வாடகைத்தாய் விவகாரம் தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பான பேசு பொருளாக மாறி வருகிறது. இந்த நடைமுறை பல்வேறு வருடங்களாக மிகப்பெரிய பணக்காரர்களிடமும், நடிகர்களிடமும் இருந்து வந்தாலும் தற்போது முன்னணி நடிகைகள் சிலர் இந்த வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது ட்ரெண்டிங்காகி வருவதன் காரணத்தினால் வாடகைத்தாய் சம்பந்தப்பட்ட படங்கள் சமீப காலங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் மீண்டும் ஒரு வாடகைத்தாய் சம்பந்தப்பட்ட படமாக வெளியாகி இருக்கும் இந்த யூகி திரைப்படம் ரசிகர்களை ஈர்த்ததா? இல்லையா?
ஒரு சாலையின் ஓரத்தில் மிகவும் பதட்டமாக நின்று கொண்டிருக்கும் நிறைமாத கர்ப்பிணியான கயல் ஆனந்தி திடீரென அந்தப் பக்கமாக வரும் ஒரு காரில் கடத்தப்படுகிறார். இவரை கண்டுபிடிக்க போலீஸ் டிஎஸ்பி பிரதாப் போத்தன் பிரைவேட் டிடெக்டிவ் நரேனை நியமிக்கிறார். இவருக்கு உதவியாளராக சஸ்பெண்டில் இருக்கும் போலீசான கதிரை அனுப்பி வைக்கிறார். இவர்களின் குழு காணாமல் போன கயல் ஆனந்தியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறது. இன்னொரு பக்கம் சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் நடிகர் நட்டியும் அதே பெண்ணை தன் டீமுடன் இணைந்து தேடி வருகிறார். இவர்களின் கையில் கயல் ஆனந்தி சிக்கினாரா, இல்லையா? கயல் ஆனந்தியை கடத்தியது யார்? அதற்குப் பின்னால் இருக்கும் திடுக்கிடும் மர்மங்கள் என்ன..? என்பதே யூகி படத்தின் மீதி கதை.
படம் ஆரம்பித்து முதல் பாதி முழுவதும் துப்பறியும் காட்சிகள் மூலம் படத்தை நகர்த்தி உள்ளார் இயக்குநர் ஸாக் ஹாரிஸ். இதையடுத்து இரண்டாம் பாதியில் பல்வேறு முடிச்சுகளை அவிழ்த்து யார் யார் எதற்காக யாரைத் தேடுகிறார்கள் என்பதை குழப்பம் இன்றி கொடுத்த இயக்குநர் அதை இன்னமும் சுவாரசியமாக கொடுத்து இருக்கலாம். குறிப்பாக முதல் பாதி முழுவதும் வெறும் துப்பறியும் காட்சிகளை மட்டுமே வைத்து, இரண்டாம் பாதியில் நேர்த்தியான திரைக்கதை மூலம் முடிச்சுகளை அவிழ்த்து ரசிகர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர் முதல் பாதி திரைக்கதையில் இன்னமும் சுவாரசியத்தை கூட்டி இருந்தால் இந்த படம் நிச்சயம் கவனிக்கப்படும் படமாக அமைந்திருக்கும். நல்ல விறுவிறுப்பு ஏற்படும்படியான ஒரு கதையை தேர்ந்தெடுத்த இயக்குநர் அதை குழப்பம் இல்லாமல் கொடுக்க எடுத்த சிரத்தை கொஞ்சம் திரைக்கதையிலும் காட்டி இருந்திருக்கலாம்.
குறிப்பாக படத்தில் மூன்று நாயகர்கள். மூன்று நாயகர்களில் முதன்மை நாயகனாக நரேனை முன்னிறுத்தி திரைக்கதை அமைத்த இயக்குநர் பிற்பகுதிகளில் நடிகர் கதிரை முன்னிறுத்தி அதன் மூலம் திருப்பங்களை ஏற்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். ஆனாலும் மூன்றாம் நபரான நட்டியின் கதாபாத்திரத்தை குழப்பம் நிறைந்ததாகவே அமைத்து கடைசியில் அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்து அந்த விளக்கம் எந்த ஒரு அதிர்வலைகளையும் ஏற்படுத்தாதது படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. ஆனாலும் நரேன், கதிர், கயல் ஆனந்தி, பவித்ரா லட்சுமி, பிரதாப் போத்தன், ஜான்விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நான் லீனியரில் அமைந்து காட்சிகளுக்கு சுவாரசியத்தை ஆங்காங்கே கூட்டவும் செய்துள்ளது. அதுவும் முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியில் அது அழுத்தமாகவும் சற்று விறுவிறுப்பாகவும் அமைந்து படத்தை கரை சேர்க்க முயற்சி செய்து இருக்கிறது.
படத்தின் முதல் நாயகன் நரேன் தனக்கு கொடுத்த வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார். துப்பறியும் காட்சிகளில் சட்டுலான நடிப்பை வெளிப்படுத்தி காட்சிகளை நகர்த்துவதற்கு உதவி புரிந்துள்ளார். இவருக்கு உறுதுணையாகவும், உதவியாகவும் வரும் கதிர் தேவைப்படும் இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இன்னொரு பக்கம் துப்பறியும் கதாபாத்திரத்தில் வரும் நட்டி ஏன் வருகிறார், எதற்காக வருகிறார் என்பது தெரியாத அளவுக்கு குழப்பம் நிறைந்ததாகவே இருந்தாலும் அவருக்கான வேலையை திடமாகவும், சிறப்பாகவும் செய்து விட்டு சென்று இருக்கிறார். டாக்டராக நடித்திருக்கும் நடிகை வினோதினி வைத்தியநாதன் எப்போதும் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
பரிதாபமான நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் கயல் ஆனந்தி. இவரின் இயல்பான நடிப்பு கதாபாத்திரத்திற்கு இயல்பை கூட்டி பார்ப்பவர்களை கலங்கச் செய்துள்ளது. சின்ன கதாபாத்திரத்தில் வந்தாலும் நடிகர் பிரதாப் போத்தன் தன் அனுபவ நடிப்பின் மூலம் கவனம் பெற்றுள்ளார். அதிரிபுதிரி வில்லத்தனம் காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய் வழக்கமான வில்லத்தனம் காட்டி விட்டு சென்றுள்ளார். இவரின் கதாபாத்திரம் காட்சிகளை நகர்த்துவதற்கு உதவியாக இருப்பது படத்திற்கு சற்று பலம் கூட்டி இருக்கிறது.
படத்தில் சின்ன சின்ன பாடல்கள் இருந்தாலும் அவைகளைக் காட்டிலும் பின்னணி இசையில் சற்று படத்தை தாங்கிப் பிடிக்க முயற்சி செய்து உள்ளார் இசையமைப்பாளர் ரஞ்சன் ராஜ். புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை பல்வேறு திருப்பங்களுடன் இரண்டாம் பாதியில் சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தாலும் அதை முதல் பாதியிலும் செய்திருந்தால் இப்படம் குறிப்பிடத்தக்க படமாக மாற நிறைய வாய்ப்பு இருந்திருக்கும்.
யூகி - எளிதில் யூகிக்கும்படி இல்லை!