தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு படங்களும் நல்ல வசூலை ஈட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது. இதில் வாரிசு கலவையான விமர்சனத்தையே பெற்று வந்தாலும் ரூ.210 கோடி வசூலித்துள்ளது. மறுபுறம் துணிவு வசூல் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் படக்குழு இன்னும் வெளியிடாத நிலையில் விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியான இப்படங்கள் சிறப்பு காட்சிகளாக நள்ளிரவு 1 மணி (துணிவு) 4 மணி (வாரிசு) பெரும்பாலான இடங்களில் திரையிடப்பட்டன. அந்த வகையில் கோவையில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் காட்டூர், பீளமேடு உள்ளிட்ட 8 இடங்களில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளதாக கூறி அதற்கான விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 6 திரையரங்குகளைச் சேர்ந்த மேலாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் மதுரை மாவட்ட ஆட்சியரும் அங்குள்ள 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.