தனுஷ் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தமிழில் 'வாத்தி' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாகவம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் பிறகு அனைத்து பாடல்களும் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தன. இப்படம் வருகிற 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் நிலையில் ட்ரைலர் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் தனுஷ், சம்யுக்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். அப்போது தனுஷ் பேசுகையில், "எனக்கு தெலுங்கு தெரியாது. கொஞ்சம் கொஞ்சம் அர்த்தம் புரியும். ஆனால் முழுசாக தெரியாது. இந்த படம் எனக்கு ஸ்பெஷல். என்னுடைய முதல் நேரடி தெலுங்கு படம். முன்னாடி பாத்தீங்கன்னா, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என தனித்தனியே சினிமா இருந்தது. இப்போது எல்லாரும் எல்லா சினிமாவையும் பார்க்கிறோம். அதனால் இந்திய சினிமா துறையாக மாறியிருக்கிறது.
நீங்க எல்லாரும் தமிழ் படம் பாக்குறீங்க, நாங்க எல்லாம் தெலுங்கு படம் பாக்குறோம். இந்த மாற்றம் ரொம்ப அழகாக இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு எல்லையில் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. இரண்டு மாநிலங்களின் கலாச்சாரம், மொழி ஆகியவை கலந்து இருந்தது. அதை பார்க்கும் போது அழகாக இருந்தது. நாம் எவ்வளவு பக்கத்தில் இருக்கிறோம் என புரிந்தது" என்றார்.
பின்பு ரசிகர்கள் வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் 'அமுல் பேபி' வசனத்தை பேச சொல்லி கூச்சலிட்டனர். அதற்கு தனுஷ் தமிழில் தான் சொல்ல வரும் என கூறி அந்த வசனத்தை தமிழில் பேசி காண்பித்தார்.