15- வது தமிழக சட்டப்பேரவையின் 8 ஆவது கூட்டத்தொடர் இன்று (06.01.2020) காலை 10.00 மணியளவில் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார்.
ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்: தமிழக அரசு திறமையான நிதி மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. 15 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளை தமிழ்நாடு மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது. மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூபாய் 563.50 கோடியில் திட்டம். மேகதாது திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். தமிழகத்தின் ஒப்புதலின்றி பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதித் தரக்கூடாது.
தமிழக மக்கள் எந்த மதம், சமயத்தை பின்பற்றினாலும் அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் கேரள முதல்வரோடு பேசிய, தமிழக முதல்வரின் அணுகுமுறைக்கு பாராட்டு. இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தும். 2018 ஆம் ஆண்டைக்காட்டிலும் 2019ல் தமிழக மீனவர்கள் பிடிபடுவது குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 17 மீனவர்கள் மட்டுமே இலங்கை சிறையில் இருக்கின்றனர். தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு சுமுக தீர்வு காண வேண்டும்.
ரூபாய் 50.50 கோடியில் ஜெயலலிதா நினைவு மண்டபம் விரைவில் கட்டி முடிக்கப்படும். முதல்வரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டம் ஆகஸ்ட் 2019ல் தொடங்கப்பட்டு, 9.77 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 5.18 லட்சம் மனுக்கள் மீது 40 நாள்களுக்குள்ளாகவே தீர்வு காணப்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றிலிருந்து குறைந்தபட்சம் 200 டிஎம்சி நீரையாவது வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல். ரூபாய் 2 ஆயிரம் கோடியில் தனியார் பங்களிப்புடன் 296 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். தமிழ் மொழி, தமிழ் பண்பாட்டை ஊக்குவிப்பதில் அரசு பெருமிதம் கொள்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என அறிவித்ததற்காக முதல்வருக்கு பாராட்டுகள். 2016- 2017 முதல் தமிழகத்தில் ரூபாய் 931.76 கோடியில் 4,871 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. காவிரி ஆற்றின் தூய்மையை மீட்டெடுக்க நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நீர் நிலைகளைத் தூர்வாரியதன் பயனாக, இந்தாண்டு மழை நீரை சேமிக்க முடிந்தது. முதல்வர் முன்பே அறிவித்தபடி, காவிரி- தெற்கு வெள்ளாறு இணைப்புத்திட்டம் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.
மழையாலும், காவிரி நீரை முறையாக கொண்டு சென்றதால், 7லட்சம் ஏக்கர் பரப்பு அதிகரிப்பு. உணவு தானிய உற்பத்தி 115 லட்சம் மெட்ரிக் டன் அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூபாய் 7,200 கோடிக்கு காப்பீடு இழப்பீட்டுத் தொகையை விவசாயிகள பெற்றுள்ளனர். காவிரி- குண்டாறு நதிகள் இணைக்கும் பணியை தமிழக அரசு செயல்படுத்தும். சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூபாய் 1,000 கோடியில் கால்நடை மேம்பாட்டுக்கான ஆராய்ச்சிக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.
நாகை ,மாவட்டம் வெள்ளப்பள்ளத்தில் ரூபாய் 100 கோடியில் மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. மூக்கையூரில் ரூபாய் 120 கோடி, குந்துக்கல்லில் ரூபாய் 100 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள் கட்டும் பணி விரைவில் முடிவடையும். திருவொற்றியூர் குப்பம், தரங்கம்பாடி, முதுநகரில் ரூபாய் 420 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல். தமிழகத்தின் சர்க்கரை ஆலைகளின் மறுமலர்ச்சிக்கு உதவ, மத்திய அரசு சிறப்பு நிதிச்சலுகைகளை அறிவிக்க வேண்டும்.
ஆதார் இணைப்பால் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முடிகிறது. பசுமைச்சுழல், பருவநிலைமாற்ற தழுவல் நிதியின் கீழ் ரூபாய் 4,682 கோடியிலான திட்டங்களுக்கு ஒப்புதல் தேவை. தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட ரூபாய் 1000 ரொக்கம் அளித்ததற்காக முதல்வரை பாராட்டுகிறேன்.
2019- ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10.5 லட்சம் பேருக்கு வேலை தரும் ரூபாய் 3,00,501 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட ரூபாய் 2000 கோடியில் சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படும். சுற்றுலா திட்டத்தின் கீழ் 295 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும். பாதிப்புக்குள்ளாகும் அனைத்து ஏழை, குடும்பங்களுக்கும் விலையில்லா கொசு வலைகள் வழங்கப்படும்.
2019- 2020 ஆம் ஆண்டில் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 12,500 கோடி கடன் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2011-2012 முதல் இது வரை 3,80,000 பசுமை வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 17,850 மெகாவாட் மின் உற்பத்தி திறனை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2016ல் 71,431 ஆக இருந்த விபத்துகளின் எண்ணிக்கை, 2018ல் 63,923 ஆக குறைந்துள்ளது. திருவொற்றியூர்/ விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் 2020 ஆம் ஆண்டில் மத்தியில் முடிவைடையும். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 52.01 கி.மீ தொலைவு பணிகளுக்கு ஜப்பானுடன் நிதியுதவி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இவ்வாறு ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த சிறப்பம்சங்களாகும்.
இதனிடையே ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக எம்.எல்ஏக்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், டி.டி.வி. தினகரன், தமிமுன் அன்சாரி ஆகியோர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.