ஊழலுக்கு எதிரான கட்சி என்று ‘சாமானிய மனிதன்’ எனும் அர்த்தம் கொண்ட ஆம் ஆத்மி கட்சி 2012ல் டெல்லியில் ஒரு மாநிலக் கட்சியாக உருவானது. அது இன்று இந்திய நாட்டின் தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு அரசியல் கட்சி தேசியக் கட்சியாக வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அப்படி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட அந்தக் கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு குறைந்தது இரண்டு இடங்களையும், 6 சதவீத வாக்குகளையும் பெற வேண்டும். அதன்படி தற்போது இந்தியாவில் காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ்வாதி ஆகிய 7 காட்சிகள் தேசியக் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் ஆம் ஆத்மி இணைந்துள்ளது.
அரசு அதிகாரி டூ அரசியல்வாதி:
ஹரியானா மாநிலத்தில் சிறிய கிராமத்தில் பிறந்த அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியக் குடியுரிமைப் பணிகளில் ஒன்றான இந்திய வருவாய்த்துறை பணியில் சேர்ந்து டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் அரசு துறைகளில் தகவல்கள் வெளிப்படையாக இல்லாமையே ஊழலுக்கு வழிவகுப்பதை உணர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், தனது பணியில் இருந்து தற்காலிக ஓய்வு பெற்று டெல்லியை மையமாகக் கொண்ட ‘பரிவர்த்தன்’ என்ற குடிமக்கள் இயக்கத்தைத் தொடங்கி லட்சம் ஊழல் தொடர்பான மக்கள் புகார்களை விசாரித்து தீர்வுக்கு வழிவகை செய்தார். இப்படி தொடர்ந்து ஊழலுக்கு எதிராகவும், சமூக நலன் சார்ந்தும் குரல் கொடுத்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 2012 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி என்ற கட்சியைத் தொடங்கினார்.
தேசியக் கட்சியின் முதல் விதை:
ஆம் ஆத்மிக்கு கெஜ்ரிவால் எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு கெஜ்ரிவாலின் அரசியல் வருகைக்கு அண்ணா ஹசாரேவும் முக்கியம். கடந்த 2011 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2ஜி, நிலக்கரி, காமன்வெல்த் போட்டி நடத்தியதில் ஊழல் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சந்தித்தது. அப்போது இதனை எதிர்த்து அண்ணா ஹசாரே, ஊழல் செய்யும் உயர்பொறுப்பில் இருப்பவர்களைத் தண்டிக்கும் ‘ஜன் லோக்பால்’ திட்டத்தை அமல்படுத்த வேண்டி டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். 74 வயதில் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அண்ணா ஹசாரேவுக்கு பலர் ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் குதித்தனர். அதில் முக்கியமானவர் அரவிந்த் கெஜ்ரிவால். அதன் பின் லோக்பால் குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் நிராகரிக்கப்பட்டு, பின்பு தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் ஜன் லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அண்ணா ஹசாரே எதற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினாரோ அது அந்தச் சட்டத்தில் நிறைவேற்றப்பட்டதா என்பது வேறு கதை..
இதற்கிடையில் அண்ணா ஹசாரேவிடம் இருந்து பிரிந்த கெஜ்ரிவால், தனது நண்பர் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் ஆம் ஆத்மி என்ற கட்சியைத் தொடங்கினார். அதன் பிறகு அடுத்தாண்டே அதாவது 2013 இல் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 28 தொகுதிகளைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி. இந்தத் தேர்தலில் 15 ஆண்டுகளாக டெல்லியை ஆண்டு வந்த காங்கிரஸின் முதல்வர் ஷீலா தீக்ஷித்தை, புதுதில்லி சட்டமன்றத் தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தோற்கடித்தார். ஆனால், அதே காங்கிரசின் ஆதரவோடு தொங்கு சட்டப்பேரவை மூலம் ஆட்சியமைத்து முதல்வரானார் அரவிந்த் கெஜ்ரிவால்.
ஆட்சி அமைத்த 49 நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக ஆம் ஆத்மிக்கு கொடுத்து வந்த ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெற, ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன்பிறகு தீவிர முனைப்புடன் மக்கள் பணியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி, வாழ்வா சாவா என்ற நெருக்கடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து 70 தொகுதிகளில் 67ல் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மீண்டும் டெல்லி முதல்வரானார் கெஜ்ரிவால். இந்த வெற்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.
தொடர் வெற்றியும்... தேசிய அங்கீகாரமும்:
2013, 2015 என இரண்டு வெற்றிகளைக் கண்ட ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக 2020 ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இப்படி மாநில அளவில் சம்பவம் செய்துகொண்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தலில் கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, டெல்லியைத் தாண்டி கோவாவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும், பஞ்சாபில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியையும் அமைத்தது. பஞ்சாப் தந்த தேர்தல் வெற்றியின் உத்வேகத்தில் அதே முனைப்புடன் குஜராத் தேர்தலிலும் ஆம் ஆத்மி போட்டியிட்டு ஐந்து தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதோடு 14 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி, கோவா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மாநிலக் கட்சியாக அங்கீகரிக்க தேவையான 2 தொகுதிகளைக் கைப்பற்றியதோடு, அங்கு 6 சதவீத வாக்குகளையும் பெற்றது. இருப்பினும் தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட இன்னும் ஒரு மாநிலத்தில் 2 சட்டமன்றத் தொகுதிகளையும், 6 சதவீத வாக்குகளையும் பெற்றாக வேண்டும் என்ற சூழல் இருந்த நிலையில், நேற்று வெளியான குஜராத் தேர்தல் முடிவில் 5 தொகுதிகளைக் கைப்பற்றியும், 14 சதவீத வாக்குகளைப் பெற்றும் தற்போது தேசியக் கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளது.
தேசிய அரசியலில் காங்கிரஸ், பாஜகவை மட்டுமே நம்பியிருந்த மக்களுக்குப் புதியதாக ஆம் ஆத்மி எனும் மாற்று கிடைத்துள்ளது. ஆனால், அது உண்மையில் மக்களுக்கான மாற்றுக்கட்சியா என்பதை அதன் நிலைப்பாடு, செயல்பாடு ஆகியவை தீர்மானிக்கும். அதற்குமேல், மக்கள் அதனை தங்களுக்கான மாற்றுக் கட்சியாக ஏற்றுக்கொள்வார்களாக என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.