ஆட்சியில் மட்டுமல்லாது கட்சியிலும் தனது அதிகாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.
தேர்தலுக்கு முன்பு சசிகலா விடுதலையாவார், கட்சி நிர்வாகிகள் அவரது பக்கம் சென்றுவிடுவார்கள் என்ற பேச்சு இருப்பதால் அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஓ.பி.எஸ்.சுக்கு தப்பித்தவறி கூட வாய்ப்பு கொடுத்துவிடக் கூடாது என்றும் எடப்பாடி கணக்குப்போடுகிறார் எனக் கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
தான் முதல்வராக இருந்தாலும் கட்சியில் தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் ஆக்கிவிட்டு, தொடர்ந்து ஓ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளராக இருப்பதை எடப்பாடியால் ஜீரணிக்க முடியவில்லை. அதோடு, சசிகலா ரீலீஸ் ஆவதற்குள் கட்சியிலும் தன்னை வலுவான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்.
எனவே கட்சிப் பதவிகளில் தன் ஆதரவாளர்களுக்கு 60 சதவீதத்தையும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு 40 சதவீதத்தையும் ஒதுக்க வேண்டும் என்பதுதான் அவரது கணக்காக இருக்கிறதாம். மேலும் 3 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று புதிதாக நியமிக்க நினைத்துக்கொண்டிருக்கும் அவர், அவற்றில் பெரும்பாலான பதவிகளில் தனது ஆதரவாளர்களை எப்படியாவது உட்கார வைத்துவிடவேண்டும் என்று கணக்குப் போட்டு வைத்துள்ளார் என்கின்றனர் மேலிட தொடர்பில் உள்ளவர்கள்.