பாலிவுட்டின் முன்னணி நடிகரான சைஃப் அலி கான் மும்பை பாந்த்ரா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் அவரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். அவரது இல்லத்தில் இன்று நள்ளிரவு 2.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். அவர் திருட சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவரை பார்த்ததும் சைஃப் அலி கான் அவருடன் சண்டையிட, அதில் அந்த மர்ம நபர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திவிட்டு சென்றுள்ளார்.
பின்பு படுகாயமடைந்த சைஃப் அலி கான் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அந்த தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “சைஃப் அலி கான் ஆறு இடங்களில் குத்தப்பட்டுள்ளார். அதில் இரண்டு இடங்களில் ஆழமாக கத்திகுத்து இறங்கியுள்ளது. இதில் ஒன்று முதுகு தண்டுவடத்தின் அருகே இருக்கிறது. அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மும்பை போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சைஃப் அலி கான் உடல் நிலை குறித்து அவரது தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் தற்போது அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.