திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது, ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருது மார்ச் 2ஆம் தேதி அமெரிக்கா லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இறுதிசெய்யப்பட்ட நாமினேஷன் பட்டியல் வருகிற 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் வரலாறு காணாத காட்டுத்தீ பரவி நாட்டையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்டுத்தீயில் சிக்கி 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, காட்டுத்தீ காரணமாக கலிபோர்னியா மாகாண அரசாங்கம் அங்கு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. சுமார் 27,000 ஏக்கர் பரப்பளவில் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் தீயை அணைக்க, தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். இதன் காரணமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா ரத்து செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் 96 வருட வரலாற்றில் முதன் முறையாக ஆஸ்கர் விழா ரத்து செய்யப்படவுள்ளதாகவும் இதற்காக ஒரு குழு விவாதித்து வருவதாகவும் கூறப்பட்டது.
அதே வேளையில் ஆஸ்கர் விருது விழா ரத்து செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் விழா நடக்குமா என்ற கேள்வி இருந்து வருகிறது. விரைவில் ஆஸ்கர் குழு இது குறித்து விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.