டாக் குறித்து சென்னை வடபழனியிலுள்ள சூர்யா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்ரீகுமாரிடம் பேசியபோது, "கரோனாவால் இளம் வயது மரணங்கள் அதிகரித்திருப்பதாகச் சொல்வது தவறு. இளம் வயதில் உடல் ஆரோக்கியத்தை இழந்தவர்கள் மரணமடைகின்றனர். ஆரோக்கியமாக இருப்பவர்களைத் தொற்று தாக்கினாலும் அவர்களுக்குத் தெரியாமலே ஓடிவிடுகிறது. 7 நாள் கழித்து, ஆன்டிபாடி பரிசோதனையில், ஐ.ஜி.எம்.ஆன்டிபாடி பாசிட்டிவ் என வந்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டது. அவர்களை கரோனா தாக்காது. இளம் வயதினர் உடல் நலத்தில் அக்கறைகாட்ட வேண்டும். கரோனாவைக் கண்டு பயந்து நடுங்கத் தேவையில்லை.

 

அதேசமயம், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது. ஆனால், 60 வயதைக் கடந்துள்ள டாக்டர்கள் அப்படி இருக்க முடியாது. போர் முனையில் உள்ள ராணுவ வீரர்கள் போல கரோனாவை எதிர்த்து டாக்டர்கள் போராடுகிறோம். கரோனாவை எதிர்த்து லண்டனில் போராடும் டாக்டர்களில் 50 பேர்தான் இறந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ரிட்டையர்டு ஆன டாக்டர்களெல்லாம் மருத்துவப் பணிகளுக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் ஆரோக்கியமாக இருந்ததால் கரோனா அவர்களை நெருங்கக்கூட முடியவில்லை. ஆனா, போராடுகிற எங்களுக்கு சிப்பாய்கள்தான் கிடைப்பதில்லை. அதாவது, இளம்வயது டாக்டர்கள், செவிலியர்களுக்கு சரியான தகவல்கள் கொடுக்கப்படாததால் ரிசைன் பண்ணிட்டு ஓடிவிடுவதுதான் எல்லா மருத்துவமனைகளும் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை.

 

http://onelink.to/nknapp

 

சமூகப் பரவலாக சென்னை மாறியிருக்கிறதா என்பதற்கு ஐ.ஜி.எம். மற்றும் ஆன்டி ஜெ.எம்.டெஸ்ட் செய்து பார்த்தால்தால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆன்டிஜெ.எம். இப்போதுதான் நாம் ஆரம்பிச்சிருக்கோம். ஆண்டிஜென் கிட் இப்போதுதான் வரத் துவங்கியிருக்கிறது. 100 பேருக்கு ஐ.ஜி.எம். டெஸ்ட் எடுத்து அதில் 50 பேருக்கு பாசிட்டிவ்னு வந்ததுன்னா சமூகப் பரவல் இல்லைன்னு சொல்லலாம். இத்தகைய டெஸ்டில் ஐ.ஜி.ஜி., ஐ.ஜி.எம். என 2 வகை இருக்கு. ஐ.ஜி.ஜி. பாசிட்டிவ்வாக இருந்தால் நோய்க் குணமடையவில்லைன்னு அர்த்தம். அதுவே ஐ.ஜி.ஜி. நெகட்டிவ்வாகவும், ஐ.ஜி.எம். பாசிட்டிவ்வாகவும் இருந்தால் குணமடைந்து விட்டார்கள்னு பொருள். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரித்துவிட்டது எனச் சொல்லலாம். இவைகளைச் செய்து பார்க்காமல் சமூகப் பரவலைக் கணக்கிட முடியாது. அதேபோல, ஹேபாக்ஸியா தாக்கம் என்பதெல்லாம் மிக அபூர்வம். லட்சத்தில் ஒருவரைத்தான் தாக்கும். அதனால், எல்லா வியாதிகளையும்போல கரோனாவும் ஒரு வியாதிதான். ஆனா, மருந்து கண்டுபிடிக்கப்படாத வியாதி. அதனால் அதனை எதிர் கொள்ளணுமே தவிர பயப்படத் தேவையில்லை. இன்றைய நிலையில், ஆக்ஸ் போர்ட் யுனிவர்சிட்டி கண்டுபிடித்துள்ள மருந்து ஒரு வரப்பிரசாதம்! பலர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்'' என்கிறார் மிக இயல்பாக.