'நீலம் புரொடக்ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இவரது இசையில் ‘ரெயிலின் ஒலிகள்...’, ‘அரக்கோணம்’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ட்ரைலரும் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பா. ரஞ்சித், அசோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் எனப் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “இன்று ராமர் கோவில் திறப்பு நடந்து கொண்டு வருகிறது. அதையொட்டி பின்னாடி நடக்கிற மத அரசியலை நாம் கவனிக்க வேண்டும். இந்த கோவிலின் திறப்புக்கு ஆதரவு எதிர்ப்பு, இதையெல்லாம் தாண்டி, இது போன்ற நிகழ்வு நடக்ககூடாது என்று நினைப்பதே ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது. மதச்சார்பின்மையாக இருக்கும் இந்தியா, எதை நோக்கி நகர்ந்து போகிறது என்ற கேள்வி வருகிறது.
கோவில் கூடாது என்பது நம்முடைய பிரச்சனை இல்லை. பராசக்த்தி படத்தில் கூட ஒரு முக்கியமான வசனம் வரும். கொடியவர்களின் கூடாரமாக கோவில் மாறிவிடக் கூடாது. அது தான் நம்முடைய கவலை. இவ்ளோ பெரிய கோவில் திறப்பது, கடவுளின் நம்பிக்கையின் அடிப்படையில் பார்க்கலாம். ஆனால் அது அரசியலாக்கப்படுவது தான் இங்கு ஒரு பெரிய சிக்கல். ரஜினி அயோத்திக்குப் போனது, அவருடைய விருப்பம். இது போன்ற விஷயங்களில் அவருடைய கருத்தை ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். அவருடைய கருத்துப்படி 500 ஆண்டுகள் பிரச்சனைகள் தீர்ந்துள்ளதாக சொல்கிறார். ஆனால், அந்த பிரச்சனைக்கு பின்னால் இருக்கக் கூடிய அரசியலை கேள்வி கேட்க வேண்டியிருக்கு. தப்பு சரி என்பதைத் தாண்டி, அவரது கருத்தில் எனக்கு விமர்சனம் இருக்கு” என்றார்.