ஷாந்தனு பாக்யராஜ், ஆனந்தி, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இராவண கோட்டம்'. கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 12 ஆம் தேதி (12.05.2023) வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.
நடிகை கயல் ஆனந்தி பேசுகையில், “3 வருட உழைப்பு. பல தடைகளைத் தாண்டி இந்தப் படம் இப்போது வெளியாகத் தயாராகி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. யாரும் விட்டுக் கொடுக்காமல் இந்தப் படத்திற்கு உழைத்துள்ளோம். விக்ரம் சுகுமாரன் சார் சினிமாவை மிகவும் ரசித்து வேலை செய்பவர். அவருடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஷாந்தனு உடன் இணைந்து நடித்தது மிகவும் சுலபமாக இருந்தது. இந்தப் படம் ராம்நாடு மக்களின் வாழ்க்கை பற்றிப் பேசுவதாக இருக்கும்” என்றார்.
நடிகர் ஷாந்தனு பேசுகையில், "இப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணன், என் தந்தை எனக்கு என்ன செய்ய வேண்டும் என நினைப்பாரோ அதே போல் நான் முன்னேறத் தேவையான அனைத்தையும் செய்தார். அவருக்கு மிகப்பெரும் நன்றி. இந்தப்படம் சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிற படமாக இருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகரைத் தாண்டி, தயாரிப்பு பணிகளும் நான் பார்க்க வேண்டி இருந்தது. தயாரிப்பு மிகக் கடினமான வேலை; மிகவும் சிரமப்பட்டேன். படக்குழுவிற்கு நிறைய அனுபவம் இருந்தது. அனைவரும் இப்படத்திற்காகப் பல நாட்கள் தூங்காமல் வேலை செய்தனர். இந்த நான்கு வருடங்கள் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். படம் பார்த்த பிறகு எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது. கிராமத்துப் பையனாக நடிக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல; காலில் இரத்தம் வர நடித்தேன். எந்த படத்திலும் நான் இதைச் செய்ததில்லை. நான் மட்டும் இல்லை அனைவரும் இது போல கஷ்டப்பட்டு தான் நடித்தனர். இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர்" என்றார்.
இயக்குநர் விக்ரம் சுகுமாரன் பேசுகையில், "இந்தப் படத்தில் நான் சிரித்துக் கூட பேசவில்லை. அது கொஞ்சம் குற்ற உணர்வாக இருக்கிறது. இருந்தும் யாரும் என்னை விட்டுக் கொடுக்காமல் பேசினார்கள். அனைவருக்கும் நன்றி. இளவரசன் அண்ணனை 15 வருடங்களுக்கு முன்னதாகவே என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்து விட்டேன். இந்தப் படத்தில் அவரை நடிக்க வைத்தது எனக்கு மிகப் பெருமையான விஷயம். நான் ஒரு பிடிவாதமான இயக்குநர். யாரிடமும் இரக்கம் காட்டவில்லை அதற்காக நன்றியும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இனிமேலும் அப்படித்தான் இருப்பேன் அதுதான் என் பாவனை. எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு அது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்தப் படம் மிகப்பெரிய நெருக்கடியில் தான் உருவானது. அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி" என்றார்.