புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆர்த்தி (வயது 9), திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து அவரது உடல் அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும், சிறுமியைக் கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்ததையடுத்து அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடியதும் அவன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பதும் தெரிய வந்தது.
சிறுமியைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை காவடி குப்பம் சிவாஜி சாலை பகுதியில் கருப்பு சட்டை அணிந்து ஒன்றுகூடிய இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் சிறுமியின் புகைப்படம் பொறித்த பதாகையை ஏந்தி நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு ஐ.பி.எஸ். கலைவாணன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. அந்த சிறப்பு புலனாய்வு குழுவே இனிமேல் இந்த வழக்கை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த சிறப்பு புலனாய்வு குழு இன்று காலை முதல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் மீதும் பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். புகாரளித்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் குழந்தையை மீட்டு இருக்கலாம் என அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்பு காவலர்கள் மீது எழுந்த புகாரை அடுத்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் கூண்டோடு மாற்றப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தையடுத்து அச்சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலத்தில் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், குஷ்பு, சேரன், கார்த்திக் சுப்புராஜ், பார்த்திபன், கருணாஸ், ஜெயம் ரவி உள்ளிட்டோர் தங்களது எக்ஸ் தளப் பக்கத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா, “இந்தியாவில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் என்பது ஒரு தீராத பிரச்சினை. 28.9% குழந்தைகள் ஏதோவொரு வகையில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுகின்றனர். என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
குழந்தைகளுக்கு நல்ல முறையில் தொடுதல், தவறான முறையில் தொடுதல் ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்ட கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியமானது. மேலும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு நற்குணங்களை போதித்து வளர்ப்பதும் அவசியம். புதுச்சேரியில் போதைப்பொருள் தொடர்பாக நடந்த இந்த கொடூரமான குற்றம், நாம் பல தீமைகளை எதிர்கொள்கிறோம் என்பதை நமக்குப் புரிய வைக்கிறது, பாதுகாப்பான சமுதாயமாக, ஒன்றுபட்ட நாடாக ஒன்றுபடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.