![Singapore Salon movie Review](http://image.nakkheeran.in/cdn/farfuture/5S_ZuBMT6ZoAPiAEV6KQoh3Zckw9477AIbRQMpJ7CUY/1706265471/sites/default/files/inline-images/singapore-art_2.png)
கிரிக்கெட் கமெண்டரியில் கலக்கிக் கொண்டிருக்கும் ஆர்.ஜே. பாலாஜி அவ்வப்போது கிடைக்கும் கேப்புகளில் படங்களிலும் நாயகனாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் சமீப காலங்களாக வெளிவந்த படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் தற்போது கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் படத்தில் நாயகனாக களம் இறங்கி இருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி. இந்தப் படம் இவரின் முந்தைய படங்கள் பெற்ற வரவேற்பைப் பெற்றதா இல்லையா?
தங்கள் கிராமத்தில் சிங்கப்பூர் சலூன் வைத்திருக்கும் லால், அங்கிருக்கும் மக்களை தன் வித்தையால் முடி திருத்தம் செய்து அழகாக மாற்றுகிறார். இதை சிறு வயது முதலே நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் ஆர்.ஜே. பாலாஜிக்கு தானும் ஒரு மிகப்பெரிய ஹேர் ஸ்டைலிஸ்டாக மாற வேண்டும் என எண்ணம் தோன்றுகிறது. இதற்காக முயற்சி செய்யும் அவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு படிப்படியாக முடி திருத்தம் செய்யும் கடைகளில் வேலை செய்து தொழிலைக் கற்றுக்கொண்டு பின் சொந்தமாக ஒரு சலூன் கடையை நகரத்தில் அமைக்கிறார். வாழ்க்கையில் எல்லாம் சரியாக போய்க்கொண்டிருக்க, புதிய சலூன் கடையும் அமைத்த ஆர்.ஜே. பாலாஜியின் கடை திறப்பதற்கு முன்பே சலூனை திறக்கவிடாமல் மிகப்பெரிய தடை ஏற்படுகிறது. அது என்ன தடை? அந்த தடைக் கற்களை ஆர்.ஜே. பாலாஜி உடைத்தாரா இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் கொடுத்த வெற்றியை மீண்டும் பெறுவதற்கு இரண்டு மூன்று படங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கும் இயக்குநர் கோகுல், இந்தப் படம் மூலம் அதை மீண்டும் மீட்டெடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஒரு கமர்சியல் படத்திற்கான அத்தனை டெம்ப்லேட்டுகளும் இப்படத்திலும் அமைந்து அவை சற்று ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. குறிப்பாக படத்தின் முதல் பாதி கலகலப்பாகவும் ஜனரஞ்சக படமாகவும் வேகமாக நகர்ந்து பார்ப்பவர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதி சலூன் கதையிலிருந்து சற்றே விலகி பல்வேறு கருத்துக்கள் இடையே பயணித்து போராட்டம், போட்டி, நெகிழ்ச்சி என வேறு ரூட்டில் பயணித்து ஒரு பீல் குட் படமாக முடிந்துள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி வழக்கமான ரூட்டில் நடிப்பு வசனம் எனப் பேசாமல் இப்படத்தில் நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் இருப்பதால் அதற்கேற்றார் போல் டீசன்டான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் வசனங்களைக் காட்டிலும் உணர்ச்சிகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் தரும்படியான இவரின் கதாபாத்திர அமைப்பு அமைந்திருப்பதால், அதற்கு ஏற்றார்போல் நடித்து சில இடங்களில் கலங்கடிக்கவும் செய்திருக்கிறார். மற்றபடி கதை தேர்வில் இவர் சற்று கவனமாக இருந்திருக்கலாம். படத்தின் நாயகி மீனாட்சி சௌத்ரி வழக்கமான நாயகி என்ன செய்வாரோ அதையே அவரும் செய்துவிட்டு சென்றிருக்கிறார். அவருக்கு படத்தில் பெரியதாக ஸ்கோப் இல்லை. தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். படத்தின் முக்கியமான இன்னொரு ஹீரோவாக பார்க்கப்படுவது சத்யராஜ் கதாபாத்திரம். முதல் பாதியில் இவர் தோன்றும் பார் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார். இவரது டைமிங் ரைமிங் காமெடி அந்த காட்சியை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று தியேட்டரில் கைதட்டல்களைப் பெற்றிருக்கிறது. இந்த ஒரு காட்சி படத்தின் முதல் பாதி முழுவதையும் தாங்கிப் பிடித்திருக்கிறது.
அதேபோல் படம் முழுவதும் தன்னுடைய வழக்கமான பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தை தூண் போல் தாங்கிப் பிடித்திருக்கிறார். படத்தின் இன்னொரு நாயகி ஆன் ஷீத்தல். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். காமெடிக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர், சத்யராஜுடன் இணைந்து கலகலப்பூட்டி இருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி நண்பராக வரும் கிஷன் தாஸ், தனது பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் சத்யராஜ் உடன் சேர்ந்துகொண்டு கலகலப்பை கூட்டி இருக்கிறார் ஒய்.ஜி. மகேந்திரன். ஃபார்மல் வில்லனாக வரும் ஜான் விஜய் தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வரும் லால் தனது அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்து நெகிழ்ச்சியை கொடுத்திருக்கிறார்.
விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் சுமார். ஜாவித் ரியாசின் பின்னணி இசை ஓகே. சுகுமார் ஒளிப்பதிவில் கிராமம் சம்பந்தப்பட்ட காட்சிகளும், சலூன் உட்புறம் உள்ள காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்திற்கு சிங்கப்பூர் சலூன் எனப் பெயர் வைத்துவிட்டு ஒரு சலூன் வைக்க போராடும் ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட் படும் கஷ்டங்களை காட்டாமல் அந்த சலூன் வைப்பதற்கான மேம்போக்கான பிரச்சனைகளை எடுத்துக் கொண்ட திரைப்படம் கதையிலிருந்து சற்றே விலகி இருப்பது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்திருந்தாலும் படத்தின் போக்கு மற்றும் கிளைமாக்ஸில் வரும் நெகிழ்ச்சியான காட்சிகள் படத்துடன் நம்மை சற்று ஒன்ற வைத்திருக்கிறது.
சிங்கப்பூர் சலூன் - விண்டேஜ் கட்டிங்!