நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி கடந்த சில மாதங்களாகப் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இத்தகைய சூழலில் தான், 24ஹெச் துபாய் 2025, ஐரோப்பியன் 24ஹெச், போர்சே 992 ஜிடி3 கார் ஆகிய பந்தயங்களில் அஜித் மற்றும் அவரது அணி போட்டியிடுகிறது. அதன்படி முதலாவதாகத் துபாயில் நேற்று முன்தினம் (11.01.2025) முதல் நடைபெற்று வரும் 24ஹெச் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டார்.
அந்த வகையில் துபாயில் நேற்று (12.01.2025) நடைபெற்ற 24 ஹெச் ரேஸில் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி 992 போர்ஷே பிரிவில் 3ஆவது இடம் பிடித்தது. இதனால், அஜித்குமார் மிகுந்த மகிழ்ச்சியோடு தனது வெற்றியைக் கொண்டாடி வருகிறார். மேலும், அங்கு இந்தியத் தேசியக் கொடியை ஏந்தியவாறு தனது கொண்டாட்டத்தைப் பதிவு செய்தார். அஜித்குமாரின் இந்த வெற்றிக்கு, திரைப் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கார் ரேஸ் நிகழ்வுக்குப் பிறகு நடிகர் அஜித் குமார், துபாய் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், “சமூக வலைத்தளங்கள் தற்போது டாக்சிக் (TOXIC) ஆக உள்ளது. வாழ்க்கை மிகவும் சிறிது. ஏன் இவ்வளவு டாக்சிக் ஆக இருக்கவேண்டும்?. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்காதீர்கள். உங்கள் வாழ்வில் கவனம் செலுத்துங்கள். அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?. உங்கள் அன்பிற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். ஆனால் தயவுசெய்து உங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்ளுங்கள். எனது ரசிகர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் நானும் சந்தோஷமாக இருப்பேன். நான் மிகவும் மகிழ்ச்சியான மனிதன். அதேவேளை ரசிகர்களும் தங்களுடைய வாழ்க்கையில் சிறப்பாக இருக்க வேண்டும்” எனப் பேசியுள்ளார்.