நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் 360 யூ-டியூப் சேனலில் 'தமிழன் என்றோர் இனமுண்டு' என்ற நிகழ்ச்சி வாயிலாக தமிழ் மொழியின் வரலாறு, தமிழர்களின் வரலாறு, தமிழ் மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட தமிழ் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிவருகிறார். அந்த வகையில், சமீபத்தில் எழுந்த தமிழ்நாடு - தமிழகம் சர்ச்சை குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ் இன, மொழி அடையாளங்களை அழிப்பதற்கான முயற்சி எப்படித் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது என கடந்த பகுதியில் பார்த்தோம். நம் வருங்கால சந்ததியினரின் பாடப்புத்தகங்களில் தமிழ், தமிழர் வரலாறு குறித்த தகவல்களே இடம்பெறாத சூழலை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். தமிழ்நாடு என்ற பெயரே இங்குள்ள சில பேருக்குப் பிரச்சனையாகவுள்ளது. இந்தியா என்று ஒரு நாடு இருக்கும்போது, அதன் ஒரு பகுதியாக இருக்கும் மாநிலத்தை எதற்கு தமிழ்நாடு எனக் கூற வேண்டும்... பழைய இலக்கியங்களில்கூட தமிழ்நாடு என்ற வார்த்தை எங்குமேயில்லையே... ஆகையால், இனி தமிழகம் என்றுதான் குறிப்பிட வேண்டும்... என்கிற ரீதியில் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.
உண்மையிலேயே இலக்கியங்களில் தமிழ்நாடு என்ற வார்த்தை இல்லையா? தமிழ்நாடு என்று இலக்கியங்களில் எங்கும் இல்லை என்று கூறுவது நகைப்புக்குரிய விஷயம். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பறம்பு நாடு, தொண்டை நாடு என்று இந்த நிலப்பகுதி அடையாளப்படுத்தப்பட்ட காலத்திய இலக்கியங்களில்கூட தமிழ்நாடு என்ற வார்த்தையைக் காணமுடிகிறது. கதை அளவிலும் அது சொல்லப்பட்ட விதத்திலும் எந்த சமரசமும் இல்லாமல் திகழ்கிற சிலப்பதிகாரத்தை முழுமையான ஒரு தமிழின இலக்கியம் என்று குறிப்பிடலாம். அந்த சிலப்பதிகாரத்தில், 'இமிழ்கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்' என்ற வரி ஒரிடத்தில் இடம்பெற்றுள்ளது. மற்றொரு இடத்தில், 'தென்தமிழ்நாடு ஆளும் வேந்தர்' என்ற வரி இடம்பெற்றுள்ளது. இலக்கியங்களில் எங்காவது தமிழ்நாடு என இருக்கிறதா என்று இவர்கள் கேட்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி தென்தமிழ்நாடு, வடதமிழ்நாடு எனத் தமிழ்நாட்டைப் பிரித்து அழைத்ததற்கான சான்றுகள் உள்ளன. மேலும், 'தண்டமிழ் வேலி தமிழ்நாட்டு...' என்ற ஒரு வரி பரிபாடலில் இடம்பெற்றுள்ளது.
தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர், தன்னுடைய உரையில் 'நும் நாடு யாதெனில் தமிழ்நாடு என்றல்' எனக் குறிப்பிடுகிறார். அதாவது, உன்னுடைய நாடு எது என்று யாராவது கேட்டால் தமிழ்நாடு எனக் கூறு என்கிறார். இதுபோல தமிழ்நாடு என்ற வார்த்தை இலக்கியங்களில் இருப்பதற்குப் பல ஆதாரங்களை நம்மால் கூறமுடியும். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த உண்மையான தேசியம் பாடிய மகாகவி பாரதியாரும், 'செந்தமிழ் நாடெனும் போதிலே...' எனப் பாடியுள்ளார். அந்தப் பாடல் நான்கு வரிகளுடைய பத்து பத்திகள் கொண்டது. மொத்தம் 140 வார்த்தைகள் கொண்ட இப்பாட்டில் 15 முறை தமிழ்நாடு என்ற வார்த்தையைப் பாரதியார் குறிப்பிட்டிருப்பார். பாரதியாரை கொண்டாடுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. நாம் அவரைக் கொண்டாடுவதற்கு முக்கியக் காரணம் அவரது தமிழ் உணர்வு. பிராமண சமூகத்தில் பிறந்திருந்தாலும் பூணூலை பாரதியார் கழட்டிவிட்டார். சில ஆண்டுகள் கழித்து அவரது மகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டிய சூழல் வருகிறது. அவர்களது குல வழக்கப்படி திருமணத்திற்கு முன் கன்னிகாதானம் செய்ய வேண்டும். அதைச் செய்ய வேண்டுமென்றால் பாரதியார் மறுபடியும் பூணூல் அணிய வேண்டும். மகளுக்காக மீண்டும் பூணூல் அணிந்து, கன்னிகாதானம் செய்துகொடுக்கிறார் பாரதியார். அவர் மீண்டும் பூணூல் அணிந்ததைப் பலர் கிண்டல் செய்தனர். அதற்குப் பாரதியார், "தமிழ்க் கவிஞன் என்ற உயர்ந்த இடத்தில் நான் இருக்கிறேன். என்னுடைய மகளின் திருமணத்திற்காகப் பிராமண அடையாளத்திற்கு இறங்கிவருவது எனக்கு எந்தவகையிலும் கஷ்டமில்லை" எனப் பதிலளித்தார். தமிழ்க்கவிஞன் என்ற அந்தஸ்தை தன்னுடைய பிறப்பைவிட உயர்வாகக் கருதியவர் மகாகவி பாரதியார்.
இன்று தமிழ்நாடு என்றுதான் அழைக்க வேண்டும் எனக் கூறும் திராவிட இயக்கங்களின் ஆதரவாளர்கள்கூட அன்று தமிழ்நாடு என்ற அடையாளத்தை எதிர்த்துள்ளனர். 1950களில் நடந்த ஒரு கூட்டத்தில் தமிழ்நாடு வாழ்க, வாழ்க என்று ம.பொ.சி குரலெழுப்ப, அதற்கெதிராக திராவிட நாடு வாழ்க, வாழ்க என்று கத்திய வரலாறெல்லாம் உண்டு. சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்றுதானே இருந்தது. தமிழ்நாடு என எங்கிருந்து என திராவிட இயக்கத்தவர்களே கேட்டுள்ளனர். மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கையில் அண்டை மாநிலத்திற்கு தாரைவார்க்கப்பட்ட நம்முடைய நிலப்பரப்புகள் தவிர்த்து எஞ்சிய நிலப்பரப்பிற்கு தமிழ்நாடு எனப் பெயர் வைக்க 1967இல் முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணா முடிவெடுக்கிறார். அதற்கான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுகிறது. அந்த தீர்மானத்திற்கு ஆங்கில விளக்கம் எழுதிக்கொடுத்தது ராஜாஜி. அவர் தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் டமில் நாட் (Tamil nad) என்று எழுதியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.பொ.சி அண்ணாவிடம் முறையிடுகிறார். தமிழ்நாடு என உச்சரிப்பதைப்போலவே ஆங்கிலத்திலும் (Thamizh Nadu) இருக்க வேண்டும் எனக் கூற, பெரியவர் கோபித்துக்கொள்வார் என்று கூறி அண்ணா யோசிக்கிறார். அந்த சமயத்தில் அண்ணாவும் ராஜாஜியும் கூட்டணியில் இருந்தனர். அதன்பிறகு, nad என்பதை மட்டும் நாடு என மாற்றிக்கொள்ளலாம் என அண்ணா முடிவெடுத்தார். தமிழ்நாடு என்று எங்கிருக்கிறது என அன்று கேட்ட திராவிட இயக்கத்தார்களின் வாரிசுகள் இன்று தமிழ்நாடு என்றுதான் அழைக்க வேண்டும் என்று பேசுவது மகிழ்ச்சியான விஷயமே.