கடந்த பொங்கலை முன்னிட்டு விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு படம் வெளியானது. இத்திரைப்படம் சென்னை ரோகிணி திரையரங்கில் கடந்த ஜனவரி 11ம் தேதி அதிகாலை காட்சி திரையிடப்பட்டதாகக் கூறி 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார் சென்னை மாநகரக் காவல் ஆணையர்.
இந்த உத்தரவை எதிர்த்து ரோகிணி திரையரங்கு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதில், கடந்த ஜனவரி 11ம் தேதி அதிகாலை 1 மணிக்கும், 4 மணிக்கும் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்த முறையான விசாரணையும் நடத்தாமல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் கடைகள் மற்றும் நிறுவன சட்டத்தின் கீழ் திரையரங்குகளை 24 மணி நேரமும் திரையிட முடியும் என்கிற அடிப்படையிலேயே அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை சார்பில், கடைகள் மற்றும் நிறுவன சட்டத்தின் கீழ் திரையரங்குகளில் சினிமா காட்சிகளைத் திரையிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. இரு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் ரோகிணி திரையரங்கு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தது.