Skip to main content

அண்ணாத்த சரவெடியா..? புஸ்வானமா..? - விமர்சனம்

Published on 04/11/2021 | Edited on 04/11/2021
bfdsdfsb

 

கரோனா இரண்டாம் அலை தளர்வுக்கு பின் 100% ரசிகர்களை அனுமதிக்கும் திரையரங்குகள், பேட்ட படத்துக்கு டப் கொடுத்த விஸ்வாசம் பிளாக்பஸ்டர் ஹிட்டுக்கு பிறகு சிவாவுடன் கூட்டணி அமைத்த ரஜினி, மீண்டும் கிராமத்துப் பின்னணியில் உருவாகும் கமர்சியல் படத்தில் நடிக்கும் ரஜினி, அதுவும் தீபாவளி ரிலீஸ் என, இப்படி பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள அண்ணத்த திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் வரவேற்ப்பை பெற்றுள்ளதா..?

 

கிராமத்தில் ஊர் பிரசிடன்ட் ஆக இருக்கும் அண்ணாத்த ரஜினி தாயில்லா பிள்ளையான தன் தங்கை தான் உலகம் என வாழ்கிறார். அவரது தங்கையான கீர்த்தி சுரேஷ் வடநாட்டில் படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்புகிறார். வந்த இடத்தில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறார் ரஜினி. அந்தத் திருமணம் பிடிக்காத கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு முதல் நாள் தன் காதலனுடன் கொல்கத்தாவுக்கு ஓடி விடுகிறார். போன இடத்தில் கீர்த்தி சுரேஷுக்கு வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு ஆபத்து ஏற்படுகிறது. தங்கையைத் தேடி கொல்கத்தா செல்லும் ரஜினி கீர்த்தி சுரேஷை சந்தித்தாரா, இல்லையா? கீர்த்தி சுரேஷை ஆபத்திலிருந்து காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே அண்ணாத்த படத்தின் மீதி கதை.

 

hfhfdh

 

வேதாளம் படத்தை விஸ்வாசம் டைப்பில் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி அண்ணாத்த படத்தை உருவாகியுள்ளார் இயக்குனர் சிறுத்தை சிவா. இந்தக் கதைக்காக அதிகம் மெனக்கெடாத அவர் ரஜினியை மட்டுமே மையமாக வைத்து அவர் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ அதில் மட்டுமே கவனம் செலுத்தி திரைக்கதை அமைத்துள்ளார். அதில் வெற்றி பெற்றாரா என்றால்? ஆங்காங்கே கொஞ்சம் சிரமப்பட்டே வென்றிருக்கிறார்! முதல் பாதி முழுவதும் 90ஸ் ரஜினியை பார்க்க முடிகிறது. அந்த அளவு ஃபேமிலி சென்டிமென்ட்டோடு கலகலப்பாக படம் நகர்கிறது. இரண்டாம் பாதி முழுவதும் தங்கை பாசம் மற்றும் ஆக்சன் காட்சிகள் என சற்று பரபரப்பு குறைவாக, நெகிழ்ச்சியான  சென்டிமென்ட் காட்சிகளோடு படம் நகர்ந்துள்ளது. முதல் பாதியில் இருந்த சுவாரசியம் இரண்டாம் பாதியில் சற்று குறைவாக இருந்து அயற்சியை ஏற்படுத்தியுள்ளது.  இருந்தும் ரஜினி என்ற ஒற்றை மந்திரம் படம்  முழுவதும் ஆக்கிரமித்து அதை எல்லாம் மறக்கச் செய்து படத்தை எங்கேஜிங்காக வைத்து ரசிக்க வைத்துள்ளது. ரஜினிகாந்த் படம் முழுவதும் வருவது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. இருந்தும் படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

 

jtjtj

 

ரஜினியிடம் இன்னமும் அதே சுறுசுறுப்பு, அதே ஸ்பீட், அதே துருதுரு நடிப்பு,  அதே எனர்ஜி, அதே டைமிங் காமெடிகள் என இன்னமும் ரசிகர்களை தன் மாயாஜால ஸ்கிரீன் பிரசன்ஸ்ஸால் அப்படியே இறுக்கி கட்டிப் போட்டு வைத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளிலும் சரி, சென்டிமென்ட் காட்சிகளிலும் சரி, காமெடி காட்சிகளிலும் சரி நடிப்பில் அதகள படுத்தியுள்ளார். குறிப்பாக இந்தப் படத்தில் ஒரு படி மேலேயே போய் சென்டிமெண்ட் காட்சிகளில் பார்ப்பவரை கண்கலங்க வைத்துள்ளார். மேலும் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ? அவர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்த்தார்களோ அதை இந்த வயதிலும் சிறப்பாக செய்து அசத்தி இருக்கிறார்.

