“நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களில் பலரும், தங்களது அதிகாரத்தை, மக்கள் நலனுக்காகப் பயன்படுத்துவது இல்லை. தலைமைப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் என 5 அடுக்குமுறை உள்ளது. இவர்கள், சாலை மற்றும் இதர பணிகளுக்கு மதிப்பீடு செய்து, பணத்தை அனுமதிக்கும் அதிகாரத்தை, நேர்மையாகப் பயன்படுத்தினால், இத்துறையில் ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வரை, மக்கள் பணம் விரயமாவதைத் தடுக்க முடியும். இவர்களோ, அரசியல்வாதிகள் எப்படியெல்லாமோ பணத்தைச் சுருட்டுவதற்கு வழி ஏற்படுத்தி தருகின்றனர். வெளிப்படையாக கமிஷன் பெறுவதும் இத்துறையில் அங்கீகரிக்கப்படுகிறது’’ என்கிறார் அத்துறையின் நேர்மையான பொறியாளர் ஒருவர்.
தற்போது, கோட்டபொறியாளருக்கு, திட்ட மதிப்பீடு ஒன்றுக்கு, ரூ.2 லட்சம் வரை அனுமதி வழங்கும் அதிகாரம் நடைமுறையில் உள்ளது. இந்த அதிகாரத்தை வைத்து, தமிழகம் முழுவதும், பெரிய அளவில், கொள்ளையடிக்கின்றனர். அதாவது, தடுப்புச் சுவர் என்ற பெயரில், ரூ.2 லட்சத்துக்கு மதிப்பீடு வழங்கும் அதிகாரம், தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு அலுவலகத்திற்கு குறைந்தபட்சம் 50 தடுப்புச் சுவர்களுக்காவது எஸ்டிமேட் தயாரிப்பார்கள். அதற்கான ஒப்பந்தப் பணிகளை, சின்ன ஒப்பந்தக்காரர்கள் மூலம் செய்வதற்கு கோட்ட பொறியாளர் அனுமதியளிப்பார். அவர்களிடமிருந்து 30 பெர்சன்டேஜ் கமிஷனை நேரடியாக, அவர் பெற்றுக்கொள்வார். அதன்பிறகு, உதவி கோட்ட பொறியாளருக்கும், உதவி பொறியாளருக்கும் தலா 5 பெர்சன்டேஜ் என, மொத்தம் 40 பெர்சன்டேஜ், முன்கூட்டியே போய்ச் சேர்ந்து விடும். அடுத்து, விரைவாகப் பணிகளை முடிக்கச் செய்து, ஒப்பந்தக்காரர்கள் பில் தொகையைப் பெறும்போது, அலுவலகச் செலவுக்கென்று 10 பெர்சன்ட் தொகையைக் கொடுத்தாக வேண்டும். ஆக, தடுப்புச்சுவரின் 2 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், ரூ.1 லட்சம், பெர்சன்டேஜ் கணக்கில் போய்விடும். அதனால், மதிப்பீட்டில் உள்ளபடி பணி நடப்பதில்லை. தேவையே இல்லாத இடத்தில் தடுப்புச் சுவர் கட்டவேண்டும் என்று மதிப்பீடு செய்வதால், ஒரு கோட்டத்தில் 5 பிரிவாக அலுவலகங்கள் இருந் தால், குறைந்தபட்சம் ரூ.5 கோடி விரயமாகிவிடும். தமிழகம் முழுவதும் 300 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. ஒரு அலுவலகத்துக்கு ரூ.5 கோடி என்றால், மொத்தம் ரூ.1,500 கோடி ஆகிறது. ஆண்டுக்கு இருமுறை என்பதால், ரூ.3,000 கோடி வரை ஊழல் நடக்கிறது. கரோனா காலத்திலும் ஊழல் குறையவில்லை.
"திட்ட மதிப்பீடு மற்றும் தடுப்புச்சுவர் கட்ட வேண்டிய அவசியம் உள்ள இடங்களைத் தேர்வு செய்யும் அதிகாரம், அந்தந்த பகுதி மக்களிடம் இருந்தால் ஊழலைத் தடுக்கலாம். அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டால், 90 பெர்சன்ட் ஊழலை இல்லாமல் செய்துவிட முடியும்'' என்றார் நேர்மையான அதிகாரி.
பெர்சண்டேஜ் உலகில் நேர்மைக்கு ஏது இடம்?
-ராம்கி