தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு வழக்கறிஞர் மோகன் பதிலளிக்கின்றார். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு,
சாத்தான் குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது. உயர்நீதிமன்றமே நேரடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்தச் சம்பவங்கள் எல்லாம் இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழக அரசாங்கம் குறிப்பாக காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் அவர்கள் இந்த விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படி நடந்துகொள்ளவில்லை. மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டார்கள். இந்தச் சம்பவத்தைப் போன்று தமிழகத்தில் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன. வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடைபெற்றன. தேவாரம் தலைமையில் நடைபெற்ற வீரப்பன் தேடுதல் காவல் குழுவினர் இந்த அதிகார துஷ்பிரயோத்தில் ஈடுபட்டனர். சில சம்பவங்கள் வெளியே தெரிந்தது. பல சம்பவங்கள் வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டது. அதைப் போல இந்தக் கொலை சம்பவத்தையும் ஆட்சியாளர்கள் மூடி மறைத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் நீதிமன்றம் தலையிட்டதால் தமிழக ஆட்சியாளர்கள் அதற்காகச் சில நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியதாயிற்று. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைக் கைது செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஒரு காவல்நிலைய மரணம் என்றால் ஒரு மாஜிஸ்திரேட் அந்த விசாரணையைக் கவனமாக மேற்கொள்வார். புலன் விசாரணை என்பது காவல்துறையினர் செய்ய வேண்டும். அது அவர்களுக்கே உரித்தான ஒன்று. ஆனால் காவல்நிலைய மரணங்கள் என்பது இந்தியாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் நீதிபதி தலைமையில் அந்த விசாரணை நடக்க வேண்டும் என்று சட்டப்பிரிவு மாற்றி அமைக்கப்பட்டது. அந்த விசாரணை என்பது காவல்துறை விசாரணை போல் அல்லாமல் சுயசார்பு உடைய விசாரணை அமைப்பாக அது செயல்படும். அதே போன்று இந்த வழக்கிலும் நீதிபதி அங்கே சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். பெண் காவலர் ரேவதி அவர்கள் உண்மையைக் கூறியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரும் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கின்றது.
இந்திய காவல்துறை சட்டம் என்பதே இந்தியாவில் விடுதலையை ஒடுக்குவதற்காக 1861 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒன்றுதான். முதல் சுதந்திரப் போராட்டம் வெடித்தது 1857-இல், அதன் பிறகு தான் இந்தியாவில் இந்த மாதிரியான போராட்டங்கள் அடிக்கடி வெடிக்கும் வாய்ப்பிருப்பதாகக் கருதி ஆங்கிலேயர்கள் இந்தக் காவல் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அந்தக் காவல் சட்டம் 1861 சுதந்திரம் அடைந்த பிறகு, இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காவல்துறை ஒடுக்குமுறை கருவியாக இருக்கிறதே தவிர அது ஜனநாயகப்படுத்தப்படவில்லை. அவ்வாறு காவல்துறை இருப்பதே இந்தப் பாடுபாதகச் செயலைச் செய்வதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே காவல்துறை முறைப்படுத்த வேண்டும். ஜனநாய முறையில் அதன் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மைக்கு உட்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும், இவ்வாறு கூறியுள்ளார்.