Skip to main content

சொந்த பந்தங்களே வாங்க தயங்குகிறபோது... ஊரடங்கு காலத்தில் உயிர்த்தெழுந்த மனித  மாண்பு! -மதம் கடந்த சேவை!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020
 service

 

கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை, சொந்த பந்தங்களே வாங்கத் தயங்குகிறார்கள். பலர் நீங்களே உடலை அடக்கம் செய்துவிடுங்கள் என்று சுகாதாரப் பணியாளர்களிடம் எழுதிக் கொடுக்கிறார்கள். எங்கே அந்த உடலை தொட்டால் தொற்று பரவிவிடுமோ என்கிற அச்சம் மக்களைச் சூழ்ந்திருக்கிறது.

இந்த அச்சம்தான் மிகச்சிறந்த மருத்துவ சேவைகளைச் செய்தவரான மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்யவிடாமல், ஆம்புலன்ஸ் மீது கல்வீசி, கட்டைகளால் தாக்கி விரட்டியடிக்கச் செய்தது. புதுச்சேரி மாநிலத்தில் முதன்முதலாக கரோனாவால் இறந்தவரின் உடலை, அவசர அவசரமாக அடக்கம் செய்யப்போய் சுகாதாரப் பணியாளர்களே குழிக்குள் வீசிவிட்டுச் சென்ற கொடூரத்திற்கும், இதே அச்சம்தான் காரணம். தொற்று ஏற்பட்டவரின் குடும்பத்தினரை தனிமைப்படுத்தி இருப்பதாலும், அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

இப்படி ஒட்டுமொத்த சமூகமும் கையறு நிலையில் இருக்கும் இக்கட்டான சூழலில், கோவிட்-19 வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்யும் அரும்பணியினைத் தங்கள் பொறுப்பில் எடுத்து, சேவையாக செய்து வருகிறார்கள் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த தோழர்கள். அதுபோலவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ. இதன் அரசியல் அமைப்பு) தோழர்களும் இந்த சேவையை முழுவீச்சில் செய்து வருகின்றனர்.

த.மு.மு.கவினரால் தற்போது வரை தமிழகம் முழுவதும் 125 பேரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஊரடங்கு சமயத்தில் கரோனா அல்லாமல் வேறு காரணங்களுக்காக இறந்தவர்களின் உடல்களையும் த.மு.மு.க.வினர் நல்லடக்கம் செய்கின்றனர்.

இதுதொடர்பாக த.மு.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனியிடம் நாம் பேசிய போது, “நீங்கள் நடந்துசெல்லும் பாதையில் கிடக்கும் முள்ளை, பிறரின் நலனை எண்ணி தூக்கி வீசுவதைக்கூட இறைவணக்கம் தான் என்கிறார் நபிகள் நாயகம். இந்த அடிப்படைப் பயிற்சியை இயக்கத்தின் தொடக்க காலத்திலிருந்து கொடுத்து வருகிறோம்.

இதன் விளைவாக, 2004ல் சுனாமி தாக்கியபோது எங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக களத்தில் நின்றார்கள். தரங்கம்பாடியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையிலிருந்த 5 உடல்களை தூய்மை பணியாளர்களே அப்புறப்படுத்த தயங்கியபோது, எங்கள் தோழர்களே அடக்கம் செய்தார்கள். இதுபோன்ற எல்லா பேரிடர் சமயத்திலும் த.மு.மு.க. தோழர்கள் முன்னின்று உதவியிருக்கிறார்கள்.

 

service

 

இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பிரச்சனைகளைத் தந்திருக்கிறது கரோனா. இதில் முக்கியமானது கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம் செய்யமுடியாமல் போகும் கொடுமை. எனவே, கரோனா அச்சத்தின் காரணமாக, மனித மாண்பை இழக்கும் இந்த இழிநிலையை உணர்ந்து, கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய முடிவுசெய்தோம். அச்சப்படுவோர் சாதி, மத பேதமின்றி உடல்களை எங்களிடம் தாருங்கள், நாங்கள் முறைப்படி நல்லடக்கம் செய்கிறோம் என கோரிக்கையை முன்வைத்தோம். எங்கள் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழகம் முழுவதும் இதற்காக குழுக்களை அமைத்தார்.

 

service

 

இதுவரை 125 உடல்களை அடக்கம் செய்திருக்கிறோம். கரோனாவால் உயிரிழந்த தமிழக பள்ளிக் கல்வித்துறையின் இணைச் செயலாளர் ராமச்சந்திரனின் உடலை, எங்களது அண்ணா நகர் தோழர்கள்தான் அடக்கம் செய்தார்கள். உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி இருக்கும் நெறிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பு உபகரணங்களின் துணையோடு இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு துணிச்சல் மட்டுமே போதுமானதாக இல்லை, போட்டி போட்டுக்கொண்டு உதவக்கூடிய பணியும் இதுவல்ல. இதன்மூலம் எந்த தனிமனித அடையாளமும் கிடைக்கப் போவதில்லை. இறைவன் பார்க்கிறான் என்ற எண்ணத்தில் கடமையைச் செய்கிறோம்'' என்றார் உருக்கமாக.

இதேபோல், பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள், கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். புதுச்சேரியில் கரோனாவால் மரணமடைந்தவரின் உடல் புதைகுழிக்குள் தூக்கி வீசப்பட்ட காட்சி, சமூக வலைதளங்களில் பரவியதை பார்த்து பதறி, உடனடியாக அந்த மாநில அரசை தொடர்புகொண்டு, உடல்களை அடக்கம் செய்யும் பணிக்கு தங்களை அனுமதிக்க கோரினர், முதல்வர் நாராயணசாமியும் அனுமதியளித்தார். இதுவரை 11க்கும் மேற்பட்ட உடல்களை அங்கே அடக்கம் செய்துள்ளனர் இந்த அமைப்பினர்.

சென்னையிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் தொடர்ந்து அழைப்புகள் வரவே, கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாகவும் மரியாதையாகவும் எடுத்துச் சென்று அடக்கம் செய்வதில் துணை நின்றுள்ளனர். பிராமண குடும்பத்தினர் தங்கள் மத வழக்கப்படி சடங்குகள் செய்ய வேண்டும் என்றபோது அதற்கும் உதவி செய்து, அதன்பின் இறுதி நிகழ்வு நடைபெற்றுள்ளது.

“இதுவரை சென்னையில் 69 உடல்களை அடக்கம் செய்துள்ளோம். 2 உடல்களை எரியூட்டி உள்ளோம். உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி உரிய பாதுகாப்பு உடைகள் அணிந்து, 12 அடி ஆழக்குழியில் நல்லடக்கம் செய்கிறோம்’’ என்கிறார் எஸ்.டி.பி.ஐ. ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம்.

‘மதம் கடந்து வெளிப்படுகிறது மனித மாண்பு.’