சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா, ஆகஸ்ட் 14-ஆம் தேதி விடுதலை ஆகிறார் என்று பா.ஜ.க.-வுக்கு நெருக்கமான ஆசிர்வாதம் ஆச்சாரி ட்விட்டரில் பதிவு செய்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து சசிகலாவின் விடுதலை குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் இப்போது வரை வெளியிடவில்லை. மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலையாகும் கைதிகளின் பட்டியலில் அவரது பெயர் இன்று வரை இடம் பெறவில்லை என்கிற தகவலும் பரவியுள்ளது.
இந்த நிலையில் சிறைத்துறை வழக்குகளை கையாளும் மூத்த வழக்கறிஞர்களிடம் பேசியபோது, "சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில் பெங்களூர் சிறையில் உடனடியாக அடைக்கப்பட்டார். 21 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் விடுதலையானார். மேல் முறையீட்டில் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டில், குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். அதன்படிதான், 2017 பிப்ரவரி 14-ஆம் தேதி மாலையிலிருந்து பெங்களுர் சிறையில் இருந்து வருகிறார் சசிகலா.
இந்த வழக்கில் தண்டனைக் கைதியாக சிறையில் இருந்த 21 நாட்களைத் தவிர, இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு சிறையிலும் அவர் இருந்ததில்லை. அந்த அடிப்படையில், அவருடைய தண்டனை காலத்திலிருந்து அந்த 21 நாட்கள் கழித்துக்கொள்ளப்படும். அதேசமயம், சிறைத்துறை விதிகளின் படி, சிறைத்துறை உயரதிகாரிகளுக்குள்ள அதிகாரத்தின்படி தண்டனை கைதிகளுக்கு சில சலுகைகள் வழங்க முடியும். அந்தச் சலுகைகள் கூட கைதியின் நன்னடத்தையைப் பொறுத்து அமையும். அந்த வகையில், நன்னடத்தையைப் பொறுத்து மாதத்திற்கு 6 நாட்களைச் சலுகை நாட்களாக ஒரு கைதியால் பெற முடியும். அப்படிப் பெறுவதன் மூலம், வருடத்திற்கு 72 நாட்கள் ஒரு கைதிக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அந்தச் சலுகை நாட்கள் கிடைக்கும்பட்சத்தில், அதனைத் தண்டனை காலத்திலிருந்து கழித்துக்கொள்ளப்படும். இந்தச் சலுகை நாட்களை சசிகலாவுக்கு சிறைத்துறை அதிகாரிகள் வழங்கும் பட்சத்தில் அவரது முன் விடுதலைச் சாத்தியமாகும். ஆனால், சிறையில் சொகுசாக இருப்பதற்காக சிறைத்துறை டி.எஸ்.பி.க்கு சசிகலா லஞ்சம் கொடுத்தார் எனக் குற்றம்சாட்டியிருந்தார் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.ஜி.யாக இருந்த ரூபா. மேலும், இதற்கான ஆதாரங்களுடன் கர்நாடக அரசுக்கு ரிப்போர்ட்டும் அனுப்பியிருந்தார்.
இதன் உண்மைத் தன்மையை அறிய விசாரணை கமிசனை அமைத்தது கர்நாடக அரசு. அந்த கமிஷனின் ரிப்போர்ட்டும் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கைதிகளின் நன்னடத்தைக்கான அதிகாரிகள் வழங்கும் சலுகை நாட்கள் சசிகலாவுக்கு கிடைக்குமா என்பது உறுதியாகவில்லை. இப்படிப்பட்ட நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக கமிசனின் ரிப்போர்ட் இருக்கும் பட்சத்தில் சலுகை நாட்கள் சசிகலாவுக்கு கிடைக்கலாம். அதனால், கர்நாடக அரசின் தயவில்தான் இருக்கிறது சசிகலாவின் முன் விடுதலை!‘’ என்கிறார்.
இந்த நிலையில், சசிகலாவின் பினாமிகள் எனக் கூறி சிலரின் சொத்துகளை வருமானவரித்துறை முடக்கிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் பிறப்பித்திருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, தங்களிடமிருந்த கறுப்புப் பணத்தை சசிகலா தரப்பினர் வெள்ளையாக மாற்றினார்கள் என்கிற தகவல்களின் அடிப்படையில், சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் கடந்த 2017 டிசம்பரில் ரெய்டு நடத்தினர் வருமான வரித்துறையினர்.
அதில், பெரம்பூர் ஸ்பெக்ட்ரம் மாலின் உரிமையாளர்களில் ஒருவரும், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வலது கரமாக இருந்தவருமான ஏ.ஜி.எஸ்.தினகரனின் அலுவலகத்திலும் ரெய்டு நடத்தி அவரது சொத்துகளை முடக்கினர். அவரிடம் வருமானவரித்துறை நடத்திய விசாரணையில், சசிகலாவின் பினாமி என அவர் சொன்னதாகவும், அதனடிப்படையில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றித் தந்ததாகவும் வருமானவரித் துறை பதிவு செய்தது. இது தொடர்பாக வழக்கையும் தொடர்ந்தது வருமானவரித் துறை.
இந்த நிலையில், ஏ.ஜி.எஸ்.தினகரன், ‘’என்னிடம் கைப்பற்றிய டாகுமெண்டுகளை வைத்து சசிகலாவின் பினாமி என வருமானவரித் துறை குற்றம்சாட்டுவது தவறு. அதனடிப்படையின் என் சொத்துகளை முடக்கி வைத்திருப்பதும் தவறு. சசிகலாவின் பண பரிவர்த்தனைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதனால் என் சொத்துகளை முடக்கி வைத்திருக்கும் வருமானவரித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்‘’ எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த மனுவின் மீது நேற்று (25.6.2020) விசாரணை நடத்திய நீதிபதி மகாதேவன், சம்மந்தப்பட்ட மனுவிற்கு அனைத்து ஆவணங்களுடன் 15 நாட்களில் பதில் அளிக்குமாறு வருமானவரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பினாமி சொத்துகள் தடைச் சட்டத்தின் படி தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த வழக்கின் விசாரணை, மீண்டும் லைம் லைட்டுக்கு வரவிருப்பதை, சசிகலாவின் விடுதலையோடு முடிச்சுப் போட்டு விவாதிக்கிறார்கள் அ.தி.மு.க.-வினர்.