விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'குஷி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். வருகிற 1 ஆம் தேதி பான் இந்தியா படமாகத் திரைக்கு வரவுள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் விஜய் தேவரகொண்டா. அப்போது அவரிடம் வெற்றிமாறன், நெல்சன், லோகேஷ் கனகராஜ் என முன்னணி இயக்குநர்களை மட்டுமே குறிப்பிட்டு வருகின்றனர். வேறு இயக்குநர்கள் உங்கள் பார்வைக்கு தெரியவில்லையா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எனக்கு அருண் பிரபு பிடிக்கும். உங்களுக்கு அவர் யாரென்று தெரியுமா. அருவி, வாழ் உள்ளிட்ட படங்களை எடுத்தவர். அதே போல் ஸ்ரீ கார்த்திக், கணம் படம் எடுத்தவர். அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படம் எடுத்து வருகிறார். எனக்கு இங்குள்ள திறமையான மனிதர்களை தெரியும்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் யாரை பிடிக்கும் என்று நீங்க கேட்ட கேள்விகளுக்கு தான் நான் பதிலளிக்கிறேன். மற்றபடி எனக்கு இவரை பிடிக்கும் என்று ஒருபோதும் நான் இதுவரை கூறியதில்லை. எனக்கு எல்லாரையும் பிடிக்கும். ஒரு நடிகராக குறிப்பிட்டு சில பெயரை சொல்வதும், சில பெயர்களை மறந்துவிடுவதும் என்று இருந்தால் அது தேவையில்லாமல் மனக் கசப்பை உண்டாக்கும்.
உங்களுக்கு அவசியம் தெரிய வேண்டும் என்றால், நான் நேர்மையாக சொல்கிறேன், இதை சொல்வதற்கு எனக்கு எந்த கூச்சமும் இல்லை. அதாவது இங்கேயும் சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். அங்கேயும் சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். அதேபோல் திறமையான இயக்குநர்களும் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு ஒரு நபரை மிகவும் பிடித்துள்ளது. அவரை தான் தெலுங்கிற்கு கடத்திச் செல்ல வேண்டும். அவர் அனிருத். அவர் சினிமாவுக்கு ஒரு கிஃப்ட். அவரை நான் இதுவரை சந்தித்ததில்லை. ஆனால் அவருடைய இசை எனக்கு மிகவும் பிடிக்கும்.
தெலுங்கில் அவருக்கு நல்ல ரசிகர்கள் இருக்கிறார்கள். செல்லமாக ஸ்கின்னி பாய் என்று அழைக்கிறோம். அவர் உலகத்தையே ஆட வைக்கிறார். எனக்கு யாரை பிடிக்கும் என கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு இந்த தலைமுறையில் அனிருத்தை சொல்வேன். அவருடன் விரைவில் படம் பண்ண உள்ளேன். அதற்கு ஆவலாக உள்ளேன். கண்டிப்பாக அது ஒரு மேஜிக்கை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்" என்றார்.