Skip to main content

ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!

Published on 17/01/2018 | Edited on 17/01/2018
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம் !

பினராயி விஜயன் நீதி வாங்கித் தருவாரா?  

கடந்த வாரம் கேரள நடிகர்களான நிவின் பாலி, டோவினோ தாமஸ் போன்றவர்கள் 'ஜஸ்டிஸ் ஃபார் ஸ்ரீஜித்' என்ற ஹேஷ்டேகை தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளில் பதிவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் ஒன்று சேர்ந்து ஸ்ரீஜித்துக்காக சாலையில் அணிவகுத்துச் சென்றனர். இதனால் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் இந்த செய்தி சென்று, பின் அவரும் ஸ்ரீஜித்தையும் அவரது தாயாரையும் சந்தித்து அவர்களது வேண்டுகோளைக் கேட்டறிந்தார். அதற்கு அடுத்த நாள், திருவனந்தபுரம்  நாடாளுமன்ற உறுப்பினர்  சஷி தரூர், ஆலப்புழா நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் டெல்லியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து சிபிஐ விசாரணைக்காக கோரிக்கை வைத்தனர். 






ஸ்ரீஜித்தின் வேண்டுகோள்தான் என்ன? ஏன் 2015 ல் இருந்து கேரள  செயலகம் முன்பு போராடி வருகிறார்? ஸ்ரீஜித்தின் சகோதரர் ஸ்ரீஜிவ். இவரை கடந்த 2014ஆம்  ஆண்டு மே மாதத்தில், ஒரு திருட்டு வழக்கில்  விசாரிக்க வேண்டியிருப்பதாக காவலர்கள் அழைத்துச்  சென்றுள்ளனர். ஆனால் அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார் என்று காவலர்கள் கூறியிருக்கிறார்கள். ஸ்ரீஜித்தோ, 'என் சகோதரர் ஸ்ரீஜிவ்  ஒரு  பெண்ணை காதல் செய்தார். அந்தப் பெண்ணின் உறவினர்  தான் அவரை வேறொரு வழக்கில் அழைத்துச்  சென்று என் சகோதரனை கொன்றிருக்கிறார்கள்' என்று கூறுகிறார். தன் சகோதரர் மரணத்தை  சிபிஐ வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்பதே அவரது வேண்டுகோள். 2015ஆம் ஆண்டே கேரள அரசாங்கம் இதனை நிராகரித்தது. அதைத்  தொடர்ந்து தலைமைச் செயலகம் முன்பு தனி ஒரு நபராக கையில் எழுதப்பட்ட பலகைகளுடன் அமர்ந்து போராடத்  தொடங்கியுள்ளார். நாட்கள் கடந்தும் அவரின் மீது கவனம் திருப்பாமல்  இருந்திருக்கிறது அரசாங்கம். கடந்த ஜூன் மாதத்தில், மாநில அரசாங்கம் சார்பில் சிபிஐ இடம் வேண்டுகோள் வைக்கப்பட, சிபிஐ அதையும் நிராகரித்துவிட்டது.





சற்றும் தளராமல் தன் போராட்டத்தை செயல்படுத்திக்கொண்டிருந்தார். அவரது 766 வது நாள் போராட்டத்தில் உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட, பின்னர் செய்தி தொலைக்காட்சிகள்  எல்லாம் அவர் பக்கம் திரும்பியது. கேரள நடிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தியை பதிவிட்டனர். இளைஞர்களும் சமூக வலைத்தளங்களில் 'ஜஸ்டிஸ் ஃபார் ஸ்ரீஜித்' என்று பிரச்சாரம் செய்யத்  தொடங்கினர். தனி ஒரு நபராக போராடிய அவரைக் காண மக்கள் திரண்டனர். இப்பொழுது ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சி வரை போட்டிபோட்டு சிபிஐக்கு பரிந்துரை செய்கின்றனர். 




ஸ்ரீஜித்துடன்  டோவினோ தாமஸ்      

மாவட்ட அளவில் முன்னாள்  பாடி பில்டரான ஸ்ரீஜித் தற்போது எலும்பும் தோலுமாக இருக்கிறார். பிரபலங்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர், மக்கள் கூட்டமும் ஆதரவு தருகிறது. ஸ்ரீஜித் கூறுகையில், "இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்குள்ளாக்கினால் போதும், நான் என் போராட்டத்தைக் கைவிடத்  தயார். ஏனென்றால் எனக்கு போலீஸ் மேல் நம்பிக்கை இல்லை" என்றார். கடைசியில், "தற்போது மக்களும், ஊடகமும் தரும் ஆதரவு நம்பிக்கையை அளிக்கிறது. நீதி வெல்லும்" என்றார். இத்தனை நாள் போராட்டம் யார்  கண்ணுக்கும்  தெரியவில்லை. காரணம் அதற்கு யாராவது வெளிச்சம் தரவேண்டும். இந்த ஒரு  சாமானியரின் மரணத்திற்கு இப்பொழுது முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது, காரணம் எழுநூறு நாட்களுக்கும் மேலான மனம் தளராத போராட்டம். போராடாமல் எத்தனை மரணங்கள் மறைந்துவிட்டனவோ...

சந்தோஷ் குமார்                                                           

சார்ந்த செய்திகள்