‘பார்க்கிங்’ பட வெற்றிக்கு பிறகு அதே போன்று இன்னொரு நெகட்டிவ் சேடில் இருக்கும் கதாபாத்திரத்தில், மீண்டும் ஒருமுறை களம் இறங்கி இருக்கிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்த முறை இவருடன் களத்தில் அட்டகத்தி தினேஷ் எதிராளியாக குதித்து இருக்கிறார். இந்த இருவருக்குமான ஈகோ மோதல்களுடன், கிரிக்கெட் போட்டியும் இணைந்து ரசிகர்களை கைதட்ட வைத்ததா? இல்லையா? என்பதை பார்ப்போம்...
உள்ளூர் ஸ்டம்பர் பால் கிரிக்கெட்டில் மிகவும் கெத்தாக வலம் வருகிறார் அதிரடி பேட்ஸ்மேனான அட்டகத்தி தினேஷ். கிரிக்கெட்டை வெறுக்கும் மனைவியிடம், பொய் சொல்லி விட்டு மறைந்து மறைந்து கிரிக்கெட் விளையாடும் அட்டகத்தி தினேஷ் அவர் விளையாடும் ஒவ்வொரு மேட்ச்களிலும் தனது அதிரடி ஆட்டத்தால் எதிரணியை கலங்கடிக்க செய்து கெத்தாக சூப்பர் பேட்ஸ்மேன் ஆக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவரைப் பார்த்து பயப்படாத அணியே இல்லை. அந்த அளவுக்கு திறமையான பேட்ஸ்மேன் ஆக வளம் வரும் இவரை எப்படியாவது சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க செய்ய வேண்டும் என முனைப்புடன் இருக்கும் வளர்ந்து வரும் ஆல்ரவுண்டரான ஹரிஷ் கல்யாண் ஒரு கட்டத்தில் அட்டகத்தி தினேஷ் சொற் பரன்களில் காலி செய்து விடுகிறார். இதனால் இருவருக்குள்ளும் ஈகோ சண்டை வெடிக்கிறது. இதற்கிடையே ஹரிஷ் கல்யாண் அட்டகத்தி தினேஷின் மகள் சஞ்சனாவை காதலிக்கிறார். சஞ்சனாவும் ஹரிஷ் கல்யாணை காதலிக்கிறார். இந்த ஈகோ சண்டைக்கு இடையே இவர்களின் காதல் என்னவானது? இறுதியில் இருவரும் இணைந்தார்களா, இல்லையா? ஹரிஷ் கல்யாணுக்கும், அட்டகத்தி தினேஷுக்குமான மோதலில் யார் ஜெயித்தார்கள்? என்பதே ரப்பர் பந்து படத்தின் மீதி கதை.
சிட்டியை தாண்டி வெளி ஏரியாக்களிலும், கிராமங்களிலும் நடக்கும் ஸ்டம்பர் பால் கிரிக்கெட்டை மையமாக வைத்து அதனுள் சாதிய பாகுபாடு, பாலின பாகுபாடு ஆகியவையை, யார் மனதையும் துன்புறுத்தாத வகையில் கதைக்குள் வைத்து ஒரு ரசிக்கும் படியான ஸ்போர்ட்ஸ் படத்தை கொடுத்து பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. சென்னை 28 படத்திற்கு பிறகு மீண்டும் ஒருமுறை அதே போன்ற ஒரு ஸ்ட்ரீட் கிரிக்கெட் படம் அனைத்து விதமான மக்களுக்கு பிடித்த வகையிலான ஒரு பொழுதுபோக்கு ஸ்போட்ஸ் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. இரு நாயகர்களுக்கும் கிரிக்கெட் மீதான காதலால் குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை மிகவும் ஜனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும் எந்த ஒரு இடத்திலும் போர் அடிக்காத வகையில் மிகவும் நேர்த்தியான திரைக்கதை மூலம் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. சாதிய பாகுபாடுகளையும், அவர்களின் உணவு முறையையும், கலப்பு திருமணத்தையும், அதன் பிறகு அவர்களுக்குள் இருக்கும் உறவுகளின் அன்பு விரிசல் என சமகால நிகழ்வுகளை மிக மிக இயல்பாக கையாண்டு இருப்பது படத்திற்கு மிக பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மிகவும் அழகாக உள்புகத்தி அதனோடு சேர்ந்த திரைக்கதை மூலம் இத்தனை விஷயங்களையும் மிக எதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் கொடுத்து படத்தையும் கரை சேர்த்து இருக்கிறார் இயக்குநர். முக்கியமாக கிரிக்கெட்டுக்குள் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மிகவும் முக்கியமான விஷயத்தை யாரையும் புண்படுத்தாத வகையில் மிகவும் பக்குவமாக கையாண்ட விதத்தில் இயக்குநருக்கு பாராட்டுக்கள் மற்றும் விருதுகள் நிச்சயம்.