 

ரஜினிக்கு தங்கை என சொல்வதை விட இப்படத்தின் கதாநாயகி என்று கீர்த்தி சுரேசை சொல்லவேண்டும். அந்த அளவு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றுள்ளார். அதை எப்போதும்போல் சிறப்பாகவும் செய்து அசத்தியுள்ளார். கலகலப்பான நடிப்புக்கு பெயர் போன கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் அழுகாச்சியாக நடித்திருந்தாலும் பல அண்ணன்களின் மனதை கலங்கடித்துள்ளார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது.

 

படத்தின் இன்னொரு நாயகி நயன்தாரா ரஜினிக்காக தன் போர்ஷனை காம்பிரமைஸ் செய்து நடித்துள்ளார். குறைவான காட்சிகளில் அவர் தோன்றினாலும் மனதில் பதிகிறார். ரஜினியின் பழைய கதாநாயகிகளான குஷ்பூ மீனா ஆகியோர் தங்களது பங்குக்கு கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் வர காட்சிகள் தியேட்டர்களில் சிரிப்பலைகள் கியாரண்டி.

 

bfbfbh

 

ரஜினியுடன் படம் முழுவதும் பயணிக்கும் சூரி நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரிக்கும் படியான காமெடி செய்து ரசிக்க வைத்துள்ளார். என்னதான் ரஜினி படம் என்றாலும் சூரிக்கு என்று சரியான ஸ்பேஸ் கிடைத்துள்ளது. அதை அவர் சரியாகவும் பயன்படுத்தியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். படத்தில் மொத்தம் இரண்டு வில்லன்கள். ஒருவர் தெலுங்கு டைப் வில்லன், மற்றொருவர் ஹிந்தி டைப் வில்லன். இதில் எந்த டைப் வில்லன் ரசிகர்களுக்கு பிடிக்கிறதோ அவர்களுக்கு அந்த வில்லன் ரசிக்க வைப்பார். மற்றபடி படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அவர்கள் அனைவருமே அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்து படத்திற்கு பக்கபலமாக இருந்துள்ளனர்.

 

hthfh

 

ரஜினிக்கு பிறகு படத்தின் இன்னொரு கதாநாயகன் டி இமானின் இசை என்றே சொல்லவேண்டும். அந்த அளவு பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி ஒரு பண்டிகைக்கு வெளியாகும் படத்திற்கு என்ன தேவையோ அதை அதிரடியாக கொடுத்து கூஸ்பம்ஸ் கொடுத்துள்ளார். அதேபோல் சென்டிமென்ட் காட்சிகளிலும் சரியான பின்னணி இசையை பயன்படுத்தி கண்கலங்க வைத்துள்ளார். ரஜினிக்கு எந்த மாதிரியான ஆங்கில்கள் வைத்து மாஸ் சீன்களை உருவாக்க முடியும் என்பதை காட்சிக்கு காட்சி மெனக்கெட்டு சிறப்பாக அமைத்து ரசிகர்களிடம் கை தட்டு பெற்றுள்ளார் ஒளிப்பதிவாளர் வெற்றி. பல இடங்களில் இவரது கேமரா மொமண்ட்ஸ் கூஸ்பம்ஸ் ஏற்படுத்துகிறது. எடிட்டர் ரூபன் படத்தின் நீளத்தில் சற்று கவனமாக இருந்திருக்கலாம். மற்றபடி பல இடங்களில் திரைக்கதையையும், ஒளிப்பதிவையும் சரியான கலவையில் கத்தரி போட்டு திறன்பட படத்தொகுப்பு செய்து படத்துக்கு வேகம் கூட்டியுள்ளார்.

 

அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை  யுகிக்கும்படியான திரைக்கதையாக அமைந்திருந்தாலும் அவை ரசிக்கும்படி இருந்து படத்தை கரை சேர்த்துள்ளது. அதேபோல் சில பல ஆண்டுகளாக ரஜினி ரசிகர்கள் மிஸ் செய்த துறு துறு ரஜினியை இந்த படம் மீண்டும் கொண்டுவந்துள்ளது அண்ணாத்த.

 

அண்ணாத்த - சென்டிமென்ட் சரவெடி!

 

 

சார்ந்த செய்திகள்