வி.பி.எஃப் கட்டணம் தொடர்பான எங்களது கோரிக்கைகளுக்கு ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்காவிட்டால் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என அத்தயாரிப்பு சங்கத்தின் தலைவரான டி.ராஜேந்தர் எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி புதிய தலைவராகப் பொறுப்பேற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த டி.ராஜேந்தர் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை உருவாக்கி, அச்சங்கத்திற்கான ஆதரவைத் திரட்டி வருகிறார்.
இந்த நிலையில், இந்த சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், வட இந்திய கம்பெனிகளுக்கு வி.பி.எஃப் கட்டணம் வாங்கிக் கொள்ளாமலேயே படத்தைத் திரையிடும் போது தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடம் மட்டும் வி.பி.எஃப் வசூலிப்பது நியாயமானதாகத் தெரியவில்லை என கண்டிக்கப்பட்டதோடு, வி.பி.எஃப் கட்டணம் தொடர்பான மூன்று முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், ஒரு வார காலத்திற்குள் இதற்கு சரியான பதிலளிக்கவில்லையென்றால் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.