தமிழ் ஸ்டுடியோ அமைப்பு ஒருங்கிணைத்த விசிக தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், நடிகரும், தமிழ்நாடு அரசு திரைப்பட கல்லூரியின் தலைவருமான ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கலை விழாவில் பங்கேற்ற ஆவண மற்றும் குறும்படங்களின் இயக்குனர்களுக்கு சான்றிதழை வழங்கினார்.
அதனை பிறகு இவ்விழாவில் பேசிய வெற்றிமாறன், “திருமாவளவன் மிகவும் எளிமையான மனிதர். அசுரன் படத்தை எடுப்பதற்கு முன்பு, திருமாவளவனை நேரில் சந்தித்து, இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதில் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று கேட்டேன். அதற்கு, 'தனி மனிதனால் ஒரு சமூகத்திற்கு தீர்வு வருகிறது மாதிரி படத்தை எடுக்காதீர்கள். தொடர்ந்து சினிமாவில் நீங்கள் அதே தவறை தான் செய்கிறீர்கள். அதை மாற்றி ஒரு அமைப்பால் தீர்வு கிடைப்பது போல் பண்ணுங்க' என்றார். ஆனால் அசுரன் படம் வெளியானபோது அதே குற்றச்சாட்டை வைத்தார். சில விஷயங்கள் தவிர்க்க முடியாமல் நடந்து விடுகிறது.
கலை என்பது அரசியல். இலக்கியம், சினிமா எல்லாமே அவர்கள் கையில்தான் இருந்தது. அதனை திராவிட இயக்கம் அவர்களின் கையில் இருந்து எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு ஒரு மதசார்பற்ற மாநிலமாகவும், பல வெளிப்புற சக்திகளை எதிர்க்கும் பக்குவத்துடன் இருக்கிறது என நினைக்கிறேன். சினிமா வெகுமக்களை மிக எளிதில் சென்றடையக்கூடிய ஒரு கலை வடிவம். சினிமாவை அரசியல் வடிவமாக்குவது மிகவும் முக்கியமான ஒன்று. திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுத்த பிறகு கலை கலைக்காகத்தான், இது மக்களுக்கானது அல்ல என்று நிறைய பேசினார்கள். மக்களுக்காகத்தான் கலை, மக்களை சரியாக பிரதிபலிப்பதுதான் கலை. அப்படிப்பட்ட கலையை நாம் இன்றைக்கு சரியாக கையாள வேண்டும். அப்படி கையாள தவறிவிட்டால், எப்படி வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கிறார்களோ, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நம்முடைய அடையாளங்கள் பறிக்கப்படுகிறதோ அதே போன்று சினிமாவில் ஒரு நாள் நிச்சயம் நடக்கும். நம்முடைய அடையாளங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். விடுதலைக்காக போராட வேண்டும். என்னால் முடிந்த வரை பங்களிப்பை கொடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.