நடிப்பில் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு விதமான நடிப்பை மெருகேற்றி கொடுத்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். பார்க்கிங் படத்தில் வாலியில் பார்த்த அஜித் போன்ற ஒரு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய ஹரிஷ் கல்யாண், இந்தப் படத்தில் சிம்பு போன்று மிகவும் எதார்த்தமான நடிப்பை அதேசமயம் மிரட்டலுடன் ஈகோ கலந்து கொடுத்து ஒவ்வொரு ஃபிரேமிலும் ரசிக்க வைத்திருக்கிறார். சின்ன சின்ன முக பாவனைகளிலும், அதேசமயம் வசன உச்சரிப்பிலும், எங்கு எந்த அளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டுமோ அதை மிக கச்சிதமாக செய்து ஈகோ விஷயத்திலும் சரி, காதல் காட்சிகளிலும் சரி, கிரிக்கெட் களத்திலும் சரி தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி எலைட் லிஸ்ட் நடிகர்களுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் அனைத்து தகுதிகளையும் வளர்த்துக் கொண்ட ஒரு முப்பரிமான நடிகராக திகழ்ந்திருக்கிறார். இவருடன் போட்டி போட்டுக் கொண்டு தனது வழக்கமான நடிப்பை இன்னும் கொஞ்சம் மெருகாக காட்டி சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார் நடிகர் அட்டகத்தி தினேஷ். இவர் மனைவியிடம் பம்மும் இடத்திலும், தாய் பாசத்தில் உருக வைக்கும் இடத்திலும், கிரிக்கெட் களத்தில் வெறித்தனமாக மோதிக் கொள்ளும் இடத்திலும், மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகியவர்களின் பிடிவாதமான நடிப்பை படத்தில் மிகப் பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
அட்டகத்தி தினேஷின் மனைவியாக வரும் சுவாசிகா மிகச் சரியான தேர்வு. கோரிப்பாளையம் படத்தில் நடித்த இவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மிக மிக சிறப்பாக செய்து நடிப்பில் மிரட்டி இருக்கிறார். ஹீரோக்களுக்கு நடுவே இவரின் நடிப்பு அவர்களுக்கு ஈக்குவலாக அமைந்து படத்தையும் தாங்கி பிடித்து இருக்கிறது. தனி ஒரு மனுசியாக இவரின் அசுரத்தனமான நடிப்பு மிக அழகாக வெளிப்பட்டிருக்கிறது. நாயகியாக ஹரிஷ் கல்யாணின் ஜோடியாக நடித்திருக்கும் சுழல் வெப் சீரிஸ் புகழ் சஞ்சனா, நேர்த்தியாக நடித்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தையும் தாங்கி பிடித்து இருக்கிறது. அதேபோல் இவருக்கும் ஹரிஷ் கல்யாணத்துக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்திருக்கிறது. மூத்த கிரிக்கெட் வீரராக வரும் காளி வெங்கட், பழைய 80ஸ், 90ஸ் ஸ்ட்ரீட் கிரிக்கெட் பிளேயர்களை நினைவுபடுத்துகிறார். இவரின் அனுதாபமான நடிப்பு கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் வலு சேர்த்து இருக்கிறது. அட்டகத்தி தினேஷின் மாமியாராக வரும் கீதா கைலாசம், ஆரம்பத்தில் அமைதியாக இருந்து படத்தின் பிற்பகுதியில் அனுதாபம் ஏற்படும்படியான நடிப்பை கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். ஹரிஷ் கல்யாணின் நண்பராக வரும் பால சரவணன், எங்கெங்கு சிரிப்பு அவசியமோ அங்கங்க சிரிப்பை கொடுத்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார். இவருடன் இணைந்து அட்டகத்தி தினேஷின் நண்பராக நடித்திருக்கும் ஜென்ஷன் திவாகரும், காமெடியில் பட்டையை கிளப்பியிருக்கிறார். இவர்களுக்குள் இருக்கும் மோதல்களே படத்தில் நகைச்சுவை காட்சிகளாக விரிகிறது. அவை எந்த ஒரு இடத்திலும் போர் அடிக்காமல் சிறப்பாக நகர்ந்து பணத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. இதற்கு நடுநடுவே வரும் கேப்டன் விஜயகாந்த் ரெஃபரன்ஸ், காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே மண் சார்ந்த நடிப்பின் மூலம் அவரவர் வேலையை மிகச் சிறப்பாக செய்து படத்தை துணை நின்று காப்பாற்றியுள்ளனர். கிரிக்கெட் போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை மிக சிறப்பாக கையாண்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ். எந்த ஒரு இடத்திலும் செயற்கை தணம் இல்லாமல் மிக சிறப்பாக நம்மை அந்த கிரிக்கெட் மைதானத்துக்குள்ளேயே அழைத்து சென்று இருக்கிறார்.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்களை காட்டிலும், பின்னணி இசை மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மன்மனமானதாக இசையை கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார். இந்தப் படத்திலும் சில குறைகளும், நிறைய நிறைகளும் இருக்கின்றன. குறைகளைத் தாண்டி நிறைகள் அதிகமாக இருப்பதினால் அந்த குறைகள் அனைத்தும் அதிகம் பொருட்படுத்தக் கூடியவைகளாக இல்லை. மேலும், சென்னை 28 திரைப்படம் பார்க்கும்பொழுது நமக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ, எந்த அளவு அது தாக்கத்தை நமக்கு கொடுத்ததோ அதேபோன்ற ஒரு உணர்வை இந்த ‘ரப்பர் பந்து’ படமும் கொடுத்து பார்ப்பவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி வெற்றி படமாக அமைந்திருக்கிறது. குடும்பத்தைக் காட்டிலும் நண்பர்களுடன் கும்பலாக சென்று இப்படத்தை பல தடவை பார்த்து ரசிக்கலாம்.
லப்பர் பந்து - வெற்றி மகுடம்!