பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து தமிழ் சினிமாவில் பல்வேறு படங்கள் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றன. அதில் சில படங்கள் வெற்றி பெறுகின்றன, பல படங்கள் இருக்கின்ற இடம் தெரியாமல் சென்று விடுகிறது. தற்போது அந்த வரிசையில் மற்றொரு பாலியல் வன்கொடுமை எதிரான ஒரு படமாக வெளியாகி இருக்கும் இந்த தருணம் படம் இதில் எந்த பட்டியலில் இணைகிறது?
சென்ட்ரல் ரிசர்வ் போலீசாக இருக்கும் கிஷன் தாஸ் தன்னுடைய சக அதிகாரியை தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுகிறார். இதனால் அவர் மேல் விசாரணை கமிஷன் நடத்தப்படுகிறது. இதற்காக சென்னை வரும் அவர் வந்த இடத்தில் நாயகி ஸ்மிருதி வெங்கட்டை சந்திக்கிறார். இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது. இதற்கிடையே நாயகி ஸ்மிருதி வெங்கட் தன்னை ஒருதலையாக காதலிக்கும் ராஜ் ஐயப்பாவை தனது அப்பார்ட்மெண்டிலேயே வைத்து கொலை செய்து விடுகிறார். இந்த விஷயம் நாயகன் கிஷன் தாசுக்கு தெரிய வர இருவரும் சேர்ந்து அந்த கொலையை மறைத்து பிணத்தை அப்புறப்படுத்த முயற்சி செய்கின்றனர். ஸ்மிருதி வெங்கட் ஏன் ராஜ ஐயப்பாவை கொலை செய்ய வேண்டும்? இருவரும் சேர்ந்து அந்த கொலையை மறைத்து பிணத்தை அப்புறப்படுத்தினார்களா, இல்லையா? என்பதே படத்தின் மீது கதை.
படம் ஆரம்பித்து முதல் பாதி முழுவதும் காதல் படமாகவும், இரண்டாம் பாதியில் இருந்து த்ரில்லர் படமாகவும் கொடுத்து ரசிக்க வைக்கும் முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் அரவிந்த் சீனிவாசன். படத்தின் ஆரம்பகட்ட காட்சிகளில் எந்த ஒரு இடத்திலும் கதைக்குள் செல்லாமல் அப்படியே காதல் படமாக நகரும் திரைப்படம் போகப்போக சற்றே வேகம் எடுத்து திரில்லர் படமாக மாறிய பின் ஒரு கொலை அந்த கொலையை மறைக்க போராடும் நாயகன், நாயகி என ஒரு கிரிபிங்கான திரில்லர் படம் பார்த்த உணர்வை இந்த படம் கொடுக்கிறது. ஆனால் கதை என்று பார்த்தால் ஒற்றை வரி கதையை வைத்துக்கொண்டு ஒரு இரண்டரை மணி நேரம் படத்தை இந்த அளவு இழுத்து கொடுத்தது என்பது சற்றே ஆங்காங்கேய அயர்ச்சியை ஏற்படுத்தவும் தவறவில்லை. இருந்தும் படத்தின் பிற்பகுதி காட்சிகள் சற்றே தொய்வில்லாமல் நகர்வது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
நாயகன் கிஷன் தாஸ் துருதுரு நாயகனாக காதல் காட்சிகளில் மிளிர்கிறார். அதேபோல் பிணத்தை மறைக்கும் காட்சிகளில் தேர்ந்த போலீஸ் அதிகாரியின் மிடுக்கான குணாதிசயங்களை அப்படியே கண் முன்னிறுத்தி கவனம் பெற்று இருக்கிறார். நாயகி ஸ்மிருதி வெங்கட் அழகாக இருக்கிறார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதற்கு முன்பு நடித்த எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு வெஸ்டர்ன் தோற்றத்தில் அழகாகவும் நேர்த்தியாகவும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிஷான் தாஸ் நண்பராக வரும் பால சரவணன் மற்றும் முக்கிய பாத்திரத்தில் வரும் கீதா கைலாசம் ஆகியோர் அவரவர் வேலையை செய்து விட்டு சென்று இருக்கின்றனர். சில காட்சிகளை வந்தாலும் எரிச்சல் ஊட்டும் படியான நடிப்பை வெளிப்படுத்தி விட்டு இறந்து விடுகிறார் ராஜ் ஐயப்பா.
தர்பூக்கா இசையில் பாடல்கள் ஓரளவு கேட்கும் படி இருக்கின்றன பின்னணி இசை சிறப்பாக அமைத்திருக்கிறார். ராஜா பட்டாச்சாரியா ஒளிப்பதிவில் காதல் காட்சிகள் மற்றும் இரவு நேர சண்டை காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு சிறிய ஒன் லைன் கதையை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரம் படமாக விரித்ததற்கு இன்னும் கூட சிரத்தை எடுத்துக் கொண்டு திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கூட்டி இருந்தால் இன்னமும் இது ஒரு சிறப்பான படமாக அமைந்திருக்கும். இருந்தும் காதல் காட்சிகளும் கொலையை மறைப்பதற்கான த்ரில்லிங்கான காட்சிகளும் ஓரளவு சிறப்பாக அமைந்தது இந்த படத்திற்கு சற்றே பிளஸ் ஆக அமைந்து படத்தை கரை சேர்க்க உதவ முயற்சி செய்திருக்கிறது.
தருணம் - தளர்வு!