Skip to main content

பள்ளிக் கல்வியின் மீது மோடி அரசின் கரோனா தாக்குதல்

Published on 22/07/2020 | Edited on 22/07/2020

 

cbse

 

லகமே கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்றவும் படாதபாடு படுகிற நேரத்தில், மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு நாடே முடங்கியுள்ள இச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் கொள்கைத் திட்டங்களை நிறைவேற்றுவதில் தீவிரமாகச் செயல்படுகிறது.


முதலில் பொருளாதாரத்தில் கை வைத்தார்கள். 20 இலட்சம் கோடி(?) கரோனா நிவாரணத் திட்டம் என்ற பெயரில், இந்நாட்டின் அரசுத்துறைகள் அனைத்தும் தனியார் முதலீடுகளுக்கு திறந்துவிடப்படும் சீர்திருத்தத்தை அறிவித்தார்கள். இப்போது பள்ளிக்கல்வித் திட்டத்தில் கைவைத்துள்ளார்கள்.

இந்திய ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கிவரும் மத்திய பள்ளிக்கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., தனது பள்ளிக்கல்வித் திட்டத்தில் 9வது முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் இருந்து 190 பாடங்களை நீக்கியிருக்கிறது. கரோனா முழு முடக்கத்தால் பள்ளிகள் இயங்காத நிலையில், மாணாக்கர்களின் கல்விச் சுமையைக் குறைப்பதற்காக, 2020-21ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதி குறைக்கப்படுவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார்.

உண்மையில் இந்த அக்கறை மாணாக்கர்களின் மீதானது அல்ல. மாறாக, இந்துத்துவக் கொள்கைக்கு ‘முரணான’ பாடங்களை ‘சுமையாக கருதியே நீக்கியுள்ளார்கள்.

பாடங்கள் நீக்கப்பட்டுள்ள நடவடிக்கையை உற்று கவனிக்கும் எவரும், இது பா.ஜ.க.வும், அதன் மூலமாகத் திகழும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கைப் பிரதிபலிப்பும் என்பதை எளிதாகப் புரிந்துகொள்வார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில்  (Preamble of the Constitution of India) அடிப்படையானவை என்று கூறப்பட்டுள்ள, “இந்தியா ஒரு ஜனநாயக, மதச்சார்பற்ற, சோசலிசக் குடியரசு’’ என்கிற வரியிலுள்ள ஜனநாயகம், மதச் சார்பின்மை ஆகியனவும், அரசமைப்பின் முதல் உறுப்பில் கூறப்பட்டுள்ள பல்வேறு மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா’ என்பதில் மாநிலங்களின் இருப்பு மற்றும் அவசியம், கூட்டாட்சி அமைப்பு ஆகியன பற்றிய பாடங்களைத் தெரிவுசெய்து நீக்கியுள்ளது மோடி அரசு.

இந்நாட்டு மக்களின் குடியுரிமை நிர்ணயம் தொடர்பாக மோடி அரசு மேற்கொண்ட திருத்தத்தின் விளைவாக நாடெங்கிலும் ஏற்பட்ட எதிர்ப்பு, குடியுரிமை தொடர்பான பாடத்தை நீக்கச் செய்துள்ளது.

ஜனநாயக உரிமைகள் மற்றும் இந்திய அரசமைப்பின் கட்டமைப்பு ஆகிய இந்தியக் குடியரசின் அடிப்படைகளை மாணாக்கர் களுக்கு விளக்கும் பாடங்கள், 9ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்தே நீக்கப்படுகின்றன. அதுபோலவே, 10ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் இருந்து, இந்நாட்டின் ஜனநாயகத்திற்கு வேராகத் திகழும் பன்முகத்தன்மை, எதிராகத் திகழும் சாதி-மதம் மற்றும் பாலின சமத்துவமின்மை, இவற்றால் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியன தங்களுடைய கொள்கைக்கு முரணாக உள்ளதென்பதாலேயே இந்துத்துவ பார்வையுடன் நீக்கப்பட்டுள்ளன.

11ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியன ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கப் பரிவாரங்களால் தொடர்ந்து எதிர்க்கப்படும் கொள்கைகள் என்பதை நாடறியும். 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள பாடங்கள் இன்றைய அரசின் பொருளாதாரப் பாதைக்கு முற்றிலும் முரணானவையாகும். இந்நாட்டின் வளங்களை அந்நிய முதலீட்டிற்கும், சுரண்டலுக்கும் திறந்துவிடும் கொள்கை கொண்ட கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கும் நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான பாடங்கள் ஒரு எதிர் சிந்தனையையே ஏற்படுத்து மல்லவா?

‘திட்ட ஆணையமும் ஐந்தாண்டுத் திட்டங்களும்’ மற்றும் திட்டமிட்ட முன்னேற்றம்’ ஆகியன, 'நிதி ஆயோக்' எனும் அமைப்பு இந்நாட்டின் பொருளாதாரப் போக்கை நிர்ணயிக்கும் அமைப்பாக வந்துவிட்ட பின்னர் மாணாக்கர்களுக்கு அதைப் பற்றியெல்லாம் நினைவூட்டலாமா? எனவே, மிகத்தீவிரமாக சிந்தித்தே இந்தப் ‘பாடங்களை நீக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



                http://onelink.to/nknapp

 

எந்தவொரு பாசிச அரசும் செய்யக்கூடிய அதே வழியில் - மிகச்சரியாகக் கல்வியில் இருந்து தொடங்குகிறார்கள். இதிலிருந்து இந்நாட்டு மாணாக்கர்களும், மக்களும், அறிவுஜீவிகளும் அறிந்துகொள்ள வேண்டியது, எது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையோ அதுவே இந்நாட்டின் அரசியல் அமைப்பாக நிலைநிறுத்தும் முயற்சியின் முதல்படி இதுவாகும்.

இந்த மாற்றங்களெல்லாம் சி.பி.எஸ்.இ. மாணாக்கர்களுக்குதானே என்று நினைப்போர்... மோடி அரசு, மாநிலங்கள்மீது திணிக்கப்போகும் புதியக் கல்விக் கொள்கையின் கீழ் பாடத்திட்டங்களை வரையறை செய்யும் அதிகாரம் ராஷ்ட்ரிய சிக்சா ஆயோக் (தேசக் கல்வி ஆணையம்) எனும் பிரதமரின் தலைமையிலான அமைப்பிடமே இருக்கிறது. அது வரையறை செய்யும் பாடத்திட்டத்தில் இருந்து சில மாற்றங்களை மட்டுமே, அதுவும் அடிப்படை பாடக் கட்டமைப்புக்கு உட்பட்டே மாநில அரசுகள் செய்ய முடியும். எனவே, இன்று சி.பி.எஸ்.இ. மாணாக்கர்கள் தலையில் இறக்கப்படும் இடி, நாளை நாடு முழுவதுமுள்ள மாணாக்கர்களின் தலையிலும் இறங்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

நீண்டநெடிய சமூக, அரசியல் வரலாறு கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில், இந்தியக் குடியரசின் அமைவும் இருப்பும் உலகளவில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் அமைப்பாகும். அதற்குக் காரணம் இந்நாடு அமைத்துக்கொண்ட சுதந்திர ஜனநாயக, மதச்சார்பற்ற, சோசலிச குடியரசு எனும் அடிப்படையாகும். இந்த அடிப்படையைக் காப்பாற்றும் எண்ணத்துடன் அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றிணைதல் அவசியம்.


-கா.அய்யநாதன்