தமிழக முதல்வர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் பார்க்காமல் சென்றதால் வீடுகளை இழந்து வீதிகளிலும், முகாம்களிலும் தவித்துவரும் மக்கள் ஆத்திரமடைந்து வேதாரணியம் சாலையில் சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.
கஜா புயலினால் பல்வேறு மாவட்டங்கள் பாதித்துள்ள நிலையில் பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்குவதற்காக நாகை மாவட்டம் வந்த தமிழக முதல்வர், நாகை விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, புஷ்பவனம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு எங்கும் நிற்காமல் வேதாரண்யம் சென்றார். அப்போது தோப்புத்துறை வள்ளியம்மைசாலை, மகாராஜபுரம், குஞ்சான்தோப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வள்ளியம்மை சாலையில் உள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களை தமிழக முதல்வர் பார்க்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் வீடு மற்றும் உடமைகள் பயிர், தென்னை, பூந்தோட்டம், முந்திரி என அனைத்தையும் இழந்த நிலையில் முகாம்களில் தங்கியுள்ள தங்களை பார்க்காமல் ஆறுதல் கூறாமல் சென்றதையும், வீடுகள் கட்டுவது குறித்து உறுதி அளிக்காததாக கருதிய பாதிக்கப்பட்ட மக்கள் நாகை வேதாரண்யம் சாலையில் வழிச்சாலை என்ற இடத்தில் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு உடனடியாக 360 குடும்பத்தாருக்கும் உடனடி நிவாரணம் மட்டுமல்லாமல் குடியிருப்புகளை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கிராம மக்கள் முழக்கமிட்டனர். தமிழக முதல்வர் வந்துள்ள நிலையில் வேதாரண்யம் அருகே சாலை மறியல் நடைபெற்று வருவதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.