Skip to main content

குடியிலிருந்து திருந்தினாரா? - ‘பாட்டல் ராதா’ விமர்சனம்!

Published on 25/01/2025 | Edited on 25/01/2025
bottle radha movie review

குடிப்பழக்கம் உள்ள நாயகன் அவற்றால் அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் ஏற்படும் இன்னல்கள் என தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் தொன்றுதொட்டு ரிலீஸ் ஆகிய வண்ணம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வரிசையில் தற்பொழுது அதே கதை கருவுடன் வெளியாகி இருக்கும் இந்த பாட்டல் ராதா திரைப்படம் எந்த வகையில் மாறுபட்டு இருக்கிறது? இத்தனை காலமாக குடிப்பவர்களையும் பற்றி மட்டுமே படம் வெளியாகி வந்த காலம் மாறி தற்போது போதை மறு வாழ்வு மையம் சம்பந்தப்பட்ட கதையாக வெளியாகி இருக்கும் பாட்டல் ராதா எந்த அளவு கவர்ந்தார்?

எப்பொழுதும் போதையுடனேயே தள்ளாடிக் கொண்டிருக்கும் குரு சோமசுந்தரம் கிடைக்கின்ற கேப்புகளில் எல்லாம் குடித்துவிட்டு அட்டகாசம் செய்கிறார். இவரால் இவரது மனைவி, பிள்ளைகள், குடும்பம், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் இடத்தில் இருக்கும் உடன் வேலை செய்கிறவர்கள் என அனைவருமே பாதிக்கப்படுகின்றனர். ஒரு கட்டத்தில் இவரது அட்ராசிட்டி தாங்க முடியாமல் பொறுமை இழக்கும் அவரது மனைவி சஞ்சனா நடராஜன் போதைக்கு அடிமையான குரு சோமசுந்தரத்தை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விடுகிறார். போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி வரும் ஜான் விஜய் குரு சோமசுந்தரத்தை தந்திரமாக அவரது மையத்துக்குள் கூட்டி சென்று விடுகிறார். சென்ற இடத்தில் மறுவாழ்வு மையத்தின் வழிகாட்டுதல்கள் படி குரு சோமசுந்தரம் குடியிலிருந்து விடுபட்டு திருந்தினாரா, இல்லையா? மீண்டும் அவர் குடும்பத்துடன் சேர்ந்தாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

bottle radha movie review

பொதுவாக குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதரின் வாழ்வியலை கூறும் திரைப்படங்கள் பெரும்பாலும் மிகவும் உணர்ச்சிபூர்வமான படங்களாகவே அமையும். ஆனால் அதிலிருந்து சற்றே மாறுபட்டு படம் ஆரம்பித்து முதல் பாதி முழுவதும் உணர்ச்சிபூர்வமாகவும் அதேசமயம் கலகலப்பான படமாகவும் செல்கிறது. குறிப்பாக போதை மறுவாழ்வு மைய சம்பந்தப்பட்ட காட்சிகள் இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறது. அதில் வரும் காட்சிகள் அனைத்துமே உண்மைக்கு மிக நெருக்கமாகவும் அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் காட்சிப்படுத்தப்பட்டு எந்த ஒரு இடத்திலும் அயர்ச்சி ஏற்படாதவாறு இருக்கின்றது. முதல் பாதி இப்படி இருக்க இரண்டாம் பாதியில் படம் வேறு ஒரு தளத்திற்கு சென்று முற்றிலுமாக உணர்ச்சி பூர்வமாக சமூகத்துக்கு மிக அவசியமான ஒரு படமாக இந்த பாட்டல் ராதா அமைந்திருக்கிறது.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பும் கலகலப்பும் இரண்டாம் பாதியில் சற்றே மிஸ்ஸிங். அதனாலேயே இரண்டாம் பாதி பல இடங்களில் நம் பொறுமையை சோதித்து அயற்சியை தருகின்றது. குறிப்பாக குடி நோயால் பாதிக்கப்பட்ட குரு சோமசுந்தரத்தால் அவரது குடும்பம் எந்த அளவு பாதிக்கப்படுகிறது. அவரும் அந்த குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் எப்படியெல்லாம் தவிக்கிறார். குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு நோயாளியாக பார்க்க வேண்டும் என்ற சமூக கருத்தை அழுத்தமாக கூறி இருப்பதால் ஒரு உணர்ச்சிபூர்வமான படமாக இந்த இரண்டாம் பாதியாக அமைந்திருக்கிறது. திரைக்கதையிலும் குடி வீடு பிரச்சனை மறுபடியும் குடி வீடு பிரச்சனை என ரிப்பீட்டான காட்சி அமைப்புகளால் சில இடங்கள் நம்மை சோதித்தாலும் போகப்போக கிளைமாக்ஸ் இல் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லி இந்த சமூகத்துக்கு மிக மிக அவசியமான ஒரு படமாக இந்த பாட்டல் ராதா அமைந்திருக்கிறது. குறிப்பாக இந்த குடிப்பழக்க பிரச்சனையால் குடும்பங்களுக்குள் ஏற்படும் இன்னல்களையும், துன்பங்களையும் தனிமனித பிரச்சனையாக இல்லாமல் சமூகப் பிரச்சினையாக காட்டி அரசிடம் பல்வேறு கேள்விகளை இப்படமூலம் எழுப்பி இருக்கிறார் இயக்குநர் தினகரன் சிவலிங்கம். 

bottle radha movie review

குரு சோமசுந்தரம் வழக்கம்போல் தன் கதாபாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களை அப்படியே தன் கண் முன் நிறுத்தி சில இடங்களில் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகவும் நடித்து இருக்கிறார். அது படம் போற போக்கில் பெரிதாக கவனிக்கப்படாமல் இருப்பது அவருக்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. அவரது நண்பராக வரும் ஜமா புகழ் பாரி இளவழகன் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி உண்மையான அக்மார்க் குடிகாரனை அப்படியே கண்முன் நிறுத்தி இருக்கிறார். இவரது எதார்த்தமான வசன உச்சரிப்பும், நடிப்பும் கவனம் பெற செய்திருக்கிறது. போதை மறுவாழ்வு மையத்தின் ஓனராக வரும் ஜான்விஜய் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

bottle radha movie review

மறுவாழ்வு மையத்தில் இருக்கும் நோயாளியாக வரும் லொள்ளு சபா மாறன் கிடைக்கின்ற கேப்புகளில் எல்லாம் ஆன்லைனில் பஞ்ச் காமெடிகளை போட்டு சிரிக்க வைக்கிறார். இவர்களுடன் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். நாயகியாக வரும் சஞ்சனா நடராஜன் அந்த கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் உண்மைக்கு நெருக்கமான பக்கத்து வீட்டுப் பெண் போன்ற கதாபாத்திரத்தை சிறப்பாக தனக்குள் உள்வாங்கி அதற்கேற்றார் போல் நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். 

ஷான் ரோல்டன் இசையில் கதையோடு ஒன்றிணைந்து வரும் பாடல்கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. அதேபோல் பின்னணி இசையும் அழுத்தமாகவும் அதே சமயம் கலகலப்பாகவும் கொடுத்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார். ரூபேஷ் ஷாஜியின் ஒளிப்பதிவில் மறுவாழ்வு மையம் மற்றும் நாயகனின் சுற்றுப்புறம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

bottle radha movie review

சமூகத்துக்கு மிக மிக அவசியமான ஒரு திரைப்படமாக அமைந்திருக்கும் இந்த பாட்டல் ராதா முதல் பாதியில் கொடுத்த கலகலப்பையும் அழுத்தத்தையும் இரண்டாம் பாதியிலும் கொடுத்திருந்தால் இன்னமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கும். இருந்தும் படத்தில் சொல்ல வந்த கருத்து இந்த காலத்தில் மிக மிக ஒரு அவசியமான சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய கருத்தாகவும், அதேசமயம் அரசிடம் கேள்வி எழுப்பும் படியான முக்கியமான விஷயமாகவும் இருப்பதால் இது ஒரு தவிர்க்க முடியாத படமாக மாறி இருக்கிறது.

பாட்டல் ராதா - அவசியமானவன்!

சார்ந்த செய்திகள்