இன்றைய காலகட்டத்தில் மூத்த இயக்குனர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தான் விட்ட இடத்தை பிடிக்க தடுமாறிக் கொண்டுதான் இருக்கின்றனர். இன்றைய ட்ரெண்டு ஏற்ப படங்களை கொடுக்க தன் முந்தைய படங்களில் இருந்த பேட்டர்னிலேயே திரைக்கதை அமைத்து அதனுள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப டிரெண்டுக்கான விஷயங்களை உட்புகுத்தினாலும் கூட ஏனோ அவர்களால் பழைய பிரைம் டைமில் இருந்த படத்தை போல் தற்போது படம் கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க இன்னமும் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குநர் சுந்தர் சி தன் ஃபார்முலாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். இன்றைக்கும் இவரது படங்கள் நன்றாகவே கல்லா கட்டி வருகின்றன. அந்த அளவு என்டர்டெயின்மென்ட் கிங் என பெயர் வாங்கிய இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு தயாரான இந்த மதகஜராஜா திரைப்படம் பல்வேறு காரணங்களால் இத்தனை வருடங்கள் வெளிவராமல் இருந்தது. தற்பொழுது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இன்னல்களைக் கடந்து இந்த படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இப்போது உள்ள இயக்குனர்களுக்கு இந்த ட்ரெண்டில் படம் எடுக்க தடுமாற்றங்கள் இருக்கின்ற இந்த சமயத்தில் இப்படி பழைய படம் ஒன்று இக்காலகட்டத்தில் வெளியாகி இருப்பது எந்த அளவு இன்றைய ரசிகர்களையும் கவர்ந்துள்ளது என்பதை பார்ப்போம்....
பள்ளிப்பருவத்தில் இருந்து நண்பர்களாக இருக்கும் விஷால், சந்தானம், சடகோபன் ரமேஷ், நித்தின் சத்யா ஆகியோர் தன்னுடைய ஆசிரியர் மகளின் திருமணத்திற்காக வெவ்வேறு இடங்களில் இருந்து மீண்டும் ரியூனியன் ஆகின்றனர். திருமணத்தில் சந்திக்கும் இவர்களில் சந்தானம், நித்தின் சத்யா, சடகோபன் ரமேஷ் ஆகியோரின் சொந்த வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் விஷாலுக்கு தெரிய வருகிறது. எப்பொழுதும் தன் நண்பர்களுக்காக எதையும் செய்யத் துணியும் விஷால் முதலில் சந்தானத்தின் பிரச்சினையை தீர்த்து வைத்து விட்டு பின் நித்தின் சத்யா மற்றும் சடகோபன் ரமேஷ் ஆகியோரின் பிரச்சினையை தீர்த்து வைக்க முடிவெடுக்கிறார். இவர்கள் இருவரது பிரச்சனைக்கும் வில்லன் சோனு சூட் காரணம் என தெரிய வருகிறது. ஆட்சியையே தன் கைக்குள் வைத்துக் கொள்ளும் அளவிற்கு மிகப் பெரும் சக்தியாக இருக்கும் சோனு சூட்டை எப்படி வீழ்த்தி தன் நண்பர்களையும் விஷால் காப்பாற்றுகிறார் என்பதே இப்படத்தின் மீதி கதை.
நாம் ஏற்கனவே கூறியது போல் பல்வேறு முன்னணி இயக்குனர்கள் இன்றளவும் வெற்றி படம் கொடுக்க தடுமாறி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் 12 வருடங்களுக்கு முன்பு எடுத்த திரைப்படம் மூலம் களத்தில் குதித்திருக்கும் சுந்தர் சி தான் ஒரு காலம் கடந்த இயக்குனர் என்பதை இப்படம் மூலம் நிரூபித்து வெற்றி கொடி நாட்டியிருக்கிறார். 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப டிரெண்டில் இப்படம் அமைந்து இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் சுந்தர் சி-க்கே உரித்தான காட்சி அமைப்புகளின் மூலம் சிரிப்பு சரவெடியாக அமைந்து தியேட்டரில் கரவொலி மூலம் அதிர செய்திருக்கிறது. குறிப்பாக முதல் பாதி சற்றே கிளிஷேவான காட்சிகள் மூலம் ஆரம்பித்தாலும் போகப்போக காமெடி காட்சிகள் மூலம் படம் வேகம் எடுத்து இரண்டாம் பாதியில் ஜெட் வேகத்தில் பயணித்து குறிப்பாக சந்தானம், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், விஷால் சம்பந்தப்பட்ட காமெடி காட்சி மூலம் தியேட்டரையே அதிர செய்து ஒரு நிறைவான பேமிலி என்டர்டைன்மென்ட் படமாக இப்படம் அமைந்து பார்ப்பவர்களுக்கு ஒரு புல் மீல்ஸ் கொடுத்திருக்கிறது.
இந்த படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எந்த ஒரு இடத்திலும் இது ஒரு பழைய படம் என்ற உணர்வே கொடுக்காமல் முழுக்க முழுக்க என்டர்டைன்மெண்ட் காமெடிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு இருப்பதால் இன்றளவும் அவை ரசிக்க வைக்கப்பட்டு பார்ப்பவர்களுக்கும் ஒரு நல்ல ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படமாக அமைந்திருக்கிறது. சுந்தர் சி படம் என்றாலே என்ன விஷயத்துக்காக நாம் செல்வோமோ அவை அனைத்தும் மிகவும் நேர்த்தியாக இப்படத்தில் வைக்கப்பட்டு அவை ரசிக்கும்படியும் இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மற்றபடி படத்தில் பல இடங்களில் அயற்சி ஏற்படும்படியான விஷயங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் பாடல்களாலும், காமெடி காட்சிகளாலும், கிளாமரான காட்சிகளாலும் மறக்கடிக்க செய்து படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறது. இந்தப் படம் அன்றைய காலகட்டத்தில் வெளியாக இருந்தாலும் கூட இந்த அளவு வரவேற்பை பெறுமா என்றால் சற்று சந்தேகமே. அந்த அளவு இன்றைய காலகட்டத்தில் சரியான குடும்ப காமெடி படங்கள் ரசிகர்களுக்கு அமையாமலே இருக்கின்ற சூழலில் இதில் தான் ஒரு மாஸ்டர் என்பதை பழைய படம் மூலமும் மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.
