Skip to main content

ஜெயித்த பிறகு எம்.பி.யை பார்க்கவே முடியவில்லை'

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

தனித் தொகுதியான காஞ்சிபுரம் எம்.பி. தொகுதிக்குள் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளும் தி.மு.க. வசம் உள்ளது. அ.தி.மு.க. ஜெயித்த திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. கோதண்டன் டி.டி.வி. அணிக்கு தாவி, பதவி பறிக்கப்பட்டதால் இடைத்தேர்தலைச் சந்திக்கிறது. 

ஜெயலலிதாவுக்கு ராசியான தொகுதி என ஜோதிடர் குறித்துக் கொடுத்தபடி கடந்த எம்.பி. தேர்தலில் ஒன்றிய சேர்மனாக இருந்த மரகதம் குமரவேலுக்கு சீட் வழங்கப்பட்டது. வழக்கமாக திருவள்ளூரில் பிரச்சாரத்தைத் தொடங்கும் ஜெயலலிதா ஜோதிட ராசிப்படி காஞ்சிபுரத்தில் இருந்து துவங்கினார் அ.தி.மு.க. வேட்பாளர். தன்னை எதிர்த்து நின்ற தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை விட 1,46,866 அதிகம் பெற்று வெற்றி பெற்றார். பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட்ட மல்லை சத்யா இரண்டு லட்சம் வாக்குகளுக்குமேல் பெற்று மூன்றாம் இடம் பெற்றார். தனித்து நின்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஸ்வநாதன் முப்பதாயிரம் வாக்குகள் மட்டும் பெற்றார்.

 

mp



"ஜெயித்த பிறகு எம்.பி.யை பார்க்கவே முடியவில்லை' என காஞ்சி எம்.பி. தொகுதி மக்களும் புலம்பும் நிலையில்... மீண்டும் மரகதம் குமரவேலையே நிறுத்தியுள்ளது அ.தி.மு.க. "கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு மீண்டும் போட்டியா' என்று தொகுதி மக்கள் குமுறி வெடிக்கின்றனர். சமீபத்தில் மரகதம் குமரவேல், தன் மகளுக்கு நடத்திய மஞ்சள் நீராட்டு விழாவுக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஸை தடபுடலாக வரவழைத்து சில கோடிகளை செலவிட்டு, தன் கஜானா வலிமையைக் காட்டினார். தொடர்ந்து காஞ்சிபுரம் மேற்கு மா.செ. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆதரவில் இந்தமுறை ர.ர.க்களின்  பல எதிர்ப்புகளைத் தாண்டி சீட் வாங்கி தன்பலத்தைக் காட்டியுள்ளார். இருப்பினும் கட்சியில் உள்ளடி வேலைகளுக்குப் பஞ்சமில்லை. டி.டி.வி.யின் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் முட்டுக்காடு முனுசாமிக்கு திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் என மூன்று தொகுதிகளில்  வாக்குகளைப் பிரிக்கும் வலிமை உள்ளது. 

உத்திரமேரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு தொகுதிகளில் மணல் கொள்ளை, டெண்டர்களில் ஊழல், விவசாயிகளின் நலம், நெசவாளர்கள் பிரச்சனைகள், பன்னாட்டு தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பிரச்சினை என எதிலும் கவனம் செலுத்தாத ஆளும் அ.தி.மு.க. அரசுமீது கடும்விரக்தியில் தொகுதிமக்கள் இருக்க... பா.ம.க.வுடனான கூட்டணி பலம் சற்று தூக்கிநிறுத்தும் என்றாலும் அ.தி.மு.க. அளவுக்கு பா.ஜ.க. அரசு மீது உள்ள அதிருப்தியும் மரகதம் குமரவேலுக்கு பெரும் சவால். 
 

kanchipuram



தி.மு.க. வேட்பாளர் செல்வம், கடந்தமுறை நின்று தோற்றதால் அனுதாபம் ஒருபக்கம் இருந்தாலும், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுந்தர் ஆகிய இரு மா.செ.க்களின் கோஷ்டிப்பூசல் இந்தமுறையும் தொடரத்தான் செய்கிறது. குறிப்பாக... காஞ்சிபுரம் நகரம், மதுராந்தகம் நகரம், அச்சிறுபாக்கம் போன்ற பகுதியில்  உ.பி.க்கள் மத்தியில் உள்ள கோஷ்டிகளை சரி செய்தாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. கணிசமான காங்கிரஸ், இடதுசாரி  வாக்கு வங்கியும்,  காஞ்சிபுரம், மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு, திருப்போரூர் பகுதிகளில் சிறுத்தைகளின் வாக்கு வங்கியும், அ.ம.மு.க.வின் எதிர்ப்பலைகளும் தி.மு.க.வுக்கு தோள் கொடுக்கும். கடந்த 2016-ல் ம.ந.கூ. பிரித்த வாக்குகளும் தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும். அ.தி.மு.க.வுக்கோ கடந்தமுறை மரகதம் உட்பட ஒன்பது பெண் வேட்பாளர்களுக்கு ஜெயலலிதா சீட்டு கொடுத்தார். ஆனால் இந்தமுறை கஜானா பலத்துடன் மரகதம் குமரவேல் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிருப்தியை பணத்தால் வெல்லலாம் என நினைக்கிறது அ.தி.மு.க. ஆளுங்கட்சி மீதான எதிர்ப்பலையை சாதகமாக்க நினைக்கிறது தி.மு.க.