
விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம் ‘கிங்டம்’. இது அவரின் 12வது படமாக உருவாகியுள்ள நிலையில் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் டீசர் படம் வெளியாகவுள்ள மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் தமிழ் டீசருக்கு சூர்யாவும், தெலுங்கு டீசருக்கு ஜூனியர் என்.டி.ஆரும், இந்தி டீசருக்கு ரன்பீர் கபூரும் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். டீசரை பார்க்கையில், இப்படம் விடுதலைக்காக் போராடும் மக்கள் மற்றும் அவர்களை ஆளும் அரசாங்கம் இருவருகளுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளதாக தெரிகிறது. அதற்கேற்ப, ‘முடிவில்லா ஒரு யுத்தம். அனையில்லா ஆராய் இரத்தம். புலம் பெயர்ந்தாலும் புஜம் அயர்ந்தாலும் இந்த யுத்தம் என்றும் நிற்காதே’, ‘ஏன் இந்த அழிவு, யாருக்காக இந்த அச்சம்’ என சூர்யா பேசும் வசனம் அமைந்துள்ளது.
இப்படம் மே 30ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபகாலமாக விஜய் தேவரக்கொண்டா நடித்த படங்கள் தொடர்ந்து கலவையான விமர்சனத்தை பெற்று வருவதால் இப்படத்தை விஜய் தேவரக்கொண்டா பெரிதும் நம்பியிருப்பதாக டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.