தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிலையில், அதில் ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர்களுடன் பணியாற்றப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்பு நடிகர் சங்கத்துடன் கடந்த ஜூலை மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தி தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்காத நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. அதில், தனுஷ், அமலா பால், லட்சுமி ராய் உள்ளிட்ட 14 நடிகர், நடிகைகள் மீது ரெட் கார்டு கொடுக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று (14.09.2023) நடைபெற்றது. இதில் தனுஷ், விஷால், சிம்பு, அதர்வா உள்ளிட்ட 4 நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனுஷ், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தயாரித்த படத்தில், 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த போது படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குறிப்பிட்டு அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது. விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது சங்க பணத்தை முறையாக கையாளாதது தொடர்பாக ரெட் கார்ட் அளிக்கப்பட்டது.
சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஏற்கனவே பலமுறை புகார் அளித்த நிலையில் பின்பு தீர்வு காண பேச்சு வார்த்தை நடந்தது. அதிலும் தீர்வு காண முடியாததால் அந்த பிரச்சினையை மேற்கோள்காட்டி அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது. அதர்வாவுக்கு, தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.