தமிழகத்தை அ.தி.மு.க. ஆளும்போதெல்லாம் அதன் எதிர்காலத்தை இந்தியாவை ஆளும் தேசிய கட்சிகள்தான் தீர்மானிக்கின்றன. தி.மு.க., அ.தி.மு.க. பிரிந்தபோது எம்.ஜி.ஆரை இந்திரா காந்தி ஆதரித்தார். அ.தி.மு.க. என்கிற கட்சி வலுப்பெற்றது. ஜானகி, ஜெயலலிதா சண்டையின்போது முதலில் ஒற்றுமையாக இருங்கள் என்று கூறிய ராஜீவ் காந்தி, பின்னர் ஜெயலலிதாவை ஆதரித்தார். ஜானகி அரசியல் துறவறம் பூண்டார்.
சசிகலா சிறைக்கு சென்றபோது எடப்பாடி பழனிசாமியை ஆளும் பா.ஜ.க. ஆதரித்தது. எடப்பாடி நான்கு ஆண்டுகால ஆட்சியைத் தொடர்ந்தார். மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ, அவர்களின் ஆதரவு பெற்ற கட்சிகள்தான் தமிழகத்தில் வலுப்பெறும். இந்த நிகழ்வு இப்பொழுது அ.தி.மு.க.வில் நிகழ்ந்து வரும் குழப்பங்களுக்கும் பொருந்தும்.
எடப்பாடி, ஓ.பி.எஸ்., சசிகலா இந்த மூவரில் யாரை பா.ஜ.க. ஆதரிக்கிறதோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். இந்த சூழ்நிலையில் மூவருமே டெல்லி பா.ஜ.க.வின் தயவை நாடியிருக்கிறார்கள். ஓ.பி.எஸ். எப்பொழுதும் டெல்லி பா.ஜ.க.வின் லைம்லைட்டிலேயே இருப்பவர். எடப்பாடி மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் மூலம் பா.ஜ.க.வின் ஆதரவை பெறுவார். திரிவேணி பில்டர்ஸ் என்கிற அதானிக்கு நெருக்கமான கட்டுமான நிறுவனம்தான் எடப்பாடியையும் பா.ஜ.க.வையும் இணைக்கும் புள்ளி.
சசிகலாவைப் பொறுத்தவரை அவர் சிறைக்கு சென்றபோது பா.ஜ.க. எதிர்ப்பாளராகத்தான் சென்றார். தொடர்ந்து பா.ஜ.க. சசிகலா மீது பாய்ந்தது. இரட்டை இலை வழக்கில் தினகரனை திகார் சிறைக்கே அனுப்பி வைத்தது. தொடர்ந்து வருமான வரித்துறை ரெய்டுகள், சொத்து முடக்கம் என சசிகலாவுக்கு எதிராகவே பா.ஜ.க. செயல்பட்டு வந்தது. சிறையில் இருந்து வெளியே வர தயாராகிக் கொண்டிருக்கும் சசிகலா செய்த முதல் காரியம் பா.ஜ.க.வுடன் இணக்கமாகப்போக முடிவு செய்ததே. அதற்கு அவர் தனது சொந்த பந்தங்கள் யாரையும் நம்பவில்லை.
அவருக்கு நெருக்கமான தொழில் அதிபர்கள் மூலம் ராஜ்நாத்சிங்கை சந்தித்தார். கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா என்றாலும் கட்சி சம்பந்தமான முடிவுகளை மேற்கொள்வதற்கு ராஜ்நாத் சிங், ஜெ.பி. நட்டாவிற்கு உறுதுணையாக இருக்கிறார். ராஜ்நாத்சிங், ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இவர்களுடன் ராஜஸ் தானைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகரான பூபேந்திர யாதவ் ஆகிய நால்வர்தான் தமிழக அரசியலை கையாளு கிறார்கள்.
இதில் தலையான ராஜ்நாத் சிங்கிடம் பேசிய சசிகலாவுக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் ராஜ்நாத்சிங் என்ன சொல்கிறார் என்பதை சசிகலாவிடம் சொல்லுவார்கள். இந்த பேச்சுவார்த்தை ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. படிப்படியாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
இன்னும் ஒரு சிக்னல் கிடைத்தால் சசிகலா அவர் கட்ட வேண்டிய அபராதத் தொகையான 10 கோடி ரூபாயை கட்டிவிடுவார். அவரது விடுதலை ஜனவரி மாதத்திற்கு முன்பே நடந்துவிடும் என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமான மன்னார்குடி வட்டாரத்தினர்.
சசிகலா இதுபோல ஒரு பேச்சுவார்த்தையை நடத்துகிறார் என எடப்பாடிக்கும் தெரியும். இந்த சூழ்நிலையில்தான் திடீரென டி.டி.வி.தினகரன், சசிகலாவுக்காக பா.ஜ.க. தலைவர்களுடன் பேசுகிறேன் என தனி விமானத்தை எடுத்துக்கொண்டு டெல்லிக்குப் போனார். டெல்லிக்குச் சென்ற தினகரன், பியுஷ் கோயலை நேரடியாக சந்திக்க முயன்றார். அதேபோல் பூபேந்திர யாதவிடமும் பேச முயன்றார். இருவரும் செல்போனில் தினகரனிடம் பேசியிருக்கிறார்கள்.
"நாங்கள்தான் அ.தி.மு.க. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என சொல்லியிருக்கிறோம். நீங்கள்போய் சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசி அதற்கான வேலைகளை செய்யுங்கள். எங்களைப் பொறுத்தவரை எடப்பாடி, ஓ.பி.எஸ்., சசிகலா ஆகிய மூவரும் இணைய வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் நிலை'' என பியூஷ்கோயல் விளக்கமாக தினகரனிடம் பேசியிருக்கிறார்.
பியூஷ் கோயலிடம் பேசிவிட்டு வந்த பிறகு சசிகலாவை நேரில் சந்திக்க தினகரன் முயற்சி செய்தார். கரோனா காலத்தை காரணம் காட்டி பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் தினகரனை சந்திக்க அனுமதிக்கவில்லை. தினகரனின் வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியை பெங்களூருவுக்கு அனுப்பி சசிகலாவை சந்திக்க வைக்கத் திட்டமிட்டார் தினகரன்.
வருமான வரித்துறை நோட்டீஸ், சொத்துக்கள் கையகப்படுத்துதல் என சசிகலாவின் பதிலை வாங்குவதற்காக ராஜாசெந்தூர் பாண்டியன் முயற்சித்தார். அதற்கான கடிதங்களை தபாலில் அனுப்பி பதில் பெற்றுக்கொள்ளுங்கள் என சிறை நிர்வாகம் அந்த சந்திப்புக்கும் மறுத்து விட்டது.
இந்த நிலையில் எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.க்குமான மோதல் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பெரியதாக வெடித்தது. அதைத் தொடர்ந்து 28ஆம் தேதி செயற்குழு கூட இருந்த நிலையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லிக்குப் பயணமானார்கள். சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு அ.தி.மு.க.வினரின் பதில் என்ன என பியூஷ் கோயல் எடப்பாடி தரப்பைக் கேட்டுள்ளார்.
சசிகலா என்பவர் சாதாரண ஆள் இல்லை. அவர் ஒரு சர்வாதிகாரி. அவர் பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலையை கொண்டவர். சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைத்தால் அவர் ஓ.பி.எஸ். போல அமைதியாக இருக்க மாட்டார். அவர் அ.தி.மு.க.வை முழுமையாக கைப்பற்றுவார். எதிர்காலத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான நிலையை தைரியமாக எடுப்பார் என முடிந்தவரை சசிகலாவுக்கு எதிராக போட்டுக்கொடுத்து இரண்டு மணி மந்திரிகளும் பேசிய பிறகு குறுக்கிட்ட பியூஷ் கோயல், "சசிகலா அப்படி யொன்றும் இல்லை' என மந்திரியிடமே எதிர்வாதம் செய்திருக்கிறார். இது எடப்பாடியின் தூதர்கள் எதிர்பாராத திருப்பம்.
அ.தி.மு.க. ஒற்றுமையாக இயங்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. அடுத்த வருடம் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் கணிசமான எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க. வைத்திருந்தால் அது பா.ஜ.க.விற்கு உதவும். எனவே அ.தி.மு.க.வை ஒற்றுமைப்படுத்த பா.ஜ.க. விரும்புகிறது. ஆனால் எடப்பாடி அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என பியூஷ் கோயல் நினைக்கிறார்.
டெல்லிக்கு சென்றுவிட்டு வந்த மந்திரிகள் சொன்ன தகவல்களின் அடிப்படையில் சசிகலாவின் டெல்லி மூவ்களை எடைபோட்ட எடப்பாடி, செயற்குழுவில் பேசும்போது, ஓ.பி.எஸ்.ஸையும் முதல்வர் ஆக்கியது சின்னம்மா சசிகலாதான் என்றார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது முதலமைச்சர் பதவிக்கு நியமித்தது சசிகலாதான் என்று இ.பி.எஸ் சொன்னபோது அதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ். அம்மா இருந்தபோது என்னை முதல்வராக்கியது திவாகரன் என்றார்.
கூட்டத்திற்கு நடுவே சின்னம்மா வாழ்க என்ற கோஷங்களும் எதிரொலித்தன என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். செயற்குழுவில் 95 சதவிகிதம் எடப்பாடிக்கு ஆதரவாக பேசினார்கள். 5 சதகிவிதம் யாருக்கும் ஆதரவு இல்லை என பேசினார்கள். ஆனால் துரோகி என ஓ.பி.எஸ்.ஸை குறிப்பிட்டு எடப்பாடி பேசியது ஓ.பி.எஸ்.ஸை காயப்படுத்தியது. இவர் கள் எதிர்த்து வாக்களித்தார்கள். "அன்று சசிகலா ஆதரவு பெற்ற எம்.எல்.ஏ.க்களுடன் நின்று இவர்களது துரோகத்தை முறியடித்தேன். அப்படி நிகழாவிட்டால் தி.மு.க. ஆட்சி வந்திருக்கும். நம்மில் பாதிபேர் இந்நேரம் சிறைக்கு சென்றிருப்போம்'' என இ.பி.எஸ். பேசியது ஓ.பி.எஸ்,ஸை பெருந்துயரத்திக்கு ஆளாக்கியிருக்கிறது. அவர் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. அவரை சமாதானப்படுத்த இ.பி.எஸ். எந்த முயற்சியும் எடுக்கவிலலை.
அதற்கு நேர்மாறாக ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டிற்கு சென்று, முதல்வர் வேட்பாளராக இ.பி.எஸ்.ஸை ஆக்க வேண்டும். அதற்கு மத்திய பா.ஜ.க. அரசு ஆதரவு தர வேண்டும். ஓ.பி.எஸ்.ஸை கண்டித்து வைக்க வேண்டும் என அமைச்சர்கள் செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிஷ்ணன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் சசிகலா டீமோடு அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி பேச்சுவார்த்தையில் இறங்கிவிட்டார்கள்.
இப்படி நாளொரு வண்ணமும், பொழுதொரு வண்ணமாக யார் பா.ஜ.க.வின் ஆதரவை பெறுவது என்பதில் கடும்போட்டி அ.தி.மு.க.வுக்குள்ளும் சசிகலா தரப்பிலிருந்தும் நடந்து வருகிறது. ஒருவேளை சசிகலா அதில் ஜெயித்துவிட்டால், முதல் ஆளாக சரண் அடைவதற்காகத்தான் ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் எங்களை முதல்வராக்கியது சின்னம்மா என செயற்குழுவில் எதிரொலித்திருக்கிறார்கள் என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.
அ.தி.மு.க என்பது ஜெயலலிதா காலத்தைப் போல ஒருவர் அதிகாரத்தின் கீழ் இருந்துவிடக் கூடாது என்றும், இப்போது நடக்கும் மோதல்களால், இவிய்ங்க சண்ட ஓயவே கூடாது என்பதே எங்க தலைமையோட ப்ளான் என்றும் சொல்கிறார் தென்மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி ஒருவர்.