பழைய துருதுரு விஷாலை இப்படத்தில் நன்றாக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. 8 பேக் உடல் கட்டுடன் அவர் நடித்திருக்கும் காட்சி அமைப்புகளிலும், ஆக்சன் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும், காமெடி காட்சிகளிலும் ப்ரைம் டைம் விஷாலை பார்க்க முடிகிறது. படத்தில் ஒன் மேன் ஆர்மியாக மொத்த படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறார் காமெடி நடிகர் சந்தானம். இவரும் தனது பிரைம் டைமில் இருக்கும் பொழுது எடுத்த இத்திரைப்படம் என்பதால் காமெடியில் பின்னி பெடல் எடுத்து மொத்த திரைப்படத்தையும் சிங்கிள் ஹேண்டாக தூக்கி நிறுத்தி பார்ப்பவர்களுக்கு செம காமெடி ட்ரீட் கொடுத்து இருக்கிறார்.
இந்த படம் பார்க்கும் பொழுது சந்தானம் ஹீரோவாக நடிக்கச் செல்லாமல் இப்படியே காமெடி செய்து அனைவரையும் மகிழ்வித்து இருக்கலாம் என்ற ஏக்கம் அனைவரது கண்களில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அந்த அளவு பிரைம் டைம் சந்தானத்தை அனைவரும் மிஸ் செய்கின்றனர். குறிப்பாக சந்தானம், மறைந்த மனோபாலா, விஷால், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட 25 நிமிட காமெடி காட்சி தியேட்டரையே அதிர செய்து இருக்கிறது. நாயகிகளாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கின்றனர். இவர் இருவருளுமே வழக்கமான நாயகிகளாக வந்து சென்றாலும் கவர்ச்சியை அள்ளித் தெளித்து இருக்கின்றனர். அவை அனைத்தும் முகம் சுளிக்காத அளவுக்கு அதேசமயம் கவர்ச்சியையும் தாராளமாக கொடுத்து பார்ப்பவர்களை ரசிக்க வைத்து இருக்கிறது.
கௌரவத் தோற்றத்தில் வரும் சதா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி ஆட்டம் போட்டுவிட்டு சென்றிருக்கிறார். மற்றபடி மறைந்த மணிவண்ணன், மனோபாலா, சிட்டிபாபு உட்பட சிலர் இந்த படத்தில் மீண்டும் பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. சந்தானத்துடன் இணைந்து சுவாமிய நாதனும் தன் பங்குக்கு சிறப்பாக காமெடி செய்திருக்கிறார். மற்றபடி படத்தில் வழக்கமாக சுந்தர்சி படத்தில் நடிக்கும் அத்தனை நடிகர்களின் நட்சத்திர பட்டாளமே இப்படத்திலும் இருக்கிறது. அவர்கள் அனைவருமே அவரவருக்கான வேலையை செய்து பக்கா என்டர்டைன்மென்ட் படம் கொடுக்க உதவி இருக்கின்றனர்.
விஜய் ஆண்டனி இசையில் சிக்கு புக்கு மற்றும் மை டியர் லவ்வர் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. இப்பாடல்கள் அந்த காலகட்டத்தில் வெளியாகி இருந்தாலும் இப்பொழுதும் ரசிக்கும்படியாக அமைந்து மீண்டும் ரசிக்க வைத்து ஆட்டம் போட வைத்திருக்கிறது. அதேபோல் பின்னணி இசையிலும் காமெடி காட்சிகளில் சிறப்பாக இசையை கொடுத்திருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவில் எந்த ஒரு இடத்திலும் இது பழைய படம் என்ற உணர்வே தராத அளவுக்கு இக்காலகட்டத்திற்கு ஏற்ப அப்பவே நன்றாக ஒளிப்பதிவு செய்து சிறப்பான படமாக கொடுத்திருக்கிறார். காட்சிகள் அனைத்தும் கலர்ஃபுல்லாகவும் கவர்ச்சியாகவும் இருக்கின்றன.
படத்தில் ஆங்காங்கே சில பல இடங்களில் லாஜிக் மீறல்கள், குறைகள் தென்பட்டாலும் அவை அனைத்தும் இத்தனை ஆண்டுகள் கழித்தும் சுந்தர் சி மேஜிக்கால் மறக்கடிக்கப்பட செய்து ஒரு சிரிப்பு சரவெடி உடன் கூடிய என்டர்டைன்மென்ட் குடும்ப படம் பார்த்த உணர்வை இந்த மதகஜராஜா நமக்கு கொடுத்திருக்கிறார். இந்த பொங்கலுக்கு பல்வேறு புதிய படங்கள் வெளியாகி இருந்தாலும் அவை அனைத்தையும் முந்திக்கொண்டு பொங்கல் ரேஸில் முதலாவதாக வந்து வெற்றிக்கனியை தட்டி சென்று இருக்கிறது இந்த பழைய காலத்தில் உருவான புதிய ட்ரெண்டோடு கூடிய மதகஜராஜா திரைப்படம்.
மதகஜராஜா - காமெடி கிங்!