காசியின் பாலியல் கொடூரத்தை சி.பி.ஐ. விசாரிக்கக் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் போராடிய நிலையில் சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க அரசு உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான டீம் விசாரணைக் களத்தில் இறங்கியுள்ளளது. காசி மீது பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளில் போக்சோ மற்றும் கந்துவட்டி வழக்கைத் தவிர 4 இளம் பெண்கள் கொடுத்த புகார் மீது பதிவு செய்யப்பட்ட அந்த 4 வழக்குகளின் ஆவணங்களை மட்டும் குமரி மாவட்ட காவல்துறை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைத்து இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாளில் பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் காசியை வெளியில் எடுக்கத் திட்டமிட்டியிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். சிறையில் திருட்டுக் குற்றவாளிகள் 5 பேருடன் அடைக்கப்பட்டியிருக்கும் காசி எதுவும் அலட்டிக்கொள்ளாமல் கேசுவலாக நாட்களைக் கடத்துகிறான். சிறையில் அவனை தந்தை தங்கபாண்டியன் மற்றும் இரண்டு உறவினர்கள் சந்தித்துள்ளனர். கரோனா பிரச்சினையால் சிறையில் இரண்டு மீட்டர் இடைவெளியில் நின்று காசியைப் பார்த்து கலங்கியிருக்கிறார்கள் தந்தையும் உறவினர்களும்.
வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு போய் விட்டது என்று அவர்கள் சொன்னதும், "அதுக்கு இப்ப என்ன? சி.பி.ஐக்கு போனாலும் பரவாயில்லை. என்னை போலீஸ் பிடிச்சதில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டது வரை அதற்கு முன் என்னோடு இருந்தவர்கள் (கூட்டாளிகள்) ஆறுதலுக்குக் கூட உங்களையும் பார்க்கல. எனக்காக எந்த உதவியும் செய்யல. இந்த விசயத்தில் எனக்குப் பின்னால யார் யார் உண்டுனு எனக்கு மட்டும்தான் தெரியும். என்னை அழிக்க நினைச்சா அவங்கள கண்டிப்பாகக் காட்டி கொடுப்பேன்'' என ஆவேசத்தைக் காட்டியிருக்கிறான் காசி.
அவனுடைய ஆவேசத்திலும் அர்த்தம் இருக்கிறது எனக் கூறும் உறவினர்கள், சென்னை பெண் டாக்டர் கொடுத்த அந்த ஒரு புகாரோடு போலீசை சரிக்கட்டி அவனை ஜாமீனில் எடுத்து வழக்கை முடித்துவிடலாம் என்று சிலர் பேரம் பேசினார்கள். அந்தப் பேரத்துக்கும் ஒத்துக்கொண்டோம். கடைசியில் அவர்களும் கைவிட்டு விட்டார்கள். அதன் பிறகு அவனை ஆட்டுவித்த நண்பர்கள்கூட காசியை பலிகடா ஆக்கி விட்டு அவர்கள் தப்பிக்க முயற்சிப்பதோடு காசியை பற்றி சில தகவல்களையும் வெளியே விட்டு இருக்கிறார்கள் என்றனர்.
சி.பி.சி.ஐ.டி. விசாரணையைத் தொடங்கியிருக்கும் நிலையில் போலீஸ் சோர்ஸ் ஒருவர் முக்கியத் தகவலை நம்மிடம் கூறினார். "செக்ஸ் டாக்டர் பிரகாஷைப் போல் காசியையும் ஜாமீனில் வெளியே வரவிடாமல் சிறைக்குள்ளே வழக்கை நடத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற ரீதியில் சி.பி.சி.ஐ.டியினர் இருப்பதாகவும், இதற்கு முக்கியக் காரணமே வெளியில் இருக்கும் சிலரை காப்பாற்றுவதற்குத் தான்'' என்ற அவர் மேலும், "காசியின் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு வருவதற்கு முக்கியக் காரணம் முதல்வர். அவரின் நேரடி கவனத்துக்கு இந்தச் சம்பவம் சென்றதால்தான். அதேபோல் காவல் துறை தலைமையும் காசி வழக்கை பொள்ளாச்சி ரேஞ்சுக்கு கொண்டு போய்விடாமல் இருக்க அதற்காக இருக்கிற சாட்சியங்கள் தடயங்களை வச்சி சி.பி.சி.ஐ.டியே வழக்கை முடித்து விட வேண்டுமென்று நினைக்கிறதாம். இதனால் மேற்கொண்டு யாரையும் குறிப்பாக காசியின் கூட்டாளிகள் என்று கருதப்படும் அந்த வி.ஐ.பி. நபர்களை விசாரிப்பதாகத் தெரியவில்லை. இதனால் காசியோடு மட்டும் வழக்கை முடித்து விடுவார்கள்'' என்றார்.
இதற்கிடையில் காசியுடன் தொடர்புடைய பட்டியலில் மறைந்து இருக்கும் தாசில்தார் ஒருவர், காசியின் அந்தரங்க வேட்டைக்கு கோவை, சென்னை, பெங்களூரு என்று காசியுடன் அடிக்கடி பறந்து இருக்கிறாராம். முக்கிய அதிகாரி ஒருவரின் நெருக்கமாக தாசில்தார் இருப்பதால் ஏற்கனவே காசியின் வழக்கை விசாரித்த லோக்கல் போலீசாரின் பார்வை அவர் பக்கம் திரும்பவில்லை. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் பார்வையாவது அவர் பக்கம் விழுமா? அதுபோல் காசியின் வி.ஐ.பி. கூட்டாளிகளும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை வளையத்துக்குள் வருவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையால் காசியின் வழக்கில் உண்மை தெரிந்து விடாது. அதன்மீது நம்பிக்கையும் இல்லை. சி.பி.ஐதான் இதற்கு ஒரே தீர்வு என்கின்றனர் குமரி மாவட்ட ஜனநாயக மாதர் சங்கம்.