வணக்கம் சென்னை மற்றும் பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸ்க்கு பிறகு இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகி இருக்கும் ரொமாண்டிக் திரைப்படம் இந்த காதலிக்க நேரமில்லை. படத்தில் நடிக்கும் நடிகர்கள் இசையமைப்பாளர் என பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் அந்த எதிர்பார்ப்புகளை இந்த பொங்கலுக்கு பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்ப்போம்...
காதல் மட்டுமே போதும் திருமணம் குழந்தைகள் வேண்டாம் என நினைக்கும் நாயகன் ரவி மோகன் என்கிற (ஜெயம் ரவி), காதலும் வேண்டாம் திருமணமும் வேண்டாம் குழந்தை மட்டுமே போதும் என நினைக்கும் நாயகி நித்யா மேனன் ஆகியோர் நேர் எதிர் எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர். வெவ்வேறு உடனான இவர்கள் இருவரின் திருமணமும் மிகவும் நெருக்கத்தில் வந்து நிற்கிறது. இதைத்தொடர்ந்து நாயகி நித்தியா மேனன் சேர்க்கை கருத்தரிப்பு மூலம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றுக் கொள்கிறார். இன்னொரு பக்கம் சிங்கிள் பிளேபாயாக இருக்கும் ரவி மோகன் வாழ்க்கையை அப்படியே பல பெண்களுடன் உல்லாசமாக வாழ்ந்து வருகிறார். இப்படி நேர் எதிர் எண்ணங்களுடன் இருக்கும் இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் சந்திக்க நேர்கிறது, இருவருக்குள்ளும் காதல் பற்றிக் கொள்கிறது. இவர்கள் இருவரும் அவரவர் கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்பதே காதலிக்க நேரமில்லை படத்தின் மீதி கதை.
மிகவும் சென்சிட்டிவான ஒரு கதையை வைத்துக்கொண்டு இந்த கால ஜென் சி மற்றும் ஜென் ஆல்ஃபா கிட்ஸ்களுக்கு செட் ஆகும் படியான சற்றே முற்போக்கு சிந்தனையுடன் கூடிய ஒரு நவீன ரக காதலை காதல் ரசம் சொட்ட சொட்ட கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. கொஞ்சம் மிஸ் ஆனாலும் இந்த படம் ரசிகர்களுக்கு வேறு ஒரு விதத்தில் போய் புரிந்து கொள்ளும்படி சேர்ந்து விடும் என்ற டேஞ்சரான ஒரு விஷயத்தை ஒரு பக்கம் வைத்துக் கொண்டு இன்னொரு பக்கம் நேர்த்தியான காதல் கதையாக இப்படத்தை கொடுத்து அதை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. படம் ஆரம்பித்ததில் இருந்து போகப்போக மாடல் லவ் ஸ்டோரியாக விரிந்து எந்த ஒரு இடத்திலும் பெரும்பாலும் தொய்வில்லாதபடி ரசிக்கும்படியான ஒரு மாடர்ன் லவ் திரைப்படமாக விரிகிறது. இதற்கு முத்தாய்ப்பாக ரவி மோகன் மற்றும் நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பு படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் அந்த கெமிஸ்ட்ரியை மிக சிறப்பாக கையாண்டு அதற்கேற்றார் போல் திரை கதையும் அமைத்து ஒரு பீல் குட் லவ் ஸ்டோரி பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. இந்தப் படத்தில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் இந்த படத்தை யாரெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியும், யாரெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கேள்விகள் பல இடங்களில் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. இந்த கால இளைஞர்கள் இப்படத்தை ஏற்றுக் கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது ஆனால் 45 வயதை கடந்தவர்கள் இந்த படத்தை எப்படி பார்ப்பார்கள் என்ற ஒரு கேள்விக்குறியும் இந்த படத்தின் மூலம் எழுகிறது. இப்படி இந்த படத்திற்கு சில இடையூறுகள் இருந்தாலும் கதையும் கதை சொல்வதற்கான நேர்த்தியான திரை கதையும் அழகாக அமைந்திருப்பது படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறது. மற்றபடி இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே எழுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் கடந்து இந்த படம் எந்த அளவு வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மற்றபடி இந்த கால இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாடர்ன் காதல் திரைப்படம் பழைய ரிதம் படத்தை ஞாபகப்படுத்தி ரசிக்கவும் வைத்திருக்கிறது.
நாயகன் ரவி மோகன் என்கின்ற (ஜெயம் ரவி) வழக்கம்போல் தனது காதல் நடிப்பை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார். இவரது ஸ்கிரீன் ப்ரெசென்ட் பல்வேறு இடங்களில் பெண் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. படத்தின் முக்கிய நாயகனாக ஜெயம் ரவியை காட்டிலும் நித்தியா மேனன் மிளிர்கிறார். இவரை நடிப்பு ராட்சசி என்றே சொல்லலாம். அந்த அளவு தனது கண்களாலேயே பல எக்ஸ்பிரஷன்ஸ்களை அள்ளி வீசி இருக்கிறார். எந்த ஒரு காதல் காட்சியாக இருந்தாலும் எமோஷனலான காட்சிகளாக இருந்தாலும் தன் மகனுடன் இருக்கும் அம்மா மகன் பாசம் சம்பந்தப்பட்ட காட்சிகளாகவும் இருந்தாலும் அப்படியே ஜஸ்ட் லைக் தட் போல் மிக மிக சிறப்பான நடிப்பை அசால்டாக செய்து தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார். இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இவரது நடிப்பு பார்க்கப்படுகிறது. இவரே இந்த படத்தின் யூ எஸ் பி யாகவும் இருக்கிறார். இவருக்கும் ஜெயம் ரவிக்கும் மற்றும் தனது குழந்தைக்குமான கெமிஸ்ட்ரி மிகவும் சிறப்பாக அமைந்து படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறது. சிறுவன் ரோகான்சிங் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார். ஜெயம் ரவியின் முன்னாள் காதலியாக வரும் டி ஜே பானு சிறப்பான தேர்வு. விட்டுப்போன காதலை மீண்டும் புதுப்பிக்க வரும் அவர் வந்த இடத்தில் கதிமோகனை புரிந்து கொண்டு அவருக்காக ஒரு மாடல் சப்போர்ட்டை கொடுத்துவிட்டு சென்றிருப்பது என்பது படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. நித்யா மேனனின் சித்தி ஆக வரும் வினோதினி பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். நித்யா மன்னனுக்கு பக்கபலமாகவும் நடித்திருக்கிறார். நித்தியமானின் அம்மா லஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் அப்பா பாடகர் மனோ ஆகியோர் அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து விட்டு சென்று இருக்கின்றனர். ஜெயம் ரவியின் அப்பாவாக வரும் லால் மற்றும் நண்பர்கள் யோகி பாபு மற்றும் வினை ஆகியோர் அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் வலு சேர்த்து இருக்கின்றனர். குறிப்பாக வினை காதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதமும் அதற்காக அவர் கொடுத்த நடிப்பும் மிகச் சிறப்பாக அமைந்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
கேவுமிக் ஆரி ஒளிப்பதிவில் காதல் காட்சிகளும், பாடல்களும், அம்மா அப்பா மகன் உறவு சம்பந்தப்பட்ட காட்சிகளும் மிகவும் ரிச் ஆகவும் அதே சமயம் உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சி அமைப்புகளும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்திருக்கிறது. அதற்கு பக்க பலமாக லாரன்ஸ் கிஷோரின் எடிட்டிங் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. எந்தெந்த இடங்களில் எவ்வளவு எமோஷன் தேவையோ அந்த அளவு தனது கத்திரியை கரெக்டாக பயன்படுத்தி வெட்டி படத்தையும் சிறப்பு கூட்டி இருக்கிறார். துள்ளலான பாடல்கள் மற்றும் இசை மூலம் இந்த கால ரசிகர்களையும் ஈர்த்து தன் கைப்பிடிக்குள் அனைத்து கொள்கிறார் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். இவரது பாடல்களும் பின்னணிசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக காதல் மற்றும் அப்பா மகன் சம்பந்தப்பட்ட காட்சிகளை தனது இசையால் ஒரு படி மேலே தூக்கி வைத்து படத்தையும் தரமாக கொடுக்க உதவி இருக்கிறார். வழக்கம்போல் இவரது இசையே படத்தின் இன்னொரு நாயகனாகவும் மாறி இருக்கிறது.
ரிதம் படத்தை அப்படியே உல்டா செய்து அதனுள் ஜெயம் ரவிக்கும், நித்யா மேனனுக்கும் பிறந்த மகனை கடைசிவரை அவனது தந்தை ஜெயம் ரவி தான் என்பதை ஜெயம் ரவிக்கு தெரியுமா, தெரியாதா என்று எதிர்பார்ப்பை எதிர செய்து அதன் உடனேயே இப்படம் முழுவதையும் பயணிக்க செய்து அதன் மூலம் ஒரு மாடர்ன் லவ் ஸ்டோரியை தன் பாணியில் சிறப்பாக கொடுத்து இக்கால ரசிகர்களை அப்படியே கட்டிப்போட்டு தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. படத்தின் கடைசி வரை சஸ்பென்ஸ் உடைந்ததா, இல்லையா? என்று எதிர்பார்ப்பை உடையாத படி வைத்து படம் முழுவதையும் ரசிக்க வைக்க செய்ததற்காகவும், நித்யா மேனனுக்காகவும், இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் துள்ளலான பாடல்கள் மற்றும் இசைக்காகவும் நிச்சயம் காதலிக்க நேரமில்லை படத்தை ஒருமுறை விசிட் செய்யலாம்.
காதலிக்க நேரமில்லை - மாடர்ன் முற்போக்கு காதல்!