'கோலமாவு கோகிலா' படத்தின் வெற்றிக்குப் பிறகு 'பீஸ்ட்' இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ‘டாக்டர்’. தனது படங்களில் எப்போதும் கலகலவென்று பேசி நடிக்கும் சிவகார்த்திகேயன் முதல் முறையாகப் பேசாமல் அமைதியாக நடித்திருக்கும் படம். இதுதவிர, சிவகார்த்திகேயனின் வலுவான கம்பேக் படமாக இது இருக்குமா..? எனப் பல எதிர்பார்ப்புகளுடன் வெளியான 'டாக்டர்' படம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா...?
ராணுவத்தில் டாக்டராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கும், பிரியங்கா மோகனுக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது. பிரியங்கா மோகனுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால் சிவகார்த்திகேயனை மணக்க மறுக்கிறார். ஆனால் சிவகார்த்திகேயனுக்கோ பிரியங்காவை விட மனசு இல்லை. இதற்கிடையே பிரியங்காவின் அண்ணன் மகள் திடீரென காணாமல் போகிறார். அவரை யாரோ கடத்திவிட, கடத்தல்காரர்களைக் கண்டுபிடிக்க மிலிட்டரி டாக்டர் சிவகார்த்திகேயன் பிரியங்கா குடும்பத்தின் உதவியோடு களத்தில் குதிக்கிறார். பிறகு சிவகார்த்திகேயன் காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடித்தாரா, இல்லையா? சிவாவின் திருமணம் நடந்ததா, இல்லையா? என்பதே டாக்டர் படத்தின் கதை.
கோலமாவு கோகிலா படம் போல் இந்த படத்தையும் ஒரு டார்க் ஹியூமர் திரில்லர் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் நெல்சன். கோலமாவு கோகிலா படம் பிடித்தவர்களுக்கு இந்த படமும் கண்டிப்பாகப் பிடிக்கும். முந்தைய படத்தில் போதைப் பொருள் கடத்தலை மையப்படுத்திய இயக்குநர், இந்த படத்தில் ஆள் கடத்தலை மையப்படுத்தி ரசிக்கவைக்க முயற்சி செய்துள்ளார். கோ.கோ படத்தில் ஒரு அப்பாவியான குடும்பம் செய்யும் க்ரைம் வேலைகளை மிகுந்த சுவாரஸ்யம் நிறைந்த காமெடி காட்சிகளோடு உருவாக்கியிருப்பார் இயக்குநர் நெல்சன். அதே பாணியை அப்படியே இந்த படத்திலேயும் பின்பற்றியுள்ளார். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான காட்சியமைப்புகளாக இருந்தாலும் அவை இப்படத்திலும் ரசிக்கும்படி அமைந்து அயர்ச்சியைத் தவிர்த்துள்ளது. இருப்பினும், முதல் பாதி வேகமாகவும், இரண்டாம் பாதி சற்று தொய்வுடன் நகர்ந்துள்ளது. வில்லன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் ஆங்காங்கே அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அவற்றின் நீளத்தைச் சற்று குறைத்திருந்தால் இன்னும் கூட படத்தை ரசித்திருக்கலாம்.
யோகிபாபு, கிங்ஸ்லி, சிவா அரவிந்த், சுனில் ரெட்டி, தீபா சம்பந்தப்பட்ட காட்சிகள் கலகலப்பாக அமைந்து படத்தின் வேகத்தைக் கூட்டியுள்ளது. கோ.கோ படத்தில் கிங்ஸ்லி செய்த கதாபாத்திரத்தை அப்படியே இப்படத்தில் பிரதிபலித்துள்ளார் நடிகர் சிவா அரவிந்த். அதுவும் ரசிக்கும்படி அமைந்து கதையை நகர்த்தியுள்ளது. அதேபோல் யோகிபாபு மற்றும் கிங்ஸ்லி ஆகியோர் தங்களது பங்குக்கு ஆங்காங்கே கிடைத்த இடங்களில் எல்லாம் காமெடியில் ஸ்கோர் செய்து கலக்கியுள்ளனர்.
பார்ப்பதற்கு அப்பாவியாக இருக்கும் சிவகார்த்திகேயன் அளவாகப் பேசி அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முகத்தில் அதிகமாகப் பாவனைகளைக் காட்டாமலேயே நடித்துள்ளார். இது கதைக்குப் பொருத்தமாக இருந்தாலும் அவரது ரசிகர்களுக்கு ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததா என்றால்? சந்தேகமே! நாயகி பிரியங்கா மோகன் ஆரம்பத்தில் கலகலப்பாகப் பேசி, பின்னர் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சராசரி கியூட் கதாநாயகி வேலையைச் சரியாகச் செய்துள்ளார். வில்லனாக வரும் நடிகர் வினய் பயமுறுத்த முயற்சி செய்துள்ளார். கதைக்குள் இருக்கும் வில்லத்தனம் இவரது கதாபாத்திரத்துக்குள் இருக்க மறுக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இவரது கதாபாத்திரத்தை சில இடங்களில் டம்மி செய்துள்ளனர் என்றே சொல்லத் தோன்றுகிறது.
இளவரசு, அர்ச்சனா, மிளிந்த் சோமன், அருண் அலெக்சாண்டர் ஆகியோர் அவரவர் வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளனர். படத்துக்கு இன்னொரு ஹீரோவாக அனிருத்தின் பின்னணி இசை அமைந்துள்ளது. குறிப்பாகக் கோவா சம்பந்தப்பட்ட காட்சிகளில் வரும் பின்னணி இசை அட்டகாசம். அதேபோல் செல்லம்மா பாடல் ஆட்டம் போட வைக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. அதிலும் குறிப்பாக மெட்ரோ ரயில் சண்டைக்காட்சியைச் சிறப்பாகக் கையாண்டு ரசிக்கவைத்துள்ளார்.
கோலமாவு கோகிலா படத்தின் சாயல்கள் இந்த படத்தில் அதிகமாக இருந்தாலும் அவை ரசிக்கும்படி அமைந்து படத்தைக் கரை சேர்த்துள்ளது.
டாக்டர் - ஆபரேஷன் சக்ஸஸ